மனித நேயம் காப்போம்! வாழமகா வாழ்வோம்! - வேதாத்திரி மகரிஷி

மனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார். 

 தமிழ் மொழியில் மனித நேயம்:

"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" - திருவள்ளுவர்

கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" 

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார் என்று கூறுகிறார்.

இறைநிலையின் பரிணாமத்தில் இறுதியாகப் பூத்த மலர்தான் மனிதன். உடல் கருவிகளைக் கொண்டோ, மன இயக்கமான எண்ணங்களைக் கொண்டோ, மனிதன் எந்தச் செயலைச் செய்தாலும் உடலிலுள்ள சீவ காந்த அலையில் அது ஒரு தாக்கமாகும். அந்தத் தாக்கம் அலை வடிவில் சுருக்கப்பட்டும், இறுக்கப்பட்டும் அடைகின்ற மாறுதல் ஒரு களங்கமாகின்றது. அந்தக் களங்கத்தை உடலின் மையப் பகுதியில் அமைந்துள்ள சீவகாந்தக் கருமையம் ஈர்த்து இருப்பாக்கிக் கொள்கிறது. மீண்டும் மனிதன் வேண்டும் போது, அதே அனுபவ நிகழ்ச்சி எண்ணமாக மலர்கின்றது. வாழ்க்கைச் சுழலால், மனம் அதே அலைச் சுழலுக்கு வரும்போது, தானாகவே அந்தந்த எண்ணம் மலரும். அதே எண்ணம் செயலார்வமாக உடற்கருவிகளையும் தூண்டிச் செயல் புரிய வைக்கும்.

மனதிற்கு உட்பொருளாக உள்ள இறைநிலைக்கு எட்டாமல் எந்தச் செயலையோ, எண்ணத்தையோ மனிதன் செய்ய முடியாது. உட்பொருளாக உள்ள இறைநிலைக்கு எந்தச் செயலுக்கும் ஏற்ற விளைவுகளைத் தரும் ஆற்றலும் (கூர்தலறம்) உள்ளதால், அந்தச் செயலுக்கு ஏற்ற விளைவுகளைத் துல்லியமாக அளிக்கும்.
மனித மனதில் அடங்கியுள்ள இத்தகைய பேராற்றல்களை மனிதன் அறிந்து கொள்வது தான் தன்னை அறிதல். தனது நிலையை விளங்கிக் கொண்டால், மனிதன் பிற மனிதர்களின் மன ஆற்றல்களையும், தெளிவாக உணர்ந்து கொள்வான். அந்தத் தெளிவில் தான் பிற மனிதர்களிடம் அன்பும் கருணையும் உடைய தெய்வீக நட்பு மலர்கின்றது.

மனிதனின் மாண்பினை மனிதன் அறிந்த அளவில் எந்த மனிதனின் மனமும் வருந்தாமல் இருக்கும் முறையில் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வினை நடத்துவான். அந்த ஒளியில், பிற மனிதர் ஏதேனும் துன்பப்பட்டால், அதை இயன்ற வரையில் போக்கி நலமளிக்கும் பண்பும் அவனுக்கு உண்டாகும். இங்குதான் மனிதநேயம் தோன்றுகின்றது, வளர்கின்றது, வாழ்வை வளப்படுத்துகின்றது. இத்தகைய மனிதநேயத்திற்கு உரிய இருப்பு எது? அது இறை ஆற்றலாகிய தெய்வீக நிலையே ஆகும்.

இத்தகைய அருள் ஆற்றல் எல்லா மனிதரிடமும் அடங்கியுள்ளது. உணர்ந்து வெளிப்படுத்திப் பழகிப் பயன்பெற வேண்டியதே தனி ஒவ்வொருவருடைய முயற்சியாகும். மனிதனுக்கு உட்பொருளாக இறைநிலையான தெய்வம் எவ்வாறு அடங்கியுள்ளது என்றும், எவ்வாறு செயல் விளைவுத் தத்துவமாய் இருக்கிறதென்றும் மனிதன் உணர்ந்து கொண்டதென்றும், மனிதன் உணர்ந்து கொண்டால், ஒரு மனிதனுக்கு மற்ற மனிதன் எந்தச் சமயத்திலும் மனதிற்கோ, உடலுக்கோ வருத்தம் உண்டாக்குகின்ற செயல்களைச் செய்வானா? மாறாக இவ்வுலகில் அடுத்த மனிதன் உயிரோடு ஒவ்வொருவருடைய உயிரும் அன்பாலும் கருணையாலும் ஒன்றுபட்டு விடும்.

