There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
திட்டமிட்டுச் செயல்புரியும் பெருங்கணக்கு
தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றின் உந்துதலால், தன்னை மறந்து புலன் வழி நின்று வாழும் மயக்க நிலையிலிருந்து விடுபட்டு, அறிவின் தெளிவோடு வாழ்வின் பயன் உணர்ந்து புலன்களைக் கருவிகளாகக் கொண்டு விழிப்பு நிலையில் வாழும் பேறு பெற்றிருக்கிறோம். மெய் விளக்கத் தவத்தால் ஆன்மலயம், அறிவின் விழிப்பு, விளைவைக் கணித்துத் திட்டமிட்டுச் செயல்புரியும் பெருங்கணக்கு இவை நமக்கு நாளுக்கு நாள் இயல்பாக ஓங்கி வருகின்றன.
இவ்வுயர் பேற்றினைக் கொண்டு நாம் சிறப்பாகவும் வளமுடனும் வாழ வேண்டும். பிறரையும் கூட நம்மால் இயன்ற வரையில் நலமோடு வாழ வைக்க வேண்டும். வாழும் மக்களுக்கும் வருங்கால உலகுக்கும் நாம் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும். இத்தகைய பொறுப்புகள் நமக்கு இருக்கின்றன. இப்பொறுப்புகளை நமது கடமையாகக் கொண்டு நாம் செயலாற்றி வாழ வேண்டும்.
மக்களுடன் ஒட்டிப் பேணும் உறவு
பொருள்வளம், ஒழுக்கம், இறையுணர்வு மறவாத மனநிலை, தொண்டு என்ற நான்கு பண்புகளும் மனிதனின் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாத தேவைகள். மயக்கமுற்ற உலகில் பல தரப்பட்ட மக்களுடன் ஒட்டி உறவு பூண்டு நாம் கடமையாற்றி வருகிறோம். இதனால், இந்த நான்கு பண்புகளையும் காப்பது மிகவும் கடினம்தான் என்றாலும் நாம் மதிப்பு மிக்க நற்பண்புகளைக் காத்தேயாக வேண்டும். அதுவே நமது தலையாய கடமை. இவற்றில், பொருளாதாரத் துறையில் வளம் பெற வேண்டியது பற்றி முதலில் சிந்திப்போம்.
வரவுக்குட்பட்டுச் செலவை வரையறுத்து வாழ்வதிலும், தேவையின் அவசியமுணர்ந்து பொருள் பெற்றுத் துய்ப்பதிலும் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. நமது நாட்டில் சொத்துக்களை இழந்தும், கடன்பட்டும் தவித்துக் கொண்டு வருந்துகின்ற பல குடும்பங்களைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்து பார்த்தோமானால் திருமணச் செலவும், காப்பி குடிக்கும் பழக்கத்தாலாகிய செலவும் - பெரும் அளவில் கடனுக்குக் காரணமாக இருக்கக் காண்கிறோம்.
திருமணச் செலவு என்பது இன்று சமுதாயம் முழுமையும் பரவித் துன்புறுத்தும் ஒரு பெரும் கொடிய நோயாக வளர்ந்துவிட்டது. இதனை நம் போன்ற அறிவறிந்த மக்கள் கூடி, ஆன்மீகச் சங்கங்களின் மூலம் நன்கு ஆராய்ந்து, உயரிய நல்ல முறைகளை வகுத்துக் கொண்டு கட்டுப்பாட்டோடு செயல்புரிந்து தகுந்து மாற்றங்களை வரவழைக்க வேண்டும்.
அறிவின் உயர்வுக்குரிய சான்று என்ன?
காப்பிச் செலவு அப்படியல்ல. தனித்தனியே தனிமனிதன் தன் அளவிலும், குடும்ப அளவிலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நீண்ட காலமாக, பல ஆண்டுகளாகக் குடித்து வந்த காப்பிப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று ஒரு திகைப்பு எழலாம்.
