There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற உயர் சித்தாந்தம் கைவரப் பெற வேண்டும் என்பதே இன்றைய தேவையாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களே நாளைய ஆட்சியாளர்கள். நல்ல ஆட்சியாளர்கள் தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும். இன்றைய சமுதாயம் வளம் பெறவும், நலன் பெறவும், இளைஞர்களை சரியாக வழிநடத்த வேண்டும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டிகள் அமைய வேண்டும். பின்பற்றி நடப்பதற்கான நல்ல அனுபவங்கள் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
நமது வாழ்வின் உயர்வுக்கு, மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் பண்பாட்டை கொடுக்கக்கூடிய ஆன்மீகக் கல்வி கற்பது இக்காலக் கட்டத்திற்கு மிகவும் அவசியம் ஆகும். ஆன்மீகக் கல்வி முற்காலத்தில் குருகுல கல்வியோடு வாழ்க்கைக் கல்வியாகக் கற்பிக்கப்பட்டது. கடந்த நூற்றாண்டில் அதன் நிலை என்ன, இன்றைய நிலை என்ன? அதனால் ஏற்பட்ட இழப்புகள் என்ன? என ஆராய்ந்தால், ஆன்மீகக் கல்வி இன்றே. இப்பொழுதிலிருந்தே அனைவருக்கும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற துடிப்பு வருகிறது.
இன்றைய கல்வி, தொழில் மற்றும் தொழில்நுட்பம் என பரிணமித்துள்ளது. கல்வி என்பது எழுத்தர்களை உருவாக்கும் கல்வி என்ற நிலையிலிருந்து ஒப்பந்த பணியாளர்களை உருவாக்கும் கல்வி என்பதாக மாறி வளர்ந்துள்ளது. தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்படி எடுக்காதவர்களை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்ற அச்ச உணர்வையும், தாழ்வு மனப்பான்மையையும் நம் கல்வி முறை விதைக்கிறது. தேர்வுகளைக் கண்டு அஞ்சும் மாணவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் ஊட்டி, அவர்களை ஊக்குவிப்பதற்கு பதில், தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறாவிட்டால் அந்த மாணவனுக்கு எதிர்காலமே கிடையாது எனப் பெற்றோர்கள் அச்சுறுத்துவது சாதாரணமான விஷயமாகிவிட்டது. போட்டி நிறைந்த சமூகத்தில், தங்கள் குழந்தைகள் பின் தங்கி விடுமோ என்ற பதட்ட உணர்வுதான் அவர்களது அச்சுறுத்தலுக்குக் காரணம். இந்த பதற்றத்தின் காரணமாக சில பெற்றோர்கள் திடீரென்று கடுமையான தண்டனைகளில் இறங்கி விடுவதுண்டு.
கல்வி என்பது ஒருவனை பக்குவப்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே எழுதுவது, படிப்பது என்று இருக்கக் கூடாது. துரதிர்ஷ்டவசமாக இன்றைய நம் கல்விமுறை, வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக் கொடுப்பதில்லை. நம் கல்விமுறை மனிதனை ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ, ஆசிரியராகவோ உருவாக்குகிறது. ஆனால், மனிதனை உண்மையான மனிதனாக உருவாக்குவதில்லை.
வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல் திறமையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதால், சிந்தனை மற்றும் ஆசைகளின் முழுமையான பார்வை இல்லாததால், நாம் மேலும் மேலும் ஈவு இரக்கமற்றவர்களாக ஆக்கப்பட்டோம். கல்வியின் குறிக்கோள் சரியான உறவை வளர்ப்பதாகும். மனிதர்களிடையே மட்டுமல்லாமல், தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையேயும் உறவை வளர்ப்பதாகும்.
“எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ, அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மனிதனை மெல்ல மெல்ல இயந்திரம் ஆக்கிக் கொண்டு வருவதும் ஒரு கல்வியா?” என்று நெஞ்சம் கொதித்தார் விவேகானந்தர்.
“முழுமையான கல்வியென்பது நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத்தூய்மையையும் ஆன்மீக நெறிகளையும் கற்பிப்பதாக இருக்க வேண்டும்” என்றார் டாக்டர். இராதாகிருஷ்ணன்.
