ஆன்மீக வாழ்விற்கு இராஜயோகப் பயிற்சி பற்றி வேதாதிரியாம்

உலகில் வாழும் உயிரினங்களிலே உருவ அமைப்பிலும், அறிவின் திறனிலும் சிறந்து விளங்குபவன் மனிதன். இயற்கை தனது இயல்பூக்கச் சிறப்பிலே ஓர் உயர்ந்த உயிரினமாக உருப்பெற்ற குறிப்பே மனிதனாகும். ஐயுணர்வுகளால் இயற்கையின் இரகசியங்களை உணர்ந்து, நிறைவு பெறும் ஆற்றல் மனிதனிடமே அமைந்துள்ளது. கருவின் மூலம் தொடர்பாக எண்ணிறந்த பிறவிகளைக் கடந்து அப்பிறவிகள் தோறும் பெற்ற அனுபவப்பதிவுகளைப் பெருநிதியாகக் கொண்டு வாழ்வைத் தொடங்குவன் மனிதனாகையால், மனிதன் அறிவு மேலும் மேலும் உயர்ந்து கொண்டே வருகிறது. எனினும் ஒவ்வொருவரும் பிறப்பின் தொடக்க காலத்தில் ஐயுணர்வின் மூலமே வாழவேண்டியுள்ளதால் புலன் கவர்ச்சியில் அறிவை இயக்கி, பழக்கப் பதிவுகளில், அறிவில் குறுகி, தனக்கும் பிறர்க்கும் பெரும்பாலோர் துன்பங்களைப் பெருக்கிக் கொள்கின்றனர்.

பேரியக்க மண்டலத்திலேயே பரமாணு முதல் பெரிய பெரிய சூரியன்களாக உள்ள நட்சத்திரங்கள் வரையில் எல்லாமே ஓர் ஒழுங்குமுறையில் ஒத்தும் உதவியும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் முழுமையோடு மனிதனை ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் உருவிலே மிக மிகச் சிறியவன். ஆனால் அவனிடம் அமைந்துள்ள ஆறாவது நிலையான சிந்தனையறிவாற்றலோ இயற்கையின் முழுமையை உணர்ந்து கொள்ளத் தகுந்த பேராற்றலாக விளங்குகிறது. 

இயற்கை நிகழ்ச்சிகளின் சிறப்பையும் மதிப்பையும் உணர்ந்து அவற்றின் இனிமை காத்து, செயலாற்றி வாழும் பண்பினால் தான் ஒரு மனிதன் எண்ணிறந்த மக்களுக்கும், நீண்ட காலத் தொடராக சமுதாயத்திற்கும் அறிவின் ஒளி காட்டி, செயலில் நலம் விளக்கி, தனது ஆறாவது அறிவின் சிறப்பின் மூலம் நலம் தரும் பயன் விளைவிக்க முடியும். பல மக்கள் இப்பேரறிவைப் பயன்படுத்தாமல், புலன் உணர்ச்சிகளிலே மயங்கி அறிவிலே குறுகி இயற்கையின் இனிமையை சீர்குலைத்து, எண்ணிறந்த மக்களுக்கும் நீண்ட கால தொடராக சமுதாயத்திற்கும் தீமை விளைவிக்கின்றனர்.

செயல் பழக்கமும் அறிவின் பெருக்கமுமே, மனிதனின் தரமாக தன்மையாக உள்ளதால், ஒவ்வொரு மனிதனும் தனது அறிவியக்கத்தைச் சீரமைத்துச் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு கடமையுணர்ந்து, ஆற்றி வாழ வேண்டியது இன்றியமையாதது ஆகும். அறிவைத் தனது அனுபவங்களாலும், நல்ல பல பெரியோர்களின் அறிவுரை கேட்டும் உயர்த்திக் கொண்டே இருப்பதும், எண்ணம், சொல், செயல்கள் மூலம் தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், மனத்துக்கும் நலமே அளிப்பதான வழியில் செயலாற்றி வாழ்வதும், மனித இன வாழ்வுக்கு மிக மிக அவசியமான முறையாகும். இதுவே ஆன்மீக வாழ்வாகும்.

ஆன்மீக வாழ்வு எனும் பண்பிலே பருப்பொருளுணர்வோடு நுண்பொருளுணர்வுகளையும் இணைத்து இழைந்து வாழ்வில் வளமும் நலமும் பெருகுகிறது. இதுவரையில் இத்துறையில் பெரும்பாலோர் போதிய அக்கறை செலுத்தவில்லை. இந்த அலட்சியத்தின் விளைவுகளே இன்று உலகில் மனித இன வாழ்வில் காணும் துன்பங்களும் சிக்கல்களுமாகும்.

பழக்கப் பதிவுகளாலும் புலன் மயக்கத்தாலும் வாழ்க்கைச் சிக்கல்களில் தவிக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னிலே ஒரு நல்ல திருப்பம் பெற்று உய்ய வேண்டும். பிறப்பின் நோக்கமறிந்து அதற்கு ஒத்த முறையில் வாழ்வைத் திருத்தி வாழ்ந்து, மகிழ்ச்சியும் அமைதியும் பெற வேண்டும். இத்தகைய திருப்பம் பெறுவதற்கு முறையான உளப்பயிற்சி வேண்டும். செயலொழுக்கப் பயிற்சியும் வேண்டும்.

மனிதனை ஒரு நல்ல மனிதனாக, சிறந்த மனிதனாக உருவாக்கும். மாற்றியமைக்கும் ஒரு அகத்தவச் சாதனையை யோகம் என்றும் மனவளக்கலை என்றும் வழங்குகிறோம். மனிதனுக்கு வாழ்வின் நலன்கள் அனைத்தும் அளித்தும் காத்தும் நிறைவளிக்கும் ஒரு அகத்தவப் பயிற்சியில் உயிர்மேல் மனம் வைத்துப் பழகுவதால் குண்டலினி யோகம் என்று அழைக்கிறோம். இப்பயிற்சியினால் அறிவைப் புலன் மயக்கிலிருந்து விடுபடச் செய்து அறிவால் புலன்களை ஆளும் திறன் பெறுவதால் இது இராஜயோகம் என்றும் கூறப்படுகின்றது.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746