இத்தகைய மனிதநேய உணர்வில் தான் உலகிலுள்ள மக்கள் அனைவரும் வாழ்வில் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ள உண்மை விளங்கும். ஒவ்வொரு நாளும், காலையிலிருந்து மாலை வரையில் ஒவ்வொரு மனிதரும் உபயோகிக்கும் பொருட்கள் எவ்வாறு அவர்களுக்கு கிடைக்கின்றனவா? உலகம் முழுவதும் உள்ள மனித குலம் அத்தனையும் சேர்ந்து உழைத்ததனால் உண்டான பொருட்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் வளமாக அமைந்து வருகின்றன. மனிதகுலம் அனைத்தும் வாழ்வதற்கு ஒரே உலகம் தான் உளது. உலகம் மீது உள்ள கடல் ஒன்று தான். அந்தக் கடல் நீர் தான் ஆவியாகி மேகமாகி மழையாக உலகம் முழுவதும் பெய்து, எல்லாப் பயிர்களையும், உயிர்களையும் வளர வைக்கிறது. வாழ வைக்கிறது. நமக்கு வெளிச்சம் அளிக்கும் சூரியனும் ஒன்றே. நாம் மூச்சு விடும் காற்றும் ஒன்று தான்.

இந்த நான்கு இயற்கைத் தத்துவங்களும் இன்றி மனிதன் வாழ முடியாது. இவற்றில் ஒன்றையேனும் மனிதன் செய்ததில்லை. எல்லாம் இறைநிலையின் பரிணாமம் தான். இவையனைத்தும் எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைத்து வாழ வைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான், வாழ்கின்றான், மறித்து விடுகின்றான். மனிதனுடைய வாழ்வின் வளங்கள் அனைத்தும் மனித இனக் கூட்டு உழைப்பால் தான் உண்டாகின்றன.
இவ்வியற்கை நியதியை உணர்ந்தால், போர் என்ற வன்முறையால் ஒரு குழுவினரை மற்ற ஒரு குழுவினர் கொன்று, கொலையை வெற்றி என்று கூறுவார்களா? இவற்றை எல்லாம் உணர்வதற்கு ஏற்ற அறிவு மனிதனிடம் ஒளி வீசிக் கொண்டு தான் உள்ளது.

எனவே, மனித நேயத்தில் தான் வாழ்வு ஆக்கப்படுகிறது, காக்கப்படுகிறது. மனித நேயம் என்ற பெருநிதியை மனிதன் உணர்ந்து, போற்றி வாழ்வதற்கு இறையுணர்வு இன்றியமையாதது. ஒருவரை மற்றவர் மதித்து வாழ ஒழுக்கம், கடமை, ஈகை எனும் மூன்று கருத்துக்களையும் ஒன்றிணைந்த அறநெறியும் வேண்டும். இந்த உண்மையை உணர்ந்த நமது முன்னோர்கள் இறைவழிபாடும் அறநெறியும் ஒன்றிணைந்த வாழ்க்கை நெறியை வகுத்துப் போதித்தனர்.இந்த மதிப்பிற்குரிய வாழ்க்கை நெறியைத் தான் மதம் என்று போற்றி வருகிறோம். மதங்கள் அனைத்திற்கும் முதல் பொருளாக விளங்குவது தெய்வநிலை. தெய்வ நிலையை அறிந்து உய்ய ஏற்ற அறிவே ஆறாவது அறிவாகும்.
அனைவரும் தெய்வ நிலையையறிந்து, உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்குரிய திருத்தமான வழிமுறைகளை உணர்வோம். உலகம் முழுவதும் மனித குலத்தில் பரவச் செய்து மனிதநேயம் காப்போம்.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746