There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும், உற்ற வயது வருகின்ற போது, அவர்களுக்கு வாழ்க்கைத் துணை அவசியம். அறிவுக்கும், கடமைக்கும் ஒத்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்து, தாங்களே திருமணம் செய்து கொள்ளக்கூடிய அனுபவம் இளைஞர்களிடம் அரிதாக இருக்கும். ஆகவே, வாழ்க்கை அனுபவத்தில் உயர்ந்த பெற்றோர் மூலமாகவே ஓர் ஆணோ, பெண்ணோ வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். இல்லற வாழ்வைப் பற்றி எல்லோரும் ஆராய்ந்து தெளிந்து வாழ வேண்டியது மிக அவசியம்.
வேதாத்திரி மகரிஷி இல்லற வாழ்வைப் பற்றி கூறும் போது கணவன், மனைவி உறவு மிகவும் முக்கியமானது. இந்த உறவுக்கு ஏற்றவாறு ஒருவருக்கொருவர் தங்களை மற்றவர் நலத்திற்காக தங்களின் வாழ்க்கைத் துணையின் நலத்திற்காக – முற்றிலும் தன்னை அர்ப்பணித்து வாழ வேண்டும். இத்தகைய இல்லற வாழ்வானது காலத்திற்குக் காலம் மக்கள் பண்பாட்டின் உயர்வுக்கும் சிறப்புக்கும் ஏற்ப மாறிக் கொண்டே வருகிறது என்று கூறுகிறார்
ஆதிகால மனித வாழ்க்கைக்கும், இன்று விஞ்ஞானம் வரையில் வளர்ந்துள்ள அறிவின் சிறப்பு மற்றும், செயல் திறமைகள் மிகுந்துள்ள இக்கால நிலைமைக்கும் எத்தனையோ மாறுதல்கள் உள்ளன. இதற்கு ஏற்பக் கணவன் மனைவி உறவில் தக்க மாற்றங்கள் ஏற்படும். அந்தத் தேவையை உணர்ந்தும், மதித்தும் செயல்புரிந்தும் வாழ வேண்டியது ஆண், பெண் இருவருடைய கடமையும் ஆகும்.
முற்காலத்தில், மனிதனுடைய வாழ்வு காட்டுப்புறங்களிலேயே பெரும்பாலும் நடந்து வந்தது. உணவுப் பொருட்களின் உற்பத்தி என்பது இல்லாத காலமாக அது இருந்தது. அப்பொழுது விலங்கினங்களை வேட்டையாடி அவற்றின் உடல்களையே உணவாகக் கொண்டு வாழ்ந்த போது, இத்தகைய வன்செயல்கள் பெண்களுக்கு வேண்டாம் என்று பெண்களை ஒதுக்கி வைத்தார்கள்.
‘பெண்களெல்லாம் வீட்டிற்குள்ளாகவே இருக்க வேண்டும், கணவன் கொண்டு வருகின்ற உணவை இருவரும் சமைத்து உண்ண வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என்ற முறையில் வாழ்வு அப்போது நடந்து வந்தது. அதன் பிறகு நிலத்தையும், நீரையும் கொண்டு உணவு வித்துக்களை விதைத்து பயிர் செய்து, அந்த விளைவுகளை உணவாகக் கொண்டு வாழ்ந்த காலம் வந்தது.
இந்த நிலையில் பெண்களின் வாழ்வில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. கணவனோடு சென்று உணவையும் தனது உழைப்பையும் செலுத்தி ஒத்து நடந்து கொள்ள வேண்டிய காலம் அது. அதன் பிறகு விஞ்ஞானக் காலம். பொருள் உற்பத்தியில் உடல் கருவிகட்கு உபகருவிகளாகப் பல கருவிகளை ஏற்படுத்திக் கொண்டு, விஞ்ஞான முறையில் ஆற்றலைக் கூட்டிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்த காலம்.
இன்று பெரும்பாலும் எந்தத் தொழிலையும் ஆண், பெண் எவரொருவருமே செய்யலாம், செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. மேலும் பள்ளிக் கூடங்களும், கலாசாலைகளும் பெருகி ஆண்களும், பெண்களும் விஞ்ஞான அறிவு பெற்று வாழ்கின்ற காலம் இந்த விஞ்ஞானக் காலம். இத்தகைய கல்வி செழித்து வந்தபோதுதான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாழ்க்கையில் சமமான பொறுப்பு வந்துவிட்டது.
விலங்கினங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலத்தில், ஏதேனும் ஒரு கொடிய விலங்கினைக் கொன்று, அதன் பல்லை எடுத்து வந்து பலர் முன்பாக ஆண் தன்னுடைய வீரத்தை எல்லோருக்கும் உணர்த்தி, அதன் பிறகே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய பழக்கமும் வழக்கமும் ஏற்பட்டன. காட்டுப்புற வாழ்க்கைக்கு மாறாக, உணவு உற்பத்தி செய்து உண்ணக்கூடிய நாட்டுப்புற வாழ்க்கை ஏற்பட்ட பிறகு, பெண்களின் பொறுப்பு அதிகமாகிவிட்டது.
விஞ்ஞானக் கருவிகள் மூலம் பொருட்கள் உற்பத்தியாகின்ற நிலை ஏற்பட்ட பிறகு, வாழ்க்கையில் பொருள் பெறுகின்ற வழியில் ஆண், பெண் இருவரும் சமமான பங்கு உடையவர்களாக மாறி விட்டார்கள்.
அடுத்த பகுதியில் தொடரும்..... https://www.kundaliniyoga.edu.in/blog/Kudumbathil-Pengalin-Nilai-Uyara-Vendum-Part2
PHONE: +91 7904402887 / 04253-292746