There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
மனவளக்கலையில் பயிற்றுவிக்கப்படும் தவமானது எளியமுறை குண்டலினி யோக தியானம் எனப்படும். குண்டம் என்றால் நெருப்பு. அலி என்றால் ஆண் பெண் அற்ற நிலை. அதாவது ஆணுமல்லாத பெண்ணுமல்லாத ஒரு சக்தி, அல்லது ஆற்றல். இதனை செயலுக்கு வராமல் மூலாதாரத்தில் வளைந்து உறங்கிக் கிடக்கும் அதிசக்தி வாய்ந்த நாகத்திற்கு ஒப்பிட்டு யோக நூல்கள் பகர்கின்றன. மூலாதாரம் எனப்படுவது நமது முதுகுத்தண்டின் அடியில் உட்புறமாக ஆசன வாய்க்கு ஒரு அங்குலம் மேலே உள்ள பகுதியாகும். இந்த சக்தியையே பக்தர்கள் வேதா சக்தியென்றும், மனோதத்துவ நிபுணர்கள் மனித காந்த சக்தியென்றும், யோகிகள் அதனை தெய்வீக ஆற்றலான குண்டலினி சக்தியென்றும் சொல்வார்கள். இதுவே நமது உயிர் சக்தியாகும்.
வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது "உயிரின் மீது மனத்தை நிலை நிறுத்துவதே எளியமுறை குண்டலினி யோக தியான முறையாகும்" என்கிறார். ஒடிக்கொண்டே இருக்கும் உயிரின் மீது எப்படி மனதை செலுத்துவது என்ற கேள்வி எழலாம். ஆனால் அது சாத்தியமே. ஏனெனில் உயிருக்கு நமது உடலில் இயக்க மையம் உண்டு. உடல் முழுவதும் இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தாலும் அதற்கு இயக்க மையமாக இருதயம் இருப்பது போல், உடல் முழுவதும் காற்று ஓடிக்கொண்டு இருந்தாலும் அதற்கு இயக்க மையமாக நுரையீரல்கள் இருப்பதுபோல், இந்த உயிருக்கும் இயக்க மையம் உண்டு. உயிரின் இயக்க மையம் பொதுவாக பெரும்பாலான மனிதருக்கு மூலாதாரம் என்ற பால் உணர்ச்சிக்குரிய சுரப்பியிலே அடிப்படையாக நின்று உடல் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த மையமானது அங்கு இருக்கும் வரை உயிரின் இருப்பு மனதிற்கு தெரிவதில்லை. அதனை அங்கிருந்து இடம் மாற்றி நெற்றிக்கண் அல்லது புருவ மத்தியில் வைக்கும்போது உயிரானது ஒரு ஊறுணர்ச்சியாக மனதிற்கு புலப்படுகிறது.
இவ்வாறு இடம் மாற்றுவதற்கு முற்காலத்தில் சுவாசப் பயிற்சி, மந்திர ஒலி எழுப்புதல் போன்ற முறைகள் மூலம் மூலாதாரத்தில் இருந்து ஒவ்வொரு மையமாக இடம் மாற்றி ஆக்கினைச் சக்கரம் எனப்படும் புருவ மத்திக்கு கொண்டு வருவார்கள். இதற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை பிரமச்சரியம் அனுசரிக்க வேண்டும்
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது உயிர்ச்சக்தி மீண்டும் மூலாதாரத்திற்கு இறங்கி விடுவதால் அவர்களால் இந்த முறையை பின்பற்ற முடியாது. இன்றைய சூழ்நிலைக்கு அவ்வாறான பயிற்சிகள் கடினமானவை. நடைமுறைக்கு ஒத்து வராதவை. ஆனால் மன அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்க்கைக்கு மனவளக்கலைப்பயிற்சிகள் அவசியம் தேவை. இல்லையென்றால் மனக்குழப்பங்களும், கலக்கங்களும் ஏற்பட்டு அதன் விளைவாக தொல்லையும் துன்பமும் பெருகுவதைப் பார்க்கிறோம். இந்த குண்டலினி யோகப் பயிற்சியை இன்றைய விஞ்ஞான காலத்திற்கு ஏற்ற வகையில், குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள எல்லோரும், எம்மதத்தவரும், 14 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் பின்பற்றுகிற வகையில் எளிமைப்படுத்தித் தந்துள்ளார்கள் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இந்த முறையில் ஏற்கனவே குண்டலினி சக்தி எழுப்பப் பெற்ற, முறையாக பயிற்றப்பட்ட ஆசிரியர், தனது தவ ஆற்றலைப் பயன்படுத்தி, தனது உயிர்ச்சக்தியைக் கொண்டு அழுத்தம் கொடுத்து பயிற்சியாளாரின் முதுகு தண்டு வழியாக, காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல், ஒருவரது உயிர்ச்சக்தியை மூலாதாரத்திலிருந்து மெதுவாக மேலே கொண்டு வந்து புருவ மத்தியில் நிறுத்துகிறார். இது ஆக்கினை தீட்சை எனப்படும். அங்கேயே கவனிக்கும் பயிற்சியாளாரின் மனதிற்கு உயிரின் இயக்கம் ஒரு நுண்ணிய அழுத்த உணர்வாக கிடைக்கும். தொடர்ந்து செய்து வர நன்றாக விளங்கும். இப்படியாக மனவளக்கலையில் பின்வரும் தவங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றன.
ஆக்கினைத் தவம்: குண்டலினி யோகத்தில் முதல் படி இது. இந்த தீட்சையை ஆசிரியர் தொட்டுக் கொடுப்பதால் இதற்கு ஸ்பரிச தீட்சை எனப்படும்.
ஆக்கினைச் சக்கரத்தை "மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில்' என்று யோக நூல்கள் பகர்கின்றன. இந்த தவத்தினால் உயிருக்கு விழிப்பு நிலைப் பேறு கிட்டுகின்றது. புலன்களை கடந்து நிற்கும் வல்லமை பெறுகிறது. அறிவின் திறன் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. உடல்நலம், மன நலம் ஓங்குகிறது. முகம் அழகு பெறுகிறது.
சாந்தி தவம் : எளிய முறை குண்டலினி யோகத்தில் சாந்தி தவம் மிக முக்கியமானது. மூலாதாரத்தில் உறங்கிக் கிடந்த குண்டலினி சக்தி ஆக்கினையில் இயக்கம் பெற்று சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும். அப்போது குண்டலினி சக்தியை மேலே எழுப்பியது போல் ஆசிரியர் மீண்டும் அதனை ஆக்கினையிலிருந்து மூலாதாரத்திற்கு கீழே இறக்கி விடுகிறார். எனவே இதனை இறங்குபடி தவம் என்றும் சொல்லப்படுகிறது.
தவக்கனலை இறக்கி சாந்தி தருவதால் சாந்தி தவம் என்று பெயர் பெற்றது. இதன் பிறகு பயிற்சியாளர் வேண்டும்போது குண்டலினி எனும் தனது உயிச்சக்தியை ஆக்கினையிலோ அல்லது மூலாதாரத்திலோ வைத்து தவமியற்றும் வல்லமையை பெறுகிறார். சாந்தி தவத்தின் மூலம் தவ ஆற்றல் உடல் ஆற்றலாக மாற்றம் பெறுகிறது. அது உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்புக்கும் பயன்படுகிறது. உடல்வலி, காச்சல், அஜீரணம் போன்ற சாதாரண நோய்கள் சாந்தி தவத்தால் நீங்குகின்றன. மலச்சிக்கல் விலகுகிறது.
PHONE: +91 7904402887 / 04253-292746