அறநெறியோடு இணைந்த கல்வி, கற்கும் மாணவர்களைப் பண்படுத்தி, உழைப்பு உருவாக்கும் செல்வம், மனசாட்சிக்கு உட்பட்ட மகிழ்ச்சி, நேர்மையோடு இணைந்த வாணிபம், தூய்மையான அரசியல், மனிதநேயம் கலந்த விஞ்ஞானம், தொண்டோடு இணைந்த தொழுகை என நல்ல பல விழுமியங்களாகத் தர வல்லது.
இக்காலத்தில் நாம் உலகியல் கல்வியைக் காண்கிறோமேத் தவிர, தனிமனித மேம்பாட்டு கல்வியைக் காண்பதில்லை. கல்வியின் குறிக்கோள் மனித மேம்பாடுகளை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல, தெய்வீகத்தை அடைவதுதான் குறிக்கோள்.
நாம் வாழும் உலகில் விஞ்ஞானம் மென்மேலும் வளர்ச்சிப் பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவிற்கு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை வசதிப் பொருட்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகிறது. அரசியல் பொருளாதாரத் துறைகளில் குழப்பமும், சிக்கலும் மிகுந்து வருகின்றன. தனிமனிதன் குடும்ப வாழ்வில் அச்சமும், குழப்பமும் சூழ்ந்திருக்கிறது. இந்த குழப்ப நிலையில் ஆன்மீக விளக்கமும் அதையொட்டிய வாழ்க்கை நெறியும் தான் தனிமனிதனையும் மனித குலத்தையும் குடும்பத்தையும் காக்கவல்லது. உயிரின் மதிப்புணர்ந்து, மனத்தின் மேன்மையுணர்ந்து, மற்றவர்களுக்கு மதிப்பளித்துத் தன் செயலை அளவுமுறைக்கு உட்படுத்தி வாழத்தக்க தெளிவும், பயிற்சியும், பழக்கமும் மனவளக்கலை என்ற போதனை கலந்த சாதனைகளால் தான் கிடைக்கும்.
“கல்விச்செல்வம், பொருளுடைமை, மக்கள்பலம், நட்பு
கண்ணியமாம் ஆளுமைப் பேறனைத்துயிருந் தாலும்
கல்வியிலே உயர்ந்த அருட்கல்வியில்லை யானால்
கற்ற பெற்ற அத்தனையும் சுயநலமாம் அன்புக்
கல்வியெனும் சமநோக்கு; நேர்நிறை உணர்வு
கருத்தினிலே உருவாகர் பிறர்பொருள் சுரண்ட,
கல்வியெலொம் பயனாகும்; கனிவு, அன்பு, நீதி,
கடமையிவை மறைந்துநிற்கும், தன்முனைப்பே ஓங்கும்”
என்ற வேதாத்திரி மகரிஷியின் பாடல்வரிகளும் நமது சிறந்த கல்விமுறைக்கு வழிகாட்டுதலாகவே அமைய வேண்டும்.அத்வைதப் பார்வையை அடிப்படையாகக் கொண்ட மனவளக்கலையின் தனிச்சிறப்பு ஆன்மீகத் தத்துவங்களை விஞ்ஞான நோக்கில் விளக்குவதாகும். தொன்மைமிக்க நமது வேதங்களும், உபநிடதங்களும் அருமையான தத்துவங்களை உள்ளடக்கியவை. எனினும் வடமொழியிலிருந்து அந்நியப்பட்டு நிற்கும் சாதாரண மக்கள் இவற்றை அறிந்து கொள்வதற்கான வாயில்கள் அடைப்பட்டுக் கிடக்கின்றன. மகரிஷி அவர்கள் பழம் தத்துவங்களின் பிழிவைப் புதிய வெளிச்சத்தில் எளிய, இனிய தமிழில் அளித்துள்ளார்.
“எக்கல்வியால் வாழ்வை இனிதாக்கி உளத்திலெழும் அக்கேள்வி கட்கெல்லாம் அறிவுவிடை கண்டிடுமோ இக்கல்வி தான் இயற்கை இயல்பறியும் தத்துவமாம் சிக்கல்கள் வாழ்வில் எழா சிந்தனையும் சிறப்படையும்”
“எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு, ஒழுக்க பழக்கங்கள் இவை உணர்த்தும் முறையே கல்வி - இழுக்கின்றி இலவசமாய் கல்விதனை எங்கெங்கும் பிறக்கின்ற உலகக் குழந்தைகட்கு ஊட்டும் முறை முதல் தேவை” – மகரிஷி
PHONE: +91 7904402887 / 04253-292746