There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
பண்பாட்டின் வளர்ச்சியில் கடவுளைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்த சிந்தனையால் கடவுளை மனிதன் உணர்ந்து கொண்டான். எனினும், இதை மனிதகுலத்தில் அனைவரும் உணரவில்லை. ஒரு சிலரே உணர்ந்தார்கள். அவர்கள் மூலம் பலரும் உணர்ந்து கொண்டே வருகின்றார்கள். இத்தகைய சிந்தனையாற்றல் உள்ள மனிதன் ஏன் வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்? இவ்வினாவுக்கு விடையாக இறையாற்றலே வேதாத்திரி மகரிஷி அவர்களை தேர்ந்து அவர்கள் மூலம் உணர்த்திய தெளிவுகள் தான் இங்கு ஐந்தொழுக்கப் பண்பாடு ஆகும்.
ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால் அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க நான்கு புறமும் சுற்றி மதிற்சுவர்களை எழுப்பிக் கொள்கிறோம். அதே போன்று இந்த மனித இனச் சீர்திருத்திய பண்பாடுகளானவை பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், நான்கு ‘மதில் சுவர்களை’ எழுப்பிக் கொள்கிறோம். அவை: போதைப்பொருள் உபயோகித்தல் கூடாது. மனிதனோடு மனிதன் போரிடுதல் கூடாது. பொய் கூடாது. சொல், உள்ளம், மனம் இந்த மூன்றுக்கும் பிளவு ஏற்படுகின்ற முறையில் அமையும் செயல்களை தான் பொய் என்று சொல்கிறோம். போதைப் பொருளும், பொய்யும் எந்த வகையிலும் மனித வாழ்வில் பழகிக் கொள்ளக்கூடாது.
மேலும் இயற்கை ஒன்று. அதனால் உற்பத்தியான உலகம், கடல், காற்று, வெயில் அனைத்தும் ஒன்றாக இருக்கின்றபோது இவற்றின் மீது தவறான உரிமை கொண்டு மனிதனை மனிதன் அழித்து வாழ்வின் வளம் இழக்கின்ற போர், எந்தக் காலத்திலும் மனித வாழ்வில் கூடாது. புகையிலை உபயோகிக்கக் கூடாது. உடல் உறுப்புக்களைக் கெடுக்கக் கூடியதும், பற்பல நோய்களை உருவாக்கக் கூடியதுமான புகையிலையை எந்த வகையிலும் உபயோகிக்கக் கூடாது. குறிப்பாகப் புகையாக உபயோகிப்பது அறவே கூடாது.
இவையெல்லாம் நாம் சீர்திருத்தமாகக் கொள்ளுகின்ற மனித இனப் பண்பாட்டையே, வாழ்க்கை நெறிமுறைகளையே கெடுத்து விடும். துன்பங்களைப் பெருக்கும். ஆகவே போதை, போர், பொய், புகை இந்த நான்கையும் ஒழிப்பதையும் நாம் ஏற்கவிருக்கின்ற சீர்திருத்தப் பண்பாடு என்ற அரண்மனைக்கு நான்கு பக்கமும் மதிற்சுவர்களாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஐந்தொழுக்கப் பண்பாடு எனும் கருத்துக்களை ஒவ்வொன்றாக ஒவ்வொரு ஒழுக்கமாக ஆராய்வோம்.
முதல் ஒழுக்கம்: மனிதன் தேவையை முடித்துக் கொள்வதற்கு அவன் உழைப்பின் மூலமே வருவாயைப் பெற வேண்டும். அதைக் கொண்டே வாழ வேண்டும். இல்லாவிடில் ஒவ்வொருவர் தேவையை முடிப்பதற்குப் பிறர் உழைப்பின் பயனாக உள்ள பொருள் மீது மனம் செலுத்தவோ, அதைப் பறிக்கவோ வேண்டியிருக்கும். ஆகையால், அறிவாலும் உடல் உழைப்பாலும் ஒவ்வொருவரும் பெறுகின்ற ஊதியத்தைக் கொண்டே மனிதன் வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால் பிறர் ஊதியத்தை எதிர்பார்த்து வாழ்வது, பிறர் உழைப்பைப் பயன்படுத்தி வாழ்வது போன்ற நிலைகள் உருவாகி மனித வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தும். விலங்கினங்களெல்லாம் ஏன் ஒன்றை ஒன்று வன்முறையில் கொன்று வாழ்கின்றன என்று ஆராய்ந்தால் ஒரு உண்மை தெளிவாகும். விலங்கினத்திற்குத் தங்கள் உழைப்பால் தங்களது உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியாது. இதனால்தான் தேவை அறிந்து, அதை முடிக்க நேர்மையான வழி இல்லாமல் பிற உயிரை வதைத்து, துன்புறுத்தி அவை வாழ்கின்றன.
