There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
இன்றைய இளைய சமுதாயம் ஒரு முற்போக்கு சமுதாயமாக, அறிவின் தெளிவில் நிறைவு பெற்ற சமுதாயமாக மாற வேண்டும். இன்றைய சமூக சூழல் இளைய சமுதாயத்தினை பல தீய வழிகளில் செலுத்தி வாழ்க்கை தடுமாற்றங்களை உருவாக்கி வருகின்றது. இதனை உணர்ந்து இளைஞர்களை நல்ல பாதையில் ஒழுக்க பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு பெற்றோரை சார்ந்துள்ளது. இதனைக் கடந்து நல்ல மனிதனை உருவாக்கும் கலாசாலை உருவாக வேண்டும். அத்தகைய அறக்கல்வியை, பண்பாட்டுக் கல்வியை இன்றைய சமுதாயம் பெறவேண்டும் என்பதுதான் வேதாத்திரி மகரிஷியின் உயிரிய நோக்கமாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக மாணவர் சமுதாயம் பெறவேண்டும் என்பது மகரிஷியின் நோக்கம்.
இந்த வேதாத்திரிய கல்வியின் மூலம் இளைய சமுதாயத்திற்கு உடல், உயிர், மனம், இறைநிலை பற்றிய விளக்கங்களை சாதனை மார்க்க வழிகளில் தந்துள்ளார். இதனை வாழ்வியலாக இளைஞர்கள் மாற்ற முயன்றால் சமுதாய மறுமலர்ச்சி விரைவில் மலரும். இன்றைய மனிதகுல வளர்ச்சி என்பது பொருள்களைப் பெருக்கி அதை அனுபவிக்கின்ற வாழ்க்கைப் போக்கை வாழ்வின் தேவையாகவும், நோக்கமாகவும் மாறி உள்ளது. உண்மையில் மனிதனின் தேவை என்ன? என்பதை இன்னும் தெளிவாக சிந்தனை செய்யாத போக்கும் நம்மிடம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. நம்மில் நம்வளர்ச்சியை தெளிவாக புரிதல் முதல் தேவையாகின்றது.
மனிதன் தோன்றிய நாளில் இருந்து, நாகரீகம் தோன்றிய காலம் முதல் மனிதனின் அடிப்படை தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இது இன்று வரையில் உலக மக்களால் நிறைவுபெறப் பட்டுள்ளதா என்றால் இல்லை என்ற பதில்தானே கிடைத்துள்ளது.
திருவள்ளுவர், திருமூலர். மாணிக்கவாசகர் மற்றும் ஒளவையார் போன்ற ஞானிகளும், சித்தர்களும் கம்பர், வால்மீகி, இளங்கோ போன்ற புலவர் பெருமக்களுக்கும் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களும் அந்தந்த காலத்திற்குத் தேவையான நெறிமுறைகளைப் பாடல்களாகவும், காவியங்களாகவும் மக்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அதேபோல மகரிஷி அவர்களும்,
“பார் முழுவதும் பொருள் துறையில் சமநீதி
பலநாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்
சீர்திருத்த சிக்கனமாம் சிறந்த வாழ்வு
தெய்வநிலை அகத்துணரும் இறைவணக்கம்” – என்றும்,
“குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகில்
குறைகளுக்கு காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி, மேலாம்
கடமையினை சிந்தித்து செயலாற்றி உய்வோம்” – என்றும்
கூறியுள்ளார்.
மக்களின் வாழ்வை மாற்றியமைக்க கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்கிறார் மஹரிஷி. தற்காலக் கல்விமுறை, பொருளாதாரம், அரசியல், சமுதாயம். விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறை மக்களுக்கும் அவரவர்கள் பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வுகளைக் கொடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் கல்வியாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு துறைகளிலும் மகரிஷி வாழ்வில் அனுபவமாகப் பெற்ற விளக்கங்களை அவ்வப்போது கவிதைகள் மூலம் நமக்குத் தொகுத்து வழங்கியிருப்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதை உணர்வோம்.
அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ மனத்தாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்கு தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து அதனை காத்து வருவது கருணை. மனிதன் அமைதியோடும், நிறைவோடும், வெற்றி கண்டு வாழ்வதற்கு மக்களிடம் அன்பு காட்டி வாழ வேண்டும். மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும் பழக்கத்தை விட்டுவிட்டு அவர்களிடம் உள்ள நற்குணங்களை ஆராய்ந்து பாராட்டும் பண்புகளைக் கல்வியின் மூலம் வளர்க்க வேண்டும். உறைவிடமும், உணவும், பால் உறவும், மதிப்போடு உழைத்துப் பெற்றதை முறையோடு துய்க்கும் பழக்கத்தை கற்று அமைதியோடும், அன்போடும் வாழத் தேவையான கல்வியை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது மகரிஷியின் நோக்கம்.
