There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
மனிதன் படுகின்ற துன்பங்கள் அத்தனைக்கும் உற்பத்தி ஸ்தானம் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் தான் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். இவற்றை அப்படியே எடுத்து அகற்றிவிட முடியாது. ஆணவத்தைப் போக்க வேண்டுமானால் உண்மையை, அதாவது மெய்ப்பொருளை அடைய வேண்டும். கன்மத்தைப் போக்க வேண்டும். கன்மத்தைப் போக்க வேண்டும் என்றால் நல்ல செய்கைகளைச் செய்து செய்து அவற்றை மேல்பதிவாகக் கொண்டு, ஏற்கனவே செய்துள்ள தீய செயல்களின் பதிவுகள் செயலுக்கு வராமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு வினைத் தூய்மை பெற்று, பரம்பொருள் உணர்வும் வந்துவிடுமானால், தெளிந்த விழிப்பு நிலை கைகூடும். அவ்விடத்திலே மயக்கம் (மாயை) விலகிவிடும். இதுதான் மனிதனாகக் பிறந்தவன் செய்ய வேண்டியதும் அடைய வேண்டியதும். இதற்குத்தான் குருவினுடைய உதவி வேண்டும். ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நிற்கும் போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது.
ஓர் ஏற்புத்தன்மை இருந்தால் குருதானே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும். என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர்நிலையில் பக்குவப்படட்டும். குரு தானாக வருவார்.
மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? என்பதைப் பற்றி வேதாத்திரி மகரிஷி கூறும் பொது "எண்ணமானது பிரம்மத்தினுடைய சாயை தானே? பிரம்மத்தினுடைய இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியது தானே? (Fraction demands and Totality supplies)" என்று கூறுகிறார்.
நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம்
அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம். அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும்போது அதை நம் பெரியவர்கள் ‘கருவில் திருஉடையார்’ என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்.
இங்கே இல்லாத கனி ஒன்று வேறுநாட்டில் இருக்கிறது என்றால், அதன் விதையைக் கொணர்ந்து இங்கே போட்டுவைத்தால், பத்து வருடம் கழித்தேனும் அது பழம் கொடுக்கும் அல்லவா? முதலில் நல்ல செயல்களை எண்ணி எண்ணிச் செய்து வையுங்கள். நல்ல காரியங்களையே செய்ய வேண்டும் என்று எண்ணம் கொள்ளுங்கள். நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்ற போதே அந்த எண்ணமே உங்கள் உள்ளத்தின் ஒரு நல்ல இடத்திலிருந்து தான் வருகிறது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
வேண்டுவதெல்லாம் கிட்டும்
தவம் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிது நேரமே செய்தாலும், சிந்தனை மட்டும் இந்த வழியில் எப்பொழுதுமே இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். இதற்காகவே நாம் அகத்தாய்வுப் பயிற்சி எனத் தனியாக ஒரு பயிற்சிமுறை வைத்திருக்கிறோம். இதிலே எண்ணங்கள் ஆராய்தல், ஆசைச் சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்றெல்லாம் தனித்தனிப் பயிற்சிகள் உள்ளன.
கவலையே இல்லாமல் எப்பொழுதும் அமைதியாகவே வாழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அத்தகு நினைப்பிற்குரிய செயலும் இருந்தாலன்றி, இதில் வெற்றி கிட்டாது, செய்ததையே செய்து கொண்டிருந்தால் வந்து கொண்டிருந்த விளைவும் வந்து கொண்டே இருக்கும். கவலையும் உங்களை விட்டு அகலாது.
பிரச்சினை, சிக்கல் என்று சொல்கிறீர்களே, அது எதனாலே வருகிறது? உங்களுடைய அறியாமையினாலும் உணர்ச்சி வயப்படுகின்ற தன்மையினாலும் அல்லவா? அதை நிறுத்தி நீங்கள் விளைவைத் தெரிந்து செயலைச் செய்து வந்தீர்களானால் விளைவு நன்றாகத் தான் வரும்.
‘எல்லாம் வல்ல பரம்பொருள் எனக்கு வேண்டியதெல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு உருவாக்கி வைத்திருக்கும் பொழுது, அந்தப் பரம்பொருள் இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு, எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிறபோது நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும் என்ற தெளிவு உங்களுக்கு ஏற்படுவது தான் தியானம்.
PHONE: +91 7904402887 / 04253-292746