There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. பிரம்மநிலை அடைவதற்குத் தியானம் தான் வழி. இந்தத் தியானம் செய்வதற்கு அதற்கு முன்னால் உள்ள ஆறு அம்சங்களிலும் வெற்றியடைய வேண்டும். தியானம் என்பது விழிப்பாக இருப்பது. இதற்கு ஆறு நிலைகளிலும் வைராக்கியத்தோடு விடாமுயற்சி செய்து விழிப்பாய் ஒன்றின் மீது இணைய வேண்டும். இணைவது யோகம். ஆறு நிலைகளில் முதலில் அறநெறி, தர்மம் எது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது, அதை வாழ்க்கை நெறியாக ஒழுக்கமாக கடைப்பிடிக்கத் தெரிய வேண்டும்.
மூன்றாவது உடலை யோகத்திற்கு தகுந்தது போல் சாத்வீகமாக நோய், நொடி இல்லாததாக வைத்துக் கொள்ள வேண்டும். நான்காவதாக, உயிருக்கு முன்னோடியாக உள்ள மூச்சை நியமம் செய்ய வேண்டும். அதாவது மனம் அமைதி அடைய, உயிராற்றலைப் பெருக்கிக் கொள்ள மூச்சின் மீது இணைய வேண்டும். பிறகு ஐந்தாவதாக உலக விஷயங்களைச் சற்று நேரத்திற்கு தவம் செய்யும் போது உங்களுக்கு உள்ளே வராமல் வெளியே நிறுத்தி விடுவது. இதற்கு மூச்சு உதவும்.
அடுத்து ஆறாவதாக மனதை ஒருநிலைப்படுத்துவது. மந்திரம், ஜெபம், சப்தம், ஒளி இவற்றில் இணைவது, ஒன்றிவிடுவது. இதில் வெற்றியடைந்துவிட்டால் தியானம் எளிதாகக் கைகூடும். தியானம் என்பது உடல், உயிர், மனம் மூன்றும் சங்கமிப்பது. உடலிலே உயிர் மையங்களிலே மனதை (ஓர்நிலைப்படுத்தும் போது அறிவாக) உயிரையே பார்த்துக் கொண்டிருப்பது. மனம் இருக்கின்ற ஆற்றலை செலவாக்கும். அறிவு இருக்கின்ற ஆற்றலைக் கூட்டும். கூட்டுவிக்கும். அப்போது இந்த அறிவு உயிரைப் பார்க்க பார்க்க அந்த உயிரின் மூலமான ஆன்மாவை தரிசனம் செய்யும். இதுவே கடவுள். கடந்து உள்ளே போகப் போக கடவுளாய்க் காட்சியாவாய் என்று பொருள். ஆறாவதாக மனிதனின் முக்கிய மையம், புருவ மையம், தன்னை அறியும் மையம். அடுத்து ஏழாவதாக மனிதனின் இறைமையம், தலைஉச்சி மையம், மேல் நோக்கு மையம், துரியம். இதன் மூலம் தன் ஆன்மாவை விரித்து பரமாத்மாவோடு இணைத்து சமாதி அதாவது சிவநிலை அடையும் பெரும் பாக்கிய நிலையை அடையலாம். தியானம் குருவின் மூலம்தான் பெற வேண்டும். குருவுக்காக அலைய வேண்டாம். தானாக வருவார். ஆனால் தேவை என்னவென்றால் “உண்மையான இறையை அனுபவிக்க வேண்டும்” என்ற உங்களுடைய ஆசை, வேட்கை. அதுஒன்றே போதும், நீங்கள் பிரம்மத்தை அடைந்து விடுவீர்கள்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
Temple of Consciousness, Aliyar
Mobile Number: +91 79044 02887
Email: connect@vethathiri.ac.in