There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
இந்த உலகம் ஒரு மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று கொண்டே இருக்கிறது. அதன் மீது நாம் இருக்கிறோம். ஆனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டு இருப்பதாக நினைக்