There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். அதற்கு ஏமாற்றமில்லாமல் வாழ வேண்டும். ஏமாற்றம் என்பது துன்பமும் சோர்வும் அளிக்கின்ற ஒரு மனநிலை. அது தன்னாலும் வரலாம். பிறராலும் வரலாம். இயற்கையாலும் கூட எழலாம்.
1. பேராசை 2. அறியாமை 3. தப்புக் கணக்கு 4. விழிப்பின்மை 5. பகை 6. இயற்கைச் சீற்றம்.
ஆகிய ஆறு வகையில் ஏமாற்றங்கள் வருகின்றன. ஏமாற்றத்தின் அளவுக்கேற்ப அதிர்ச்சியும், துன்பமும் விளையும். அவ்வப்போது ஈடு செய்துவிடக்கூடிய சிறு சிறு ஏமாற்றங்களும் உண்டு. நீண்ட நாட்களுக்குத் துன்பம் தொடரக் கூடிய ஏமாற்றங்களும் உண்டு. வாழ்நாள் முழுவதிலும் கூட ஈடு செய்து விட முடியாத ஏமாற்றங்களும் உண்டு.
பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்வில் காணும் துன்பங்களுக்கும் இந்த ஏமாற்றமே பெரும்பாலும் காரணமாக இருப்பதால், ஏமாற்றத்தைத் தவிர்க்கக்கூடிய சிந்தனையும், அந்தச் சிந்தனை தந்த விளக்கத்தைச் செயலுக்குக் கொண்டு வருகின்ற அறிவு மேன்மையும் வேண்டும். விழிப்பின்மையால் அலட்சியம், அசிரத்தை, சோம்பல் இவற்றுக்கு இடம்பொடுத்தால் செயல்திறன் குன்றிவிடும். அம்மாதிரியான மனநிலையில் செயலாற்றி, அதன் காரணமாக வெற்றி தவறிப் போகும் போது கவலை வரும்.
தவிர்க்க முடியாத போதுதான் பிறரை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்தலுக்கு நான்கு பரிமாணங்கள் உண்டு. Judgement of Need, Judgement of Quantity, Judgement of Quality, Judgement of Time என்று. தேவை, அளவு, தரம், காலம் என்று. இந்த நான்கிலும் எதிர்பார்ப்பதற்கும் அது கிடைப்பதற்கும் ஒத்து வருமா என்றால் வராது. எங்கேயோ அபூர்வமாக வரும். ஆகையினால் எதிர் பார்ப்பதில் ஏமாற்றமே வரும்.
ஆனால், தன்னம்பிக்கை வேண்டும். எனக்கு இந்த ஆற்றல் இருக்கிறது. இந்த வலிவு இருக்கிறது. இந்த இந்த முறையில் இந்தச் செயலைச் செய்து முடிப்பேன் என்று தீர்மானித்துக் கொண்டு, அந்தச் செயலில் இறங்க வேண்டும். எதிர்பார்த்துக் கொண்டே இருந்து காலம் முழுவதும் ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கக் கூடாது.
அதைவிட, ‘நான் எங்கே இருக்கிறேன்? செல்வத்தில், அறிவில், வயதில், வசதியில், செல்வாக்கில், மனதின் ஆற்றலில், அதிகாரத்தில் எப்படி இருக்கிறேன்? இதைக் கொண்டு என்னைச் சார்ந்தவர்களுக்கு நான் என்ன நன்மையைச் செய்ய முடியும்? என்னை நாடி வருபவர்களுக்கு எதைச் செய்ய முடியும்’ என்று நம்மிடத்தில் இருப்பதைக் கொண்டு, தொண்டு செய்வதில் பிறருக்கு அளிப்பதில் மாத்திரம் எதிர்பார்த்திருந்தால் அது நல்லது. நாம் அப்படி எதிர்பார்த்து இருக்க வேண்டும்.
என் கையில் உள்ள வரையில், பிறருக்கு என்ன செய்ய முடியும் என்ற வரையில் எதிர்பார்த்திருக்கலாம். நான் செய்ய வேண்டிய சேவைக்கு, ‘உடல், குடும்பம், சுற்றம், ஊரார், உலகோர்க்கு ஆற்றும் கடமை முறையே முக்கியம்’. இந்த ஐவகை கடமைகளைச் செம்மையாக ஆற்றுவதற்கு என்னைத் தயாரித்துக் கொள்வதில் நான் என்னென்ன செய்ய வேண்டும் என்ற அளவில் மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் அமைதி தான். எப்போதும் வெற்றி தான். பிறரை எதிர்பார்க்க, எதிர்பார்க்க ஏமாற்றம் தான் வரும். எப்போதுமே எதிர்பார்த்து எதிர்பார்த்துதான் கருத்து முரண்பாடு சண்டை, குழப்பம், துன்பம், தூக்கமின்மை, நோய்வாய்ப்படுதல், இவை எல்லாம் வருகின்றன.
