There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
சீவனின் பருவுடல், பஞ்ச பூதங்களின் இணைந்து இயங்கும் நுண்மையான சிற்றறைகளின் முறையான தொடரியக்கம். இந்தப் பருவுடலில் நுண்ணுடல் எனும் விண்துகள்கள் சுழன்றோடிக் கொண்டிருக்கின்றன. இதுவே சூக்கும சரீரம் (Astral body). சூக்குமத்தில் உள்ள ஒவ்வொரு விண்ணும் விரைவாகச் சுழன்று கொண்டிருப்பதால் அதைச் சுற்றிலும் அமைந்துள்ள இருப்பு நிலையான இறைவெளியில் உராய்கின்றது. அதிலிருந்து ஒரு விரிவலை ஏற்படுகின்றது. சீவனின் பருவுடலில் இந்த விரிவலைகளின் தொகுப்புதான் சீவகாந்த ஆற்றல். எனவே ஒரு சீவனின் இயக்கம் பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் என்னும் (Physical, Astral and causal bodies) மூன்றும் ஒன்றிணைந்த இயக்க நிலையம் ஆகும்.
பரு உடலில் நுண்ணுடல் விரைவாக சுழன்றோடிக் கொண்டிருக்கிறது. நுண்ணுடலைவிட காந்த உடல் மிக விரைவாக காந்த அலையாகச் சுழன்று கொண்டிருக்கிறது. இதனால் காந்த அலையின் மைய ஈர்ப்புத் திரட்சி (Vortex) ஏற்பட்டு சீவனின் உடல் மையத்தில் இடம் பெறுகிறது. காந்தச் சுழலைவிட விரைவு குறைவாக இருக்கும் சூக்கும உடலும், காந்த ஆற்றல் மையச் சுழலால் ஈர்க்கப்பட்டு அதே இடத்தில் மையம் கொண்டு உடல் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறது.
பருவுடல் உற்பத்திக் காரணமாக வித்தும் (Sexual vital Fluid) அதே இடத்தில் ஈர்க்கப்பட்டு மையம் கொள்கிறது. சீவகாந்த மையம், சூக்கும சரீர மையம், வித்து மையம் மூன்றும் இணைந்து, ஒன்றை மற்றொன்று காத்தும், ஒன்றுக்கு மற்றது உதவியும் இயங்கும் ஒரு இயற்கை நீதியே கருமையம் ஆகும்.
கர்மேந்திரியங்களான கை, கால், வாய், குதம், பால்குறி இவற்றாலும், ஞானேந்திரியங்களான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவற்றாலும், மனத்தாலும் ஆற்றும் செயல்கள் அனைத்திலும் விளையும் அசைவுகள் சீவகாந்தக் களத்தில் அலைத்திவலைகளை ஏற்படுத்த அவையனைத்தையும் கருமையம் ஈர்த்துச் சுருக்கி பதிவுகளாக்கிக் கொள்கிறது. அவ்வப்போது இப்பதிவுகள் சீவகாந்த அலையாய் மூளை செல்களில் மோதும் போது அவையனைத்தும் தன் சுருங்கிய நிலையிலிருந்து விரிந்து அலைக்காட்சிகளாக, எண்ணங்களாக மலர்கின்றன. மூளை செல்களின் இயக்கங்களுக்கேற்ப சீவகாந்த ஆற்றல் தொடர்பால் உடல் செல்கள் செயல்படும் போது, செயல்களும் அவைகளின் (இன்ப, துன்ப) விளைவுகளும் உண்டாகின்றன. விளைவுகளும் கூட கருமையத்தில் பதிவாகி விடுகின்றன.
இவ்வாறு ஒரு சீவனின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் மன, உடல், இயக்கங்களும் அவற்றின் விளைவுகளும் கருமையத்தில் பதிவாகி வாழ்நாள் முழுவதும் செயலாற்றும் தரமாகவும், அறிவாட்சித்தரமாகவும் அமைகின்றன. கருமையம் தான் சீவன் எனப்படுகிறது. ஆன்மா எனப்படுகிறது. ஆண்-பெண் உடலுறவு கொள்ளும் போது வெளியாகும் விந்துநாதம் என்ற சீவசக்திக் குழம்பில் கருமையத்தில் அமைந்துள்ள வித்து, உயிர், காந்தம் மூன்றும் அன்று வரை பரிணாமத் தொடர்பாலும், தனிச் சிறப்பான செயல்களாலும் பெற்ற பதிவுகள் அனைத்தும் அலைத் திவலைகளாகச் சுருக்கம் பெற்று அடங்கியுள்ளன.
பிறகு விதையில் மரம் சுருங்கியிருந்து அது முளைக்கும் போது மரமாகப் பெருக்கமடைவது போல கருவளரும் போதும், பிறந்த பின் ஏற்படும் வளர்ச்சியிலும், வாழ்க்கை நிகழ்ச்சிகள் இவற்றிலும், சுருங்கி அமைந்திருந்த கருமைய வினைப்பதிவு காந்த அலைத்திவலைகள் விரிவு பெற்று அன்னை – தந்தை ஒருவர் ஒன்று சேர்ந்த காட்சியான உடலாக மலர்கின்றன. உடம்பில் ஓடும் காந்தச் சுழல் ஒடுக்கப்பட்டால் அந்த இடத்தில் உள்ள செல்களில் உள்ள துருவங்கள் சீர்குலைந்து காந்தம் மின் ஆற்றலாக மாறி மின்குறுக்கு (Short circuit) ஆகும். அதுவே வலியுணர்வாகும்.
அதே மின்குறுக்கு இடத்தால் அகன்று, காலத்தால் நீடித்தால் வியாதி உடலில் ஏற்படும். மின்குறுக்கு கருமையம் வரையில் சென்று கருமையத்தைத் தாக்கி, அங்கே மின்குறுக்கு ஏற்பட்டால் கருமையக் கூட்டமைப்பு உடைந்து போகும். வித்து வெளியேறிவிடும். அதன் பிறகு உயிரும் காந்த மையமும் அதுவரையில் பரிணாமத்தில் பெற்ற அனைத்துப் பதிவுகளோடு வெளியேறிவிடும். வித்து, உலகமாகிய மண்ணோடு நின்று விடுகிறது. காந்த மையமும், உயிர் மையமும் வெளியேறி காற்று மண்டலத்தில் மிதக்கிறது.
இதுவே உடலைவிட்டு வெளியேறிய ஆவியாகும். வினைப்பதிவுகள் அனைத்தும் உள்ளன. ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், மனம் இவை இயங்கக் கூடிய கருவிகளும் மூளையும் இல்லை. அதனால் பதிவுகளை வெளிக் காட்டும் படர்க்கை ஆற்றலான மனம் இல்லை. மீண்டும் இந்த ஆவி வேறு உடலில் புகுந்த பிறகு இந்தப் பதிவுகள் இயக்கத்திற்கு வரும்போது இன்பம், துன்பம் என்ற உணர்வுகள் உண்டாகும். இதுதான் கருமையத் தத்துவம், ஆன்மாவின் இரகசியம், வினைப்பதிவு, மறைபொருள். இந்த விஞ்ஞான காலத்தில் இந்தக் கருமைய இரகசிய விளக்க அறிவு, சிந்திக்கும் வயது வந்தவர்களுக்கு மிகவும் அவசியம்.
PHONE: +91 7904402887 / 04253-292746