There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
தொன்றுதொட்டு தெய்வ வணக்கம் என்று ஒரு பழக்கம் மனித குலத்தில் தோன்றி, நிலவி, நிலைத்தும் விட்டது. நாத்திகர்கள் என்று தங்களைச் கொள்பவர்கள் தெய்வ வணக்கத்தைத் தேவையில்லாத மூடத்தனம் என்கிறார்கள். பொருள் விரயமும் கால விரயமும் தெய்வ வணக்கத்தால் ஏற்படுகின்ற கூடுதல் நஷ்டம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். உண்மைதான் என்ன?
இயற்கையாகிய பேராதாரமே பலவிதமான பரிணாமத்தின் இறுதியில் மனிதனாகவும் வந்துவிட்டது. விரிந்து கொண்டே வரும் தனது தோற்றப் பொருள்களாகிய உருவங்களையும் ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற அரூப, ரூப எழுச்சிகளையும், ஐம்புலன் அறிவைக் கொண்டு அறிந்துவிட்டது. மேலும் அறியப் படாது விடுபட்ட தனது ஆதிநிலையை – அரூப நிலையை சக்தி நிலையை – அறிய எழுச்சி பெற்ற அறிவு அதை அறிந்து கொள்ளும் வரையில் கற்பனை வேகமாகி அதையும் புலன் அறிவின் மூலமே இயக்கிச் செலவிட்டு சலிப்படைந்து மயக்கமும் மிரட்சியும் அடைகின்றது.
புலனியக்கத்தை விடுவித்து அறிவை ஒன்றி, ஒடுக்கி, நிறுத்தித் தன்னைப் பற்றி ஆராயும் திறமையும், சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும் கிட்டிய போது மனிதன் முதலில் தனது ஆதிநிலையை – தெய்வநிலையை – அரூப நிலையை உருவத்திலேதான் உணர்ந்து கொண்டான். பிறகுதான், "அரூப சக்தி நிலையில் எங்கும் நிறைந்தவன் நான் எனவும் உருவநிலையில் பலவாறாக இருக்கிறேன் எனவும், அறிவின் நிலையில் அவ்வவ்வுருவ பரிணாம நிலைகளுக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப பல பேத நிலைகளையுடையவனாக இருக்கிறேன்” எனவும் மனிதனால் அறிந்து கொள்ள முடிந்தது.
மனிதனாக வாழ்ந்த சிறப்பின் உயர்வில் ஒரு சிலர் இந்த விளக்கத்தைப் பெற்ற பின் ஒவ்வொரு மனிதனும் இந்நிலையை உணர்ந்தாலே அறிவின் தெளிவுடன் வாழ முடியும் என்ற உண்மையை அறிந்து, இயற்கையின் நிலையை அதன் அடிப்படையிலிருந்து அறிவின் எல்லைவரை விளக்கினார்கள். புலன்களைக் கடந்து அறிவை நிறுத்தப் பழகினாலே, தன் மூல நிலையாகிய தெய்வநிலையை அறிய முடியும் என்ற தெளிவை அறி ஞர்கள் கண்டதால் அறிவிலும் செயலிலும் மனிதர்களைப் பண்படுத்த முனைந்தார்கள்.
எல்லோரும் ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டே தோன்றி வாழுகின்றோம் என்ற உண்மையை மனிதன் அறிந்து அதற்கேற்றபடி வாழ்வை ஒற்றுமையாக நடத்தி இன்பமும் அமைதியும் பெற வேண்டுமெனில் அதற்கு அனைவருடைய அறிவும் உடலியக்கமும் பண்பட வேண்டும், ஒழுங்குபட வேண்டும் எனக் கண்டார்கள். ஆகவே எண்ணத்தையும், உடலியக்கத்தையும் ஒழுங்குபடுத்த அவர்கள் பல வழிமுறைகளைக் கண்டு அதை மக்களிடம் பழக்கத்தில் கொண்டு வந்தார்கள். பிற்காலத்தில் அவ்வப்போது தோன்றிய அறிஞர்கள் மேலும் மேலும் இந்த ஒழுங்குமுறைகளைத் திருத்தி வந்தார்கள்.
