There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
தவறு என்றாலும், குற்றம் என்றாலும், பாவம் என்றாலும் ஒன்று தான். பாவம் என்பது தீய செயல்களை சமயங்களின் பார்வையில் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது பெரும்பாலும் மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலைக் குறிக்கிறது. யூதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சில சமயங்களின் பார்வையில், பாவம் என்பது கடவுளின் கட்டளையை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவு ஏழு தாதுக்களாக மாறுகிறது. எவ்வளவு சாப்பிட்டால் அவ்வாறு மாறும்? ஒரு பவுண்ட் உணவு சாப்பிட்டால் அது உடலாக மாறும். அவ்வளவு தான் செறிமான ஆற்றல் அங்கே இருக்கின்றது. ஒன்றரை பவுண்ட் உணவு சாப்பிட்டால்? உடலாக மாறுவது மெதுவாக நடக்கிறது. தேக்கம் உண்டாகிறது. புளிப்பு உண்டாகிறது. அதிலிருந்து வரக் கூடிய நோய்கள் எத்தனை? இறை ஆற்றல் ஒரு முறையாகச் செயல்புரிந்து ஏழு தாதுக்களாக, ரசம், ரத்தம், மாமிசம், மேதை, அஸ்தி, மஜ்ஜை, சுக்கிலம் என்று மாற்றிக் கொண்டே இருக்கிற போது, நீங்கள் அவ்வாறு மாற்ற முடியாதபடி அளவுக்கு மேலே உள்ள போட்டதனால், பிணக்கு, இறையாற்றலுக்கு நம்முடைய செயல் பிணக்குகிறது. அங்கிருந்து தான் வருகிறது துன்பம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
துன்பம் தரும் செயல்கள் 'பாவம்'
இறைவன் துன்பம் கொடுக்கிறான் என்பதில்லை. இறையாற்றலுக்கு ஒத்து வாழ வேண்டிய இயக்கம் தான் மனிதன். அது தெரியாததினால், மாறாக நடந்ததினால் துன்பம் வருகிறது. தெரிந்த பிறகும் கூட அலட்சியப்படுத்தினால் அதே தவறு செய்கிறபோது, துன்பங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. துன்பம் தரும் செயலைப் பாவம் என்று சொல்கிறோம். அந்தச் செயல் ஜீவகாந்த சக்தியில் பதிந்து மூலாதாரத்தில், ஆன்மாவில் பதிவாகியிருக்கிறதனால் என்றைக்குமே அது அழியாமல் இருக்கும். நாம் உயிரோடு இருக்கிற வரைக்கும் நமக்குள் அது இயங்கி இயங்கி மறுபடியும் அதே செயலைச் செய்வோம். அதே துன்பத்தைப் பெறுவோம். நமக்கு ஒரு குழந்தை உற்பத்தியானால், கருவமைப்புப் பதிவோடு குழந்தை வரும்.
ஒரு தவற்றைச் செய்துவிட்டால் காலம் வரையில் அதனுடைய விளைவினை நாம் அனுபவிக்கிறோம். நமக்குப் பின்னால் ஒரு குழந்தை பிறந்தால், அதுவும் அனுபவிக்கிறது, அந்தக் குழந்தைக்கு குழந்தை என்று எத்தனையோ தலைமுறைகளுக்கும் விளைவு தொடரும். இது தெரிகிற போது, பாவகாரியம் என்று தெரிந்த ஒன்றைச் செய்ய மனம் துணியுமா?
இவ்வாறு நாம் பிறந்தது முதற்கொண்டு இன்று வரையில் செய்த செயல்கள் அத்தனையும் நமக்குள் பதிவாகி, அதுவே நமது அறிவாட்சித் தரமாக இருக்கிறது. அதன் வழியே தான் இன்றைக்குச் செய்யக்கூடிய செயல்களும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதில் நல்ல பதிவுகளும் உண்டு. தீய பதிவுகளும் உண்டு. தீமை தரத்தக்க பதிவுகளை விலக்கி விட வேண்டும். நல்ல பதிவுகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதன் அமைதியாக வாழலாம். அறிவோடு வாழலாம். துன்பம் இல்லாது வாழலாம். அறிவு மென்மேலும் உயர்ந்து இறைநிலையோடு ஒன்றி, பிறவிப் பயனையும் எய்தலாம்.