அறிவின் உயர்வு இங்கு தான் சான்று காட்ட வேண்டும். நாம் பல நலன்களைப் பெற விரும்புகிறோம். அவற்றின் மூலம் வாழ்வில் வளம் பெற்று முன்னேற முயற்சிக்கிறோம். இம்முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால் தடைகளைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.
தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஒரு சாதாரணப் பொது அறிவுதான். நாம் பொருள் துறையில் நிறைவு பெற விழைகிறோம். அதற்குக் காப்பி குடிக்கும் பழக்கம் தடையாக உள்ளது எனக் கண்டால் அதை மாற்றத் தானே வேண்டும்? ஒரு குடும்பத்தின் வருவாய் ரூபாய் 400ஃ- என்று வைத்துக் கொள்வோம். காப்பிக்காக மட்டும் மாதம் ரூ.60ஃ- செலவாகிறதாக வைத்துக் கொள்ளுவோம். அந்தக் குடும்பத்தில் மாதம் ரூபாய் 50ஃ- துண்டு விழுந்து கொண்டே வரும். அதனால், கடன் பெருகுகின்றது. அல்லது சேமிப்பு செய்ய முடியாமலே போகின்றது.
இந்த நிலைமையில் காப்பிக் குடியை நிறுத்தினால் பொருள் துறையில் பற்றாக்குறை வராது. மேலும் சிறிது சேமித்தும் வைக்கலாம். இந்த விளக்கம் கிடைத்தவுடன் அதைச் செயலில் பின்பற்றத் தான் வேண்டும். ஒரே நாளில் காப்பிக் குடியை விட்டுவிட வேண்டாம். முடியவும் முடியாது.
ஒரு மாதகாலம் இதற்கு வரையறுத்துக் கொள்ளுங்கள். இரண்டாம் வாரம் மேலும் இரண்டு அவுன்ஸ் குறைத்து விடுங்கள். மூன்றாவது வாரத்தில் தடவைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்து விடுங்கள். காலை மாலை இதற்கென உட்கார்ந்து காப்பியால் ஏற்படும் கேடுகளையும் அதை நிறுத்தி விடுவதால் விளையும் நலன்களையும் பல தடவைகள் நினைவிற் கொண்டு உறுதிமொழியாகத் திருப்பித் திருப்பி கூறிக் கொள்ளுங்கள்.
பிறகு குறிப்பிட்ட நாள் வந்தவுடன் அடியோடு நிறுத்தி விடுங்கள். காப்பிக் குடியை நிறுத்தி விட்டால் சிலருக்கு தலைவலி வரும். காப்பி குடித்துக் கொண்டே இருக்கும் காலத்தில் தலைவலி வந்தால் என்ன செய்வீர்களோ அதையே இப்போதும் பின்பற்றுங்கள். மனைவி ஒத்துவரவில்லை, பெண்கள், பிள்ளைகள் ஒத்து வரவில்லை என்ற சாக்குப் போக்கு உங்கள் உறுதியற்ற நிலையைத் தான் வெளிப்படுத்தும். ஒருவர் முதலில் காபி குடியின் பிடியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அன்போடு அடிக்கடிக் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் நன்முறையில் எடுத்துக் கூறலாம். சில நாட்களில் அல்லது மாதங்களில் முழு வெற்றி கிட்டும்.
இவ்வாறு தனது ஒரு பழக்கம் வேண்டாத ஒன்று என்று கண்டால் அதை மாற்ற முயன்று, மாற்றிக் கொள்வதுதான் அறிவின் சிறப்பு. மெய் விளக்கத் தவத்தால் (மனவளக்கலையால்) பெறுகின்ற மனோ வலிவு இதற்குக் கூட உதவாவிட்டால் நீங்கள் வேறு எந்த ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து விட முடியும்? சிந்தித்துச் செயலாற்றுங்கள்.
PHONE: +91 7904402887 / 04253-292746