There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
"ஜீவகாந்தம்" என்பது உயிர்ச் சக்தி இயங்குவதால் எழும் அலையாகும். ஒவ்வொரு உயிர் சக்தித்துகளும் தன்னைத்தானே மிக விரைவாகச் சுற்றிக் கொண்டிருப்பதால் அதிலிருந்து வீசக்கூடிய அலையானது விரிந்து கொண்டே இருக்கும். அவை தோன்றிக் கொண்டேயும் இருக்கும். ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப ஜீவகாந்த அழுத்தம் நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் இருக்கும் வரையில் உடலில் தான் உள்ள சிற்றறைகளின் அடுக்குக் குலையாமல், இரத்த ஓட்டம், காற்று ஓட்டம் வெப்ப ஓட்டம் இம்மூன்றும் சிதறாது. ஒழுங்காக ஓடி உயிருக்கும் உடலுக்கும் இடையே உறவை நிலைக்கச் செய்கிறது.
எனவே உடலைத்தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை. ஜீவகாந்தத்தைப் பெருக்க வேண்டுமெனில் அதற்குத் தக்க எண்ணிக்கையுள்ள உயிர்த்துகள்கள் தேவை உயிர்த்துகள்களோ விந்து நாத திரவத்தின் அளவையும் தன்மையையும் ஒத்திருக்கும். போதிய அளவு (ஆண்)விந்து அல்லது (பெண்) இருந்தால் நாதம் தான் உடலை நடத்த ஏற்ற ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உயிர்ச்சக்தித்துகள்கள் நிலைத்திருக்கும்.
விந்து நாதத்தை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தியாகும். இந்த ஜீவகாந்தமானது, இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம். காற்றோட்டத்தால் பல மடங்காகப் பெருகிப் பரவி மூளையால் உணர்தல், இரசித்தல், நினைத்தல் என்ற விளைவுகளாகவும், உடலியக்கமாகவும் மற்றொரு பகுதி மனஅலைகளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித காந்த சக்தியை எந்தெந்த வழிகளில் குறைத்துக் கொள்கிறோம் (அ) செலவழிக்கிறோம்?
கோபம், பொறாமை, பயம், வஞ்சம், பந்துக்கள், பாசம். பொருள் பற்று, கவலை, விருப்பு, வெறுப்பு, பேராசை, காமம் முதலிய எண்ண இயக்கங்கள் உடல் காந்த சக்தியைப் பெரும் அளவில் குறைத்துவிடுகின்றன.
அறிவானது கொண்டு ஐம்புலன்களைக் செயலாற்றும் போது, அந்த மனித காந்த சக்தியே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்பவைகளாகத் தன்மாற்றமடைந்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்றவாறு எழுச்சி பெற்று ஒரு அளவில் உடல் காந்த சக்தி செலவாகின்றது. எனவே இந்த உயிர்ச்சக்தியை, மனித காந்த சக்தியைத் தன் நிலைமைக்கு வீழ்ச்சி ஏற்படாதவாறு பாதுகாக்கவும், அறிவின் ஆற்றலையும், உடல் வலிவையும், ஆக்கத் துறைக்கே பயன்படுமாறு பண்படுத்தல், பயன்படுத்தல், ஒருமை நிலையில் அறிவு நிற்கப் பழகுதலும் வேண்டும்.
ஜீவகாந்த சக்தியை அதிகரிப்பது எப்படி? தவம் ஒன்றே அதற்கு வழி. தவத்தால் அதிகரிக்கும் மனித காந்த சக்தியைக் கொண்டு அறிவின் ஓர்மைப் பழக்கம், கற்பு, ஒழுக்கம், நல்லோர் நட்பு, நல்லோர் ஸ்பரிசம், தன்பால் அன்புடையோர் அளிக்கும் சுவையான, மிதமான ஆகாரம், பேராதார நிலையை நோக்கி அறிவு நிற்கும் பழக்கம், மிதமான முறையான சுவாசாப்பியாசம், இவைகளால் மனித காந்த சக்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் கூடிக் கொண்டே இருக்கும்.
கருதவம் மிக அவசியம். கருவின் இயக்கத்தையே உள்ளுணர்வாகப் பெற்று அவ்வுணர்விலேயே லயித்து ஒன்றி ஒன்றி நின்று, அறிவின் இருவித இயக்க நிலைகளாகிய பேரறிவு (Conscious) சிற்றறிவு (Sub Conscious) என்பவற்றின் சலனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தலும், மௌனமாக நிற்கப்பழகுவதும் கருதவம் ஆகும்.
கரு என்பது பிரபஞ்சத்தில் மிகச் சிறந்த உயர்ந்த பொருள். அதைத் தான் ஜீவாத்மா என்றும் ஜீவன் என்றும் சொல்லுகிறோம். இதை ஆரம்பமாகக் கொண்டே எந்த உடலும் தோன்றுகிறது. அறிவிற்கும் உடலுக்கும் அதுவே மூலமாகும். உடலுக்கும் அறிவுக்கும் மூலமாக உள்ள உயிரில் நினைவை நிறுத்தி அறிவு எழும் இடத்திலேயே அதை வசப்படுத்தும் முறைதான், கருதவம் அல்லது சுக்கிலத் தியானம் என்று வழங்கப்படுகிறது.
இந்தத் தவம், இழக்கும் உயிர்ச்சக்தியைக் கூட்டிக் கொள்ளவும், இனி வீணாக்காமல் காக்கவும், அறிவிலே தெளிவும், உறுதியும், நுட்பமும் பெற்று உலக வாழ்விலும் ஆன்மீகத்திலும் மனிதனுக்கு உயர்வை அளிக்க வல்லதாகும். மேலும் விழிப்பு நிலைபெற்று, தற்சோதனைப் பயிற்சி முறையால், வினைத்தூய்மையும் மனத்தூய்மையும் உண்டாகி அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமை உணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக அமையும்.
எனவே மனவளக்கலை பயிற்சிகளினால் உயிராற்றலின் செலவு குறைக்கப்படுகின்றது. விழிப்பு நிலை உயர்கின்றது. ஆராய்ச்சித் திறன் பெருகுகிறது. ஒழுக்க உணர்வு இயல்பாகின்றது. வாழ்வில் துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும், நிறைவும் கிட்டுகிறது.
PHONE: +91 7904402887 / 04253-292746