உலகில் மக்கள் வாழும் வெப்பதட்ப நிலை, விளைபொருட்கள், அவ்வப்போது அவர்கள் பெற்றுவந்த அறிவின் வளர்ச்சி இவைகளுக்கு ஏற்பவும், அறிஞர்கள் பெற்று வந்த அறிவின் வளர்ச்சி இவைகளுக்கு ஏற்பவும் அறிஞர்கள் மக்களைப் பண்படுத்த வகுத்த நெறிமுறைகள் காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் சிறிது வித்தியாசப்படலாம். எனினும் மனிதர்களின் உடல் இயக்கத் தேவைகள், அறிவின் இயல்பு, இயற்கை அமைப்பு, இன்ப துன்ப உணர்ச்சிகள் அனைத்தையும் அறிந்தே அவர்கள் வாழ்க்கை நெறிகளைப் போதித்து உள்ளார்கள்.
பெரும்பாலான மனிதர்கள் உலகின் மனோதத்துவக் கலையிலும், விஞ்ஞானக் கலையிலும் தேர்ச்சி பெற்ற பின் அறியாமையால் கொண்டிருக்கும் கற்பனைகள் அனைத்தும் நீங்கி அனைவரும் அன்போடும், பண்போடும், அறத்தோடும் வாழ்வார்கள். அக்காலம் சமீபத்தே வருகின்றது. அதுவரையில் வணக்க முறைகள் மனிதனைப் பண்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும்.
ஆறாம் நிலையாக இயங்கும் அறிவுக்கு இயற்கைத் தத்துவத்தை அறிந்து கொண்டே போகும் விஞ்ஞான ஆராய்ச்சியும் தெய்வ வணக்கம் என்ற முறைகளும் தான் அமைதி கொடுக்க வல்லவை. பக்தி மார்க்கத்திலே அறிவை மயக்கக் கூடியனவுமான சில பழக்க வழக்கங்கள் உலகெங்கும் மக்களிடையே பரவியே இருக்கின்றன.
விஞ்ஞான அறிவின் வளர்ச்சி வேகம் அதிகரித்து வரும் இந்நாளில் கல்வியறிவை அனைவரும் பெறும் அளவுக்கு வசதி கிட்டும்போது அத்தகைய தீய பழக்க வழக்கங்கள் படிப்படியாகக் குறைந்து அடியோடு ஒழிந்து போகும். மனிதனானவன் இயற்கையில் ஒரு அங்கம் எனவே தன்னையும் இயற்கையையும் முழுவதுமாக அறிந்து கொள்ளாதவரை தீங்கு செய்யும் பழக்கத்திலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளமுடியாமல் பிறர்வளம் பறித்தல் என்பதிலேயே குறியாக இருந்து வருகிறான். இயற்கையின் அனைத்துச் சட்டங்களையும் அறியும் போதுதான், செயல் விளைவு தத்துவமும் விளங்குகிறது. “தீங்கு செய்தால், தீங்கு வரும்” என்பதும் தெரிகிறது. இயற்கை நியதிகள் அனைத்தையும் உணர்ந்து கொள்ள உதவுவதுதான் தெய்வ வணக்கம். உருவ வழிபாட்டிலிருந்து அறிவு வழிபாட்டுக்கு வரும் போது தெய்வ வணக்கம் தன் உண்மை நிலையை அடைந்து பயனையும் தருகிறது.
அமைதியாக ஆராயுங்கள். இன்றே இல்லையானாலும், ஆராய்ந்து கொண்டே வந்தீர்களேயானால், சில நாட்களில் இவ்வினக்கத்தின் அடிப்படை புரிந்து விடும்.
PHONE: +91 7904402887 / 04253-292746