There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
தான் என்னும் அதிகாரப் பற்றும் தனது என்னும் பொருள் பற்றும் வினோதமான தம்பதியினர். அவர்களுக்குப் பிறக்கும் வேண்டாக் குழந்தைகள் ஆறு. முதல் குழந்தை பேராசை. எவ்வளவு தான் இருந்தாலும் அதற்கும் மேலே வேண்டும் என்ற பரபரப்பே அது. இது ஏன் வருகிறது என்றால், எல்லாம் வல்ல பரம்பொருள் அல்லவா நம் உள்ளே இயங்கிக் கொண்டிருக்கிறது? அந்த பரம்பொருள் எங்கே இருந்தாலும் விரிவடைந்து கொண்டே இருக்கின்ற தன்மை உடையது.
மனிதன் எண்ணத்திலே ‘இன்னும் வேண்டும்’ என்னும் போது தான் அந்த எண்ணமே பேராசையாக மாறுகிறது. ஆசைக்கு உரிய இடமாக உள்ள பரம்பொருளிடத்திலே எண்ணத்தைக் கொண்டு சேர்க்கும் வரையிலே, அது சிறு பொருளிடத்தில் தேங்குகின்ற காரணத்தால் பேராசையாக, (Inordinate Desire) அது அமையும். அந்த ஆசையை ஒழுங்குபடுத்தவில்லையானால், கட்டுக்கடங்காத ஆசை என்ற வகையிலே, யார் அல்லது எந்தப் பொருள் அதனைத் தடுத்தாலும் அல்லது தடுப்பதாகக் கற்பனை செய்து கொண்டாலும், ‘அந்தத் தiயை நீக்கி விட வேண்டும்’ ஒழித்து விட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது.
நம் உடலாற்றலை முழுவதுமாகச் செலுத்தி அந்தத் தடையை நீக்குவதற்கோ அல்லது அந்தப் பொருளை, மனிதரை, ஜீவனைத் துன்புறுத்துவதற்கோ, வருத்துவதற்கோ எழக் கூடிய எண்ண எழுச்சி, உடல் வலு இவற்றையே சினம் என்று கொள்கிறோம். ஆக, சினம் என்பதானது விருப்பம் அல்லது ஆசை தடைப்படும்போது, அந்தத் தடையை நீக்குவதற்கு எழக்கூடிய ஆசையின் அடுத்த கட்டம் என்று சொல்லலாம்.
‘மேலும் மேலும் உடைமை வேண்டும், பிறர் பொருளைக் கொண்டேனும் சொத்து வாங்க வேண்டும்’ என்ற ஆசை, தனக்குத் தேவையே இல்லாது போனாலும் விட்டுக் கொடுப்பதில்லை என்ற பிடிவாதம், இதுதான் கடும்பற்று. இதுவும் ஆசையே. அதாவது ஆசையின் இன்னொரு மடிப்பு. பிறருக்கு உதவக் கூடியது தன்னிடம் இருந்தால், அது தனக்கு உதவப்போவது இல்லை என்றாலும் கூட ‘யாருக்கும் கொடுக்க மாட்டேன்’ என்று பதுக்குவது, மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே இருப்பது என்பது கடும்பற்று ஆகும்.
இன்னொரு பெண் அல்லது ஆணுடைய உள்ளம் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும், ‘என்னுடைய எண்ணம் பூர்த்தியாக வேண்டும்’ என்ற அளவுக்கு மனிதனுடைய பால்வேட்கை ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு வரம்பு கடந்த எண்ணமும், முயற்சியும், செயலும் எதுவோ அதுதான் முறையற்ற பால் கவர்ச்சியாக வருகின்றது.
அறுகுண வரிசையில் அடுத்து உயர்வு – தாழ்வு மனப்பான்மை வருகிறது. ‘நான் தான் உயர்ந்தவனாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில், இன்னொருவர் கொஞ்சம் உயர்ந்திருக்கிறார் என்றால், அதை இவனால் தாங்க இயலவில்லை என்றால், அந்த மனநிலை உயர்வு – தாழ்வு மனப்பான்மை ஆகும். உயர்வு தாழ்வு மனப்பான்மையால் பொறாமை முதற்கொண்டு பல மாசுக்கள் ஏற்படும்.
உள்ளத்தில் சினம் எழுந்தது – தடையைத் தண்டிக்கவோ, அழித்து விடவோ முடியவில்லை. ‘காலம் வரட்டும், வலுவும் வாய்ப்பும் கிடைக்கும்போது அதைச் செய்து முடிப்பேன்’ என்று சினத்தைத் தள்ளி வைத்துக் கொண்டு இருக்கிறபோது, அதன் பெயர் வஞ்சம் அல்லது மாச்சரியம். வஞ்சம் என்றால், சினத்தை இருப்புக் கட்டி, அதை நிறைவேற்றுவதற்காகக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது. எனவே வஞ்சம் என்பது சினத்தின் மறு வடிவமே ஆகும்.
PHONE: +91 7904402887 / 04253-292746