There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால் எப்பொழுதும் பிறருக்கு உதவியே செய்ய வேண்டும். பிறரிடமிருந்து வாங்குவது என்பதே வேண்டாம். அவர்கள் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இன்னும் சமையல் ஆகவில்லை. மணியாகி விட்டது. இதற்கு மேல் போனால் பஸ் கிடைக்காது. “அம்மா நான் இன்று கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்கிறேன்; நீங்கள் சிரமப்பட வேண்டாம்” என்று மகிழ்ச்சியாகச் சொல்லிவிட்டுப் புறப்பட வேண்டும். அந்தப் பண்பாடு வரவர மறுநாள் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து செய்ய வேண்டிய கருத்து அவர்களுக்கு வந்துவிடும். அதை விட்டு விட்டு இங்கே சீறி விழ, அலுவலகம் போய் அங்கேயும் சிடுசிடுக்க, திரும்பி வந்தபோது குழந்தையையும் இந்தச் சச்சரவில் இழுத்துவிட இது எல்லாம் குடும்பத்தில் நடக்கின்ற நாடகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எல்லாம்வல்ல இறைவன் கணவன் மனைவி உறவுக்கு இடையில் எத்தனை ஆயிரம் மகிழ்ச்சியை வைத்து இருக்கிறான்! ஆனால் அத்தகைய மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ளாததனால், உயிருக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியாததனால், மகிழ்ச்சியை அனுபவிக்கத் தெரியாததனால், Psychology இன்னது என்று தெரியாமல், அதனுடைய விளைவை அறியாததனால் துன்பச் சூழலில் வாழ்கின்றோம். சிந்தனையை, ஊட்டி, அந்தச் சிந்தனையின் மூலமாக நான் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன, தவறான எண்ணத்தாலும், தவறான செய்கையாலும் என்ன விளைவுகள் வருகின்றன என்று தெரிந்து கொண்டு மனிதன் வாழத் தொடங்க வேண்டும்.
இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தனக்கு இருக்கின்ற தகுதி, வாய்ப்பு, வசதி இவற்றைக் கொண்டு பிறருக்கு இயன்ற வரை உதவி செய்வது ஆரம்பிப்பதாக இருந்தால் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும். இதற்கு ஒன்றும் கடன் வாங்க வேண்டியது இல்லை. இதைச் செயல்படுத்துவதற்கு எல்லாம் நம்மிடம் இருக்கிறது. இதன் பெயர்தான் “ஆன்மீக அறிவு”. ஆன்மாவினுடையதை அறிந்து, ஆன்மாவிற்கு மதிப்பளித்து, ஆன்மா, துன்பம் இல்லாமல் இருப்பதற்கும் ஆன்மாவை ஏற்கனவே உள்ள துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கும் இந்த உணர்வு ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால் அதற்குத்தான் “ஆன்மீக வாழ்வு” என்று பெயர். வேறு ஒன்றும் இல்லை.
பஜனை செய்வதாலேயோ, திவ்விய நாம சங்கீர்த்தனம் போடுவதாலோ ஆன்மீக அறிவு வந்து விடாது. ஒரு மாட்டைத் தொழுவத்தில் கட்டி வைத்திருக்கின்ற வரைக்கும் அது நம் வீட்டில் மேய்கிறது. அதைக் கட்டாமல் விட்டுவிட்டால் அண்டை வீட்டில் போய் மேய்கிறது. இதேபோல பஜனை செய்கிற நேரத்தில் இவனுடைய மனம் வேறு கெடுதல் செய்யாது இருக்கின்றதே அதுதான் கடவுளுக்கும் இவனுக்கும் உள்ள உறவு. அந்த பஜனை முடிந்த கணமே சுண்டலிலே தகராறு தொடங்கி போராட்டமாகவே உருவெடுக்கிறது. அதாவது அவிழ்த்து விடப்பட்ட மாடு எங்கேயோ ஒடுகிறது.
சிந்தனை செய்வது அவசியம் தானா? அது தேவைதானா? அப்படியென்றால் எப்படி அதைச் செய்ய வேண்டும்? என்றால் அது மிக மிக அவசியம். தேவை, அளவு முறை கண்டு வாழத் தெரிந்து கொண்டோமேயானால் உலகமே அமைதி நிலைக்கு வந்து விடும். இந்தத் தத்துவம் கடினமானதே அல்ல. முனைந்து பயின்றால் இயல்பாகிப் போகும். ஏற்கனவே உள்ள பழக்கப் பதிவுகளின் காரணமாக தொடக்கத்தில் கடினம் போலத் தோன்றும். மோட்டார் சைக்கிளை Start செய்வது போல, வண்டி ஓடத் தொடங்கி விட்டது என்று சொன்னால் Balance தானாக வந்துவிடும்.
PHONE: +91 7904402887 / 04253-292746