இயற்கையின் திருவிளையாடல்களால் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்திலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாத நியதியாக அமைந்திருக்கும் அன்பையும், கருணையையும் மனிதனானவன் உணாந்து தன் வாழ்விலும், செயல்களிலும் பின்பற்றி வாழ்வது தான் முழுமையான உண்மையான இறைவழிபாடு என்கிறார் மகரிஷி.
உயிர்கட்குத் துன்பமிலா வகையிலாற்றும் உயர்ந்த செயல் ஒழுக்கமாகும் என்று மகரிஷி ஒழுக்கத்தற்கு வரையறை கொடுக்கிறார். “ஒருவர் தனக்கோ, பிறருக்கோ, உடனோ, பின்னோ தீமை செய்யா உணர்வு ஒழுக்கமாகும்”. கல்வி முறையில் ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றையும் கற்பிக்கப்பட வேண்டும். அன்பும், பண்பும் மாணவர்கள் மனதில் உள்ளுணர்வாக ஊற வேண்டும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு பொருட்கள் மீதோ அல்லது வாய்ப்பு நலங்கள் மீதோ அல்லது பணம் சார்ந்த முறையையோ பற்றியதில்லை. பின்னால் நிகழக் கூடிய விளைவைப் பற்றித் தகுந்த விழிப்பு நிலையோ, உண்மையான அக்கறையோ காட்டாது பழக்கத்தின் காரணமாகச் செயல்களில் சிக்கிக் கொண்டு தவறான கொள்கைகளைப் பற்றிக் கொண்டு செயல்படுவதுதான் பொருளாதார ஏற்றத்தாழ்வுச் சிக்கலுக்கான காரணமாகும். ஒவ்வொரு செயலையும், ஆசையையும் மதிப்பிடுகையில் ஒருவர் தன்னுடைய அறிவை விழிப்புணர்வுடன் கடந்த கால அனுபவங்களையும், தற்கால சூழ்நிலைகளையும், வருங்கால விளைவுகள் ஆகிய மூன்று திசைகளில் செலுத்த வேண்டும். சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றைத் தனது பண்பில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அமையுத் வாழ்க்கையின் போக்கு பொருளாதாரச் சமத்துவத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட கல்வியைத் தற்கால கல்விமுறையில் சேர்த்துப் போதித்து நல்ல பெருமக்களின் கடமை என்று வலியுறுத்துகிறார்கள்.
மனித சமுதாயம் சாதி சமயத்தால் பிளவுப்பட்டுள்ளது. சமுதாயம் ஓங்கி வரத் தாழ் போடுவது சாதி வேறுபாடுகள், சமய பூசல்கள், சாதிய சமய வேறுபாடு நீங்கி எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பது மகரிஷியின் நோக்கம். சாதி, சமயங்கள் மக்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. காலப்போக்கில் மதங்களும், சமயங்களும், மக்கள் மூடநம்பிக்கைகளையும், உயர்வு, தாழ்வு வேறுபாடுகளையும் கைக் கொண்டு போர், பூசல்களை உருவாக்கி அமைதியற்ற வாழ்வில் மக்களைத் தள்ளியுள்ளது.
மதங்களும், சமயங்களும், அன்பையும் மனித நேயத்தையும் உயிர்கள் மேல் இரக்கத்தையும், ஆன்மீக நெறிகளையும் உணர்ந்து போதிக்க வேண்டும். உலக மக்கள் அன்பு, அருள் பெற்று ஒரே நோக்கத்தில் எண்ணுபவர்களாக மலர வேண்டும். அவர்களுக்குப் பொதுவான வழிபாட்டு முறையை ஏற்படுத்த வேண்டும். “இறைவழிபாடு உயிர் வழிபாடு இணைந்த நெறி மதமாகும்”. இந்தக் கருத்தை மனதில் பதிய வைக்கத் தேவையான கல்வியை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது மகரிஷியின் நோக்கம். மதங்கள் கன்ம வினைகளைப் போக்கும் அறநெறிகளைப் போதிக்க வேண்டும்.
PHONE: +91 7904402887 / 04253-292746