ஆகவே, எதிர்பார்த்தல் என்பது கூட முரண்பாடான ஆசை தான். நாம் என்ன எதிர்பார்க்கிறோம்? என்னுடைய தேவையைப் போல, என்னுடைய கணக்கைப் போல அவர் எனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது ஆசையில் முரண்பட்ட ஆசை. மற்றவர்களுக்கெனவும் ஓர் ஆசை, விருப்பு, கணிப்பு, கருத்து உண்டு. என்னோடு அவருக்கு உள்ள உறவில் ஓர் அளவு உண்டு. அதற்குத் தக்க அளவில் அவர்கள் செய்வார்கள். அதை நாம் நிர்ணயிக்க முடியாது. அப்படி நாம் நிர்ணயிப்பதில் கட்டாயம் ஏமாற்றம் தான் வரும்.
‘அவ்வப்போது எந்தெந்த வசதிகள் கிடைக்கின்றனவோ, அது கிடைக்கட்டும். அதை நான் ஏற்றுக் கொள்வேன்” என்றில்லாமல், ‘காரியங்கள் இவ்வாறு தான் நடக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு வைத்தால், ஏமாற்றம் தான் கிடைக்கும். ஆசை சீரமைப்பு பயிற்சியிலும், தேர்ச்சியிலும் முக்கியமான கட்டம் எதிர்பார்த்தலும் ஏமாற்றமும் ஆகிய இரண்டுமே கூடாது என்பது தான்.
ஏமாற்றத்தைத் தவிர்க்கவும் அடியோடு போக்கவும் உதவும். ஏமாற்றங்களைத் தவிர்த்துக் கொள்ள சில திட்டமிட்ட முடிவுகள் தேவை. எதிர்பார்த்தல் என்பதே ஏமாற்றங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது என்பதால், ‘பிறரிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன்’ என்று முடிவு கொள்ள வேண்டும்.
‘வயதில், அறிவில், உடல் வலுவில், கல்வியில், தொழில் திறனில், செல்வ நிலையில், செல்வாக்கில் ஆக இந்த ஏழு வகையிலும் நான் எந்த நிலையில் இருக்கிறேன்’ எந்த அளவில் இருக்கிறேன் என்று கணித்துக் கொள்ள வேண்டும். ‘இந்த ஏழு வகையான மூலதன இருப்பைக் கொண்டு எனக்கு, என் குடும்பத்திற்கு, சுற்றத்திற்கு, ஊருக்கு, உலகுக்காற்ற வேண்டிய கடமைகளை எவ்வாறு திறமையுடன் மனமுவந்து செய்ய முடியும்’ என்றும் கணித்துக் கொள்ள வேண்டும்.
பின்வாங்காது இயன்ற வரை கடமைகளை ஊக்கத்தோடு செய்து கொண்டே இருக்க வேண்டும். தனது கடமைகளினால் மலர்கின்ற ஒவ்வொரு செயலோடும் காலம், இடம், தொடர்பு கொள்ளும் பொருள் அல்லது நபர், திறமை, நோக்கம் என்ற ஐந்தையும் இணைத்துக் கணித்து, விளைவறிந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
வாழ்வில் எதிர்பாராது சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. எனவே, ‘ஏற்படும் துன்பங்களை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ என்ற மன உறுதியைப் பராமரிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ‘என்னுடன் வாழும், பழகும் ஒவ்வொருவருக்கும் அறிவு இருக்கிறது. அவரவர்களுக்கும் ஒரு திறமையும், பொறுப்புணர்ச்சியும் இருக்கின்றன. ஆகவே, எவர் ஒருவர் செயலிலும் அவசியமில்லை நான் குறுக்கிட மாட்டேன்’ என்று முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட ஏழு வகையிலும் சிந்தனையோடு முடிவு கட்டி, அயரா விழிப்பு நிலையில் நினைவை வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். எதிர்பார்த்தல், பிறர் செயலில் குறுக்கிடல் என்ற இரண்டினையாவது நீக்கி, தன் கடமைகளில் விளைவறிந்து விழிப்போடு ஆற்றும் வாழ்க்கை முறையே ஏமாற்றங்கள் இல்லாத இனிய வாழ்வை அளிக்கும்.
இவ்வாறு திட்டமிட்டு, யோசித்துத் தீர்மானம் செய்து, அந்தத் தீர்மானத்தின் படியே வழி நடக்கக் கூடிய அளவுக்கு நாம் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசையை சீரமைத்துக் கொண்டால் என்ன ஆகிறது? நம்மாலேயே அந்த ஆசையைச் செய்து முடிக்க முடியும். அனுபவிக்க முடியும். அப்படி எழுந்த நல்ல ஆசைகளெல்லாம் அனுபவித்து முடிக்கக் கூடிய அளவுக்கு மனிதனின் வாழ்வு அமைந்துவிட்டால் வெற்றிதான்.
PHONE: +91 7904402887 / 04253-292746