There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
தெரிந்தோ, தெரியாமலோ வாழ்க்கையில் சிக்கல்களைப் பெருக்கிக் கொண்டு, சிக்கல் சுழலிலிருந்து மீளமுடியாமல் பெரும்பாலோர் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் வீர உணர்வை ஊட்டி, அவர்களும் வாழ்க்கைத் தத்துவங்களைத் தெரிந்து கொண்டு, வெற்றியோடும், அமைதியோடும் வாழ வழி காட்டுவதே நாம் பயின்றும், போதித்தும் வருகின்ற எளியமுறைக் குண்டலினி யோகமாகிற மனவளக்கலையின் நோக்கமாகும்.
தாங்கள் விரும்புவதையெல்லாம் பெற்று, தங்கள் தேவைகளையெல்லாம் நிறைவு செய்து கொள்ளுகின்ற ஓர் அற்புத மாய – உள்ளொளியை மனவளக்கலை உருவாக்கிப் பெருக்கித் தரும். செயலை ஒழுங்குபடுத்திச் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வாழ வழிகாட்டுகின்ற ஒரு சீரிய தவமுறையே அது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார்.
இன்பமாக வாழ்வதற்கு, மனதின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதும், மனத்தூய்மை – வினைத்தூய்மை - இவற்றைப் பெற்றுக் கொள்வதும் மிகவும் முக்கியம். அதற்குப் பேராசை, சினம், கவலை இம்மூன்றையும் ஒழித்துவிட வேண்டும். தற்சோதனைப் பயிற்சியில் இம்மூன்றும் நீங்கிய நிலையான பேரமைதில் மனம் இயங்கக் காணலாம். மனவளக்கலைஞர்கள் தங்களையே அடிக்கடி வினவிக் கொள்ள வேண்டும்.
‘எந்த அளவிலே இந்த மூன்று களங்கங்களையும் நான் விட்டு விட்டிருக்கின்றேன், இன்னும் நான் எவ்வளவு முயன்று முன்னேற வேண்டும்,’
தவத்தினால் கூடுகின்ற உயிராற்றலைப் பேராசை, சினம், கவலை இவற்றால் இழந்துவிடக்கூடாது. கூடை நிறைய ரோஜாப் பூக்களைப் பறித்து, அதை ஒரு சாக்கடையில் கொட்டிவிட்டால், எவ்வாறு இருக்கும்? அதுபோலவே, நாம் தவம் இயற்றி அருளாற்றலைப் பெருக்குகிறோம். இவ்வருளாற்றல் எவ்வளவு உயர்வானது? சிறப்பானது? இதைப் பாதுகாக்க வேண்டாமா? என்று வினவுகிறார் வேதாத்திரி மகரிஷி.
எப்போதும் அயரா விழிப்புடன் இருங்கள். உங்கள் நன்மைக்காக உங்கள் செயலை ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியவில்லையானால், நீங்கள் ‘பிறர் திருத்தமாக வாழ வேண்டும்’ என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறர் மூலம் எந்த நன்மையை அடைய முடியும்? குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஒரு கலாசாலையாகும். குடும்பத்திலேயே ஒழுங்கும், அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகின்ற இடங்களிலெல்லாம் இனிமை தருகின்ற அலைகளாக மாறி, வெற்றி தரும்.
‘கணவன் - மனைவி’ உறவில் அன்பும், ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும் உறுதியான நெருக்கமான உண்மையான இனிய நட்பு நிலவ வேண்டும். குடும்ப அமைதிக்கு இது மிக அவசியம். அதிலும் கணவன் மனைவிக்கிடையே எக்காரணத்தாலும் தளராத அன்புப் பிடிப்பு வேண்டும். அதற்கு ஒருவர் மற்றவரைப் புரிந்து அவர் கருத்தை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசி தேவையான இடத்தில் விட்டுக் கொடுத்தும் தீர்த்துக் கொள்ள வேண்டும். யார் அதிகமாக விட்டுக் கொடுக்கிறார்களோ அவர் தான் இருவரில் அதிக அறிவாளி. இதன் விளைவுகள் உங்கள் குழந்தைகளின் வாழ்வில் பல நலன்களை இன்றும், எதிர்காலத்திலும் ஏற்படுத்தும். குழந்தைகளின் எதிரில் கணவன் மனைவியர் ஒருவருக்கு மற்றவர் மதிப்பளித்துப் பேசியுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருவருக்கும் மதிப்பைத் தருவார்கள். அவர்கள் மனதிலும், நடத்தையிலும் ஒழுக்கம் உயரும்.
குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் நடத்துவதோ, பேசுவதோ, இழித்துக் கூறுவதோ தீய பதிவுகளை அக்குழந்தைகளின் மனதில் ஏற்படுத்திவிடும். தன்னடக்கமும், பிறர்நலம் நாடுகின்ற பண்பாடும் இல்லாத தம்பதிகள் ஒழுக்கமும் மேன்மையுமுடைய மக்களைப் பெற முடியாது. மக்கட் செல்வமானது, பெற்றோருக்கு மட்டுமின்றி, குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.
ஒவ்வொருவரும் நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம் தான். ஆனால், தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும்? நிலைக்கும்? சிந்தனையை ஓட்டுங்கள் என்ன நலம் வேண்டுமோ, அந்த நலத்தைப் பெறுவதற்காக ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள். விளைவு நிச்சயம். வெற்றி, நிறைவு, மகிழ்ச்சி, அமைதி இவை உங்கட்கு அருட்பேராற்றலின் பரிசாகக் கிடைக்கும். அவற்றை நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு பரிசாகத் தரலாம்.
PHONE: +91 7904402887 / 04253-292746