There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
பண்பாடு என்பது மனித இன வாழ்க்கை நெறி முறைகளைக் குறிக்கின்ற ஒரு சொல். இந்தச் சொல்லில் ஆழமான, கால நீளமான கருத்துக்கள் அடங்கியுள்ளன. அவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ள வேண்டியது வாழ்ந்து வரும் மனித குலத்தில் சிந்தனையாற்றல் மிகுந்தவர்களின் கடமை. மனித குலம் ஆதிகால மனித வாழ்க்கையில் இருந்து தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. காலத்தாலும், சூழ்நிலைகளின் தேவையாலும் அவ்வப்போது மனிதனிடம் சில செயல்கள் விளைந்தன. அந்த செயல்களின் அனுபவங்களைக் கொண்டு கருத்துக்களும் உருவாயின.
மனித குல வாழ்வில் எத்தனை காலங்கள் கடந்து விட்டன என்பதை யூகிப்போம். நெருப்பைக் கூடக் கண்டுபிடிக்காத காலத்தில், தானே தனக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியாத காலத்தில் மனிதன் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தான். அப்பொழுது மற்றோர் உயிரைக் கொன்று, தனது உணவாகக் கொண்டு அந்த விலங்கினத்தைப் போன்றே தானும் வாழ்ந்தான். நாளுக்கு நாள் மேன்மேலும் சிந்தனை உயர, ஒரு செடி எப்படித் தோன்றி வளர்ந்து காய் கனிகளைக் கொடுக்கிறது என்பதைக் கண்காணித்து அறிந்து கொண்டான். விதையிலிருந்துதான் ஒரு செடியோ, மரமோ தோன்றுகிறது என்பதை உணர்ந்தவன், தானும் விதையைப் பூமியிலிட்டுப் பார்த்தான். செடி முளைக்கவில்லை. சந்தர்ப்பவசமாக மழை பொழிந்தது. அவன் விதையிட்ட மண்ணில் ஈரம் கசிந்தது. செடி வளரத் தொடங்கியது.
இங்குதான் முதன்முதலில் விவசாயத்தைப் பற்றிய ஒரு விஞ்ஞானம் மனிதனிடம் உருவாயிற்று. தனக்குத் தேவையான உணவுப் பொருட்களை விளைவிக்கக்கூடிய செடிகளையும், விதைகளையும் கண்டெடுத்து, விதைத்து, நீர்ஊற்றி, அது முளைத்துத் தழைத்துக் காய், பழம் இவற்றைக் கொடுப்பது கண்டு, விவசாயத்தின் மூலம் மனிதன் வாழ்க்கை நடத்தத் தொடங்கினான். வாழ்விலே பெரிய மாற்றம். அவன் வாழ்க்கைப் பண்பாட்டிலே ஓர் உயர்வு வந்தது.
விதையைப் பூமியிலிட்டு, அது செடியாகிப் பயன் தருகின்ற வரையில் அறிவால் உணர்ந்து அதைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாயிற்று. வெயில், மழை, பனி, காற்று இவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கொம்புகளையும், இலைகளையும் கொண்டு பந்தல் போட்டுக் கொண்டான். அத்தகைய பந்தல்களின் சீர்திருத்தச் சிறப்புகளே இன்று நாம் காணுகின்ற பலவகையான கட்டிட அமைப்புகளுடைய வீடுகளாகும்.
இத்தகைய மாற்றங்கள் நிகழுகின்ற போது, ஒரு மனிதனே அவனது அனைத்து வேலைகளையும் செய்து கொள்ள முடியாது. அதனால் பல நண்பர்களை ஒன்று சேர்த்துக் கூட்டுறவாகவே பொருட்களை உற்பத்தி செய்யவும், அவற்றைப் பங்கிட்டு வாழவும் தொடங்கினான். இந்தக் கூட்டுறவில் சில பல குழப்பங்களும் எழுந்தன. அவற்றால் ஏற்பட்ட துன்பங்களைப் போக்க வேண்டும் என்று மனிதன் சிந்தித்தான்.
மக்கள் கூட்டமாககக் கூடி வாழுகின்ற போது, துன்பமும் சிக்கலும் குழப்பமும் இல்லாத முறையில் வாழ்வதற்கு ஏற்றவாறு, நெறிமுறைகளை வகுத்துக் கொண்டான். இந்த நெறிமுறைகள் தான் இன்று வரையில் உலகம் முழுவதும் வளர்ந்துள்ள ஆட்சி முறைகளும், அவற்றின் சட்டங்களுமாகும். இந்த அளவு மனித வளம் வாழ்வில் உயருகின்ற போது, அதற்குத் தக்கவாறு மனவளமும் உயர்ந்தது.
இந்தச் சிறப்பில்தான் இயற்கையைப் பற்றி மனிதன், ஆராய முற்பட்டான். அவன் செயலுக்கும், முயற்சிக்கும் கட்டுப்படாமலும் அவற்றுக்கு மேலாகவும் சில விளைவுகள் தோன்றுவதைக் கண்டான். அவைகளை அனுபவித்து நலம் தீது உணர்ந்தான். இவ்வாறு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அற்புத நிகழ்ச்சிகளுக்குக் காரணமான ஆற்றல் ஒன்று இருக்க வேண்டும் என்று இந்தக் கட்டத்தில் தான் நினைத்தான். ஆராய்ச்சியில் பல தலைமுறைகள் கடந்த பின்னர் அவ்வாறு மதிப்புடைய ஒரு ஆற்றல் இருக்கத்தான் வேண்டும் என்று நிர்ணயித்து உணர்ந்து, அத்தகைய ஆற்றலுக்குக் கடவுள் என்று மனிதன் பெயர் வைத்துக் கொண்டான்.
இந்தப் பேராற்றல் புலன்களுக்கு எட்டாததாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை யூகித்து உணர்ந்தவன் தோற்றங்களையும், நிகழ்ச்சிகளையும் காணுகின்ற போது அவைகளுக்கு உட்புறமாக இயங்குகின்ற உண்மையை உணர வேண்டிய முயற்சியை கட+ உள் = கடவுள் என்று கூறி, மனதுக்கு உட்புறமாகச் சென்று ஆராய வேண்டும் என்ற கருத்தில்தான் அந்தப் பேராற்றலுக்குக் கடவுள் என்று மனிதன் பெயரிட்டுக் கொண்டான்.
கடவுள் என்றதோர் ஆற்றலைத் தேடுவதில் எல்லாருடைய அறிவும் ஒரே விதமான கூர்மையில், தெளிவில் அமையவில்லை. அவரவர்களுக்கு, அந்தந்த இடங்களில் வாழ்ந்த சிந்தனையாளர்களுக்கு, வெவ்வேறு வகையில் தோன்றிய இந்த உட்புறமான ஆற்றலுக்கு, அவரவர்களின் யூகத்திற்கெட்டிய பெயர்களையே, ஆங்காங்கு நிலவி வந்த மொழியில், வைத்துக் கொண்டார்கள். இங்கு தான் கடவுள் என்ற உண்மை பேராற்றல் பல கடவுள்களாக மனிதனுயை கருத்துக்குப் பிரிந்து அமைந்து விட்டது. எனினும் இந்த ஆராய்ச்சி செய்து வந்த சிந்தனையாளர்கள் அதற்கேற்றவாறு உதவுகின்ற வகையில் சில பல வாழ்க்கை நெறிமுறைகளை உணர்ந்து கொண்டார்கள்.
PHONE: +91 7904402887 / 04253-292746