பாவப்பதிவுகளைப் போக்கும் முறையை வேதாத்திரி மகரிஷி மூன்று விதமாகப் பிரிக்கிறார். 1. பிராயச்சித்தம் 2. மேல்பதிவு 3. அடியோடு அழித்தல்
பிராயச்சித்தம் என்றால் சில செயல்களுக்கு நேர்ந்த விளைவைச் சரிசெய்து விடுவது. உதாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தருவது. அவர்களிடம் மன்னிப்பு கேட்பது. நோய்க்கு மருந்து உண்பது. அதிகமாகச் சாப்பிட்டு வயிற்று வலி வந்தால், அதற்குப் பதிலாக இப்போது குறைவாகச் சாப்பிட்டு, அல்லது சாப்பிடாமலே இருப்பது பிராயச்சித்தம்.
மேல்பதிவு என்பது மிக நீண்ட காலமாக இருந்து வரக்கூடிய நோயைப் போக்க உடற்பயிற்சி செய்வது. ஒரு மனிதன் ஆல்கஹால் சாப்பிட்டுப் பழகிவிட்டான். அவனுக்கு குடலே வெந்து போயிற்று. டாக்டர் சொல்கிறார். ‘இனி நீ குடித்தால் உன்னைத் தேற்றுகிறதுக்கு ஆளே இல்லை. இதோடு நிறுத்தினால் தான் சரி’. அவர் கொடுக்கும் மேல் பதிவைப் பாருங்கள். ‘சாராயம் குடிக்கும் நேரம் வரும் போதெல்லாம் ஏலக்காய் போட்டுப் பால் சாப்பிடு. முதலில் க~;டமாகத்தான் இருக்கும். திடச்சித்தத்துடன் பழகி வந்தால், ஏலக்காய் பால் குடிப்பது பழக்கமாகிவிடும்’. இவனும் அவ்விதம் பழகி வெற்றியும் பெறுகிறான். இது போன்ற செயல்களெல்லாம் மேல் பதிவு.
அடியோடு அழித்தல் என்றால் இறைநிலையோடு ஒன்றி, ‘அவனே தான் நானாக இருக்கிறான்’ என உணர்ந்ததால், ‘இனி தவறுகளைச் செய்ய மாட்டேன்’ என்ற அளவுக்கு அந்த அகண்டாகார நிலையிலிருந்து மாறாது இருக்கக்கூடிய கர்ம யோகம்.
பிரபஞ்ச ரகசியத்தையும், இறைநிலை உணர்வையும் பெற்ற பிறகு தான், பதிவுகளை அடியோடு அழிக்க முடியும். ‘இறைநிலையிலிருந்து எப்படி அணுவாகி, அண்டங்களாகி, அந்தத் தொடரில் நான் வந்திருக்கிறேன். இடையில் வந்த பதிவுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன’ என்ற தத்துவம் தெரிந்த பிறகு, ‘இனிமேல் தவறு செய்யக் கூடாது’ என்று தீர்மானம் பண்ணி, அந்த அகண்ட நிலையிலேயே மனதை வைத்துக் கொண்டு காரியங்கள் செய்து பழகுகிற போதுதான் தேவையில்லாத பதிவுகள் தாமாகவே மாறும். இப்படித்தான் அடியோடு அவற்றை ஒழிக்க இயலும். இப்படி தேவை இல்லாத தவறான பதிவுகளை அழிக்க மனதிற்கு பயிற்சி தேவை. அதற்கு உதவுவது தான் நாம் எளிய முறை மனவளக்கலை பயிற்சிகள். தொடர்ந்து பயணிப்போம் மனவளக்கலையில்... அளவில்லா பயன்களைப் பெறுவோம்! வாழ்க வளமுடன்!
PHONE: +91 7904402887 / 04253-292746