There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
கடவுள் இருக்கின்றாரா? எனும் தலைப்பில் வேதாத்திரி மகரிஷி கூறிய சிந்தனைகளை இப்பதிவில் காண்போம்.
கடவுள் இருக்கின்றார். அவரை உணரவும் முடியும், உணர்ந்த பின் காணவும் முடியும். கடவுள் என்பது தான் மெய்ப்பொருளாகும். பொருளின்றி நிகழ்ச்சி இல்லை.
நாம் காணும் தோற்றங்கள், நிகழ்ச்சிகள், அனைத்திற்கும் பொருள் நிலை ஒன்றே. அப்பொருள் மெய்ப்பொருள். அணுக்களின் திரட்சியால் ஆகிய தோற்றங்களைப் பொருள் எனக் கூறுவது புலன் மயக்கில் வந்த விளைவு. தோற்றங்கள் (Masses) அனைத்தும் அணுக்கள் கூடிய நிகழ்ச்சிகளே அன்றிப் பொருள் அல்ல.
“பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு”
என்ற குறளைச் சிந்தித்துப் பாருங்கள். மெய்ப்பொருளாகிய, கடவுளை உணர வேண்டுமானால், பேரியக்கத் தொடர்களம் (Universe) என்னும் பிரபஞ்ச நிகழ்ச்சிகளில் பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை இவற்றைப் பிரித்து உணர வேண்டும்.
ஒரு பழத்தில் தெய்வத்தைக் காணலாம்:
ஒரு பழத்தை எடுத்துக் கொண்டால் அது பொருளா? அல்லது நிகழ்ச்சியா? புலன் அளவில் அது ஒரு பொருளாகவே மதிக்கப்படுகின்றது என்பது உண்மைதான். ஆராய்ச்சி அறிவிற்கு வாருங்கள். பழத்தை நெருப்பில் இட்டால் அது என்னவாகும்? தீய்ந்து, கருகி, சாம்பலாகிவிடும். பலவித அணுக்கள் ஒன்று கூடி, திரட்சி நிலையில் பழமாகத் தோன்றின. நெருப்பின் தூண்டுதலால் அவை இயக்க விரைவு பெற்று விடுதலை அடைந்து, காற்றில் மிதந்து பறந்தோடிப் போயின.
பழத்தில் இருந்த அணுக்கள் அழிந்து போகவில்லை. பிரிந்து பறந்து போயின. பழம் என்ற காட்சி மறைந்து விட்டது. இப்போது கூறுங்கள். பழம் நிகழ்ச்சியா? பொருளா? அணுக்களின் கூட்டுக் காட்சியாகிய பழம் என்ற தோற்றமானது ஒரு நிகழ்ச்சி தான் என்பது விடையாகக் கிடைக்கின்றது. அவ்வாறெனில், பழம் என்ற காட்சிக்குப் பொருள் நிலை என்ன? அக்காட்சியில் அடங்கிய அணுதான் பொருளா? அதையும் ஆராய்வோம். இயங்கிக் கொண்டேயும், ஒன்றோடொன்று கூடித் திரண்டும், பின் பிரிந்தும், நிலையற்று இயங்கிக் கொண்டே இருக்கின்ற ஓர் இயக்க மூலத்துகளே அணு. அதன் இயக்க விரைவிற்குத் தகுந்தபடிப் பிறவொன்றைத் தள்ளி நிறுத்தி வைக்கின்ற (Repulsive force) ஆற்றலே அது.
அத்தகைய அணுக்கள் கூட்டு சேர்ந்தது எப்படி என ஆராய்வோம். அந்தக் கூட்டத்தை இணைத்து வைக்கும் கவாச்சி ஆற்றல் (Attractive Force) எது எனவும் சிந்திப்போம். அணுவில் உள்ள இயக்கத்தைக் கழித்து விட்டுப் பார்த்தால், அது என்னவாக இருக்கும் என்று யூகித்துப் பார்ப்போம். ஒன்றுமே மிஞ்சாது எனத் தெரிய வரும். அணு என்ற ஒன்று வெளியோடு வெளியாகிக் கலந்து விடும். அவ்வெளியே தான் உண்மையான பொருள். அதுவே இயக்கம் அல்லது எழுச்சி நிலையினில் அணுவாகும். வெளியேதான் அணுவுமாகி, அணுவைத் தாங்கியும், சேர்த்துப் பிணைத்தும், இயங்கை வைத்துக் கொண்டும் இருக்கின்ற பேராதாரக் கவர்ச்சி (Attractive) ஆற்றலாகவும் (அந்த வெளியே) விளங்குகிறது.
அகநோக்குப் பயிற்சியால் தான் தெய்வ தரிசனம் கிட்டும்:
இந்த ஆகர்ஷண சக்தி தான், தெய்வம் என்றும், கடவுள் என்றும், பேராதாரம் என்றும், ஆதி என்றும், அனாதி என்றும் பல பெயரால் வழங்கப் பெறுகின்றது. உண்மையில் இந்தப் பொருளே மெய்ப்பொருள் (Truth) ஆகும். புலனளவில் - இயக்கத்தோடு தோற்றத்தை – கருத்தோடு நிகழ்ச்சியை – காலம், தூரம், பருமன், விரைவு (Time, Distance, Volume, force) என்ற நான்கு அளவுக் கணக்குகளால், ஒப்பிட்டு உணர்கின்ற அறிவினால், புலன்களின் மூலம் இம்மெய்ப்பொருளை உணர்ந்து விட முடியாது.
அறிவைப் புலன்களிலிருந்தும் ஒடுக்கி, அதன் இயக்க மூல ஆற்றலாகிய உயிரின் நிலையை முதலில் உணர வேண்டும். மேலும் ஒடுக்கி, விரைவை அடியோடு நிறுத்தி, நிலைபேறு பெற்றால், அதுவே வெளியாகி, மெய்ப்பொருள் ஆகும். இது முறையான அகநோக்குப் பயிற்சியால் தான் சாத்தியாகும், கைவல்யமாகும். அறிவே உயிராக, உயிரே மெய்ப்பொருளாக, உணரப் பெறுவதற்கு நீண்ட காலப் பயிற்சியும், சிந்தனையும் வேண்டும். அத்தகைய அனுபவத்தில், மெய்ப்பொருளே உயிர் என்ற நுண் அணுவாகி, அவ்வணுக்களின் திரட்சி நிலையாகிய உடலில் ஊடுறுவி இயங்கும் போது உணர்ச்சியாகி, அனுபவத்தால் மனமாகி, ஆராய்ச்சியால் அறிவாகி, மலர்ந்து இயங்கும் பேருண்மை அறிவிற்கு எட்டும். அந்நிலையில், எந்தத் தோற்றத்திலும் மெய்ப்பொருள் நிலையானது அறிவிற்கு விளங்கிவிடும்.
தெய்வம் இல்லாத இடமே இல்லை:
“ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்”
என்ற குறளையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கவர்ச்சி ஆற்றலான மெய்ப்பொருளானது, எழுச்சி ஆற்றலாக மலர்ந்த நுண் இயக்க நிலையமே அணு.
அவ்வணுக்களினது திரட்சித் தோற்றமே இப்பழம். புலன்களால் பழத்தைக் காண்கிறோம். சிந்தனை அறிவினால், பலகோடி அணுக்களின் இணைப்பியக்கக் காட்சியாக இந்தப் பழத்தை உணர்கின்றோம். மேலும் ஆழ்ந்து சிந்திக்கின்ற போது, மெய்ப்பொருளினுடைய இயக்க ஆற்றலாகவே அணுக்களின் நிலை அறிவிற்கு விளங்கும். இப்பொழுது முழுமையாக ஒரு தெளிவு வருகின்றது. ஆகர்ஷண சக்தியாகிய மெய்ப்பொருள் நுண்ணிய எழுச்சி ஆற்றலாகிய ‘அணு’ என்ற நிலையைப் பெற்று, திரட்சி நிலையில் பழமாகக் காட்சி ஆகின்றது. மெய்ப் பொருளாகிய கடவுளைத் தான், அதன் நிகழ்ச்சி வேறுபட்டால், பழமாகக் காண்கிறோம். நாம் புலனால் காண்பது பழம். அதில் அறிவால் காண்பது தெய்வம்.
எனவே, நாம் கடவுளைத் தான் பல காட்சி நிலைகளில் தோற்றங்களாகக் காண்கிறோம். எத்தோற்றத்திற்கும் மூலமாகப் பொருள் நிலையானது (Primordial State) கடவுளே ஆகும். ஒரே பொருளால் ஆன பல கோடி இயக்க நிலைகளைக் குறிப்பிட்டுக் கருத்துக்கு உணர்த்தும் முறையே பல பெயர்கள், ஆகர்ஷண சக்தியை உணர்ந்து கொண்டால் அதுவே தெய்வம்.
அது இல்லாத இடமே இல்லை, என்று சொல்லலாம். அதுவே தான் எல்லாம் வல்ல பேராதாரமாகவும் விளங்குகிறது. அதுவே தெய்வம், அதுவே மெய்ப்பொருள். அதுவே இயக்கங்கட்கு மூலம், தோற்றங்கட்குக் காரணம். இந்த ஆற்றல் உண்டு என்று ஏற்றுக் கொள்வீர்கள் எனில், தெய்வத்தின் இருப்பையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எந்தப் பெயரால் அழைத்தால் என்ன? பொருள் ஒன்றுதானே? இந்தச் சிந்தனையின் முடிவில் தெய்வமானது அதன் அசல் நிலையான அரூப நிலையில் உணரவும் பெறுகின்றது. பல கோடி காட்சிகளாக அதுவே காணவும் பெறுகின்றது. ஆகவே குண்டலினி யோகப் பயிற்சிகளால் கடவுளை (இறைநிலையை) மிகவும் சுலபமாக உணரலாம்.
PHONE: +91 7904402887 / 04253-292746