இத்தகைய வாழ்க்கை முறையானது, கூட்டு வாழ்க்கையின் மூலமாகத் தனது பண்பாட்டை உயர்த்திக் கொள்ளுகின்ற மனிதனுக்குப் பொருந்தாது. எனவே, தனது அறிவின் ஆராய்ச்சியினாலும், உடல் உழைப்பாலும் பெறக் கூடிய ஊதியத்தை வைத்துக் கொண்டே வாழ வேண்டியது மனித இனப் பண்பாட்டுக்கு மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு தன் உழைப்பால் பொருள் ஈட்டுவதும், அதைக் கொண்டு தான் வாழ்வதும், பிறருக்கு உதவுவதும்தான் மனித குலத்திற்கொத்த நீதியாகும். பேரறிஞர் வள்ளுவர் இதே கருத்தை ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவன்றி ஊதியமில்லை உயிர்க்கு’ என்று கூறியுள்ளார். எனவே தன் உழைப்பின் பயனைக் கொண்டே வாழ்வது மனித இனப் பண்பாட்டில் முதன்மையாகும். இதனையே பண்பாட்டின் வரிசையில் முதன்மையாக வைத்துப் பண்பாடு எண் ஒன்று என்று மகரிஷி கூறியிருக்கிறார்.
இரண்டாவது ஒழுக்கம்: மனிதமனம் என்பது இறைநிலையும், அதில் தோன்றும் காந்த அலையுமேயாகும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உடலாலோ, மனத்தாலோ வருந்தச் செய்வது அந்த இறைநிலைக்கே நாம் செய்கின்ற பழிச்செயலாகும். எனவே இந்த ஆராய்ச்சி அறிவில் கண்ட தெளிவில் இருந்து விலகிப் பிறர் உடலுக்கும், மனதுக்கும் துன்பமளிப்பது கூடாது என்பது இந்த ஐந்தொழுக்கப் பண்பாட்டில் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஒழுக்கம்: உயிர்க்கொலையின் மூலமே வாழக் கூடியவை விலங்கினம். உணவு உற்பத்தி செய்து உண்டு வாழக் கூடிய வாழ்வின் திறம் மனிதனுக்கு வந்துவிட்ட பிறகு, எந்த உயிரினத்தையும் உணவுக்காகக் கொல்லக் கூடாது. மூன்றாவதாக இவ்வொழுக்கம் வைக்கப்பட்டுள்ளது.
நான்காவது ஒழுக்கம்: பிறருக்கு உரிமையானப் பொருளையும், அவருடைய வாழ்க்கைச் சுதந்திரத்தையும் ஒவ்வொருவரும் மதித்து வாழ வேண்டியது கூடி வாழும் பண்பாட்டைப் பின்பற்றி வாழுகின்ற மனிதனுடைய கடமையாகும். அந்த முறையில் பிறர் பொருளையும், வாழ்க்கைச் சுதந்திரத்தையும் போற்றிக் காக்க வேண்டும் என்பதையே நான்காவது திட்டமாக ‘பிறர்பொருளை வாழ்க்கைச் சுதந்திரத்தைப் போற்றிக் காத்தல்’ என்று வைத்துள்ளோம்.
முடிந்த வரையில் பிறர்படுகின்ற துன்பத்தைக் குறைத்து இன்பமாக அவர்களை வாழச் செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகும். இதுதான் ‘பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்’ என்ற வரியாக இக்கவியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே,
1) தனது உழைப்பாலேயே, அதன் பலனைக் கொண்டே மனிதன் வாழ வேண்டியது.
2) பிறருடைய மனதையும் உடலையும் வருத்தாமலேயே தானும் வாழுகின்ற மதிப்புடைய வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவது
3) உணவுக்காக பிற உயிர்களைக் கொல்லாது இருப்பது
4) பிறர் பொருளையும், வாழ்க்கைச் சுதந்திரத்தையும் தக்க மதிப்பளித்துக் காத்து ஒவ்வொருவருவம் வாழ்வது, பிறரையும் வாழ விடுவது
5) இயன்ற வரையில் பிறர் துன்பத்தை நமது உழைப்பு மற்றும் பொருளால் துடைத்து இனிமையை வளர்க்க வேண்டியது.
ஆக, இவ்வைந்தொழுக்கப் பண்பாட்டை எந்த நாட்டிலும், எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும் மனித குலம் எளிதாகப் பின்பற்ற முடியும். இவ்வாறு மனிதகுலம் ஐந்தொழுக்கப் பண்பாட்டைப் பின்பற்றி வாழ்ந்தால், மனித வாழ்வு எவ்வாறு அமையும் என்று பார்ப்போம். எல்லாரும் அமைதியாக மன நிறைவாக துன்பமற்ற இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இறைநிலை உணர்வோடும், அறநெறி பண்பாட்டோடும் வாழலாம்.
இறைநிலையானது இவ்வைந்தொழுக்கப் பண்பாட்டை உலக மக்கள் நன்மைக்காக வேதாத்திரி மகரிஷியின் அறிவின் மூலம் உணர்த்தி இருந்தாலும், இது மனித குலத்திற்குச் சொந்தமானது. தேவையானது. உரிமையானது. எனவே இதனை மனித சமுதாயத்திற்கே அர்ப்பணித்து வேதாத்திரி மகரிஷி அவர்தம் அளப்பரிய கடமையை நிறைவு செய்திருக்கிறார்கள். ஆகவே ஐந்தொழுக்கப் பண்பாட்டினை மதித்து போற்றி அனைவரும் வேதாத்திரியத்தின் தூதுவர்களாய் வாழ்வோம்! வாழ்க வளமுடன்!
PHONE: +91 7904402887 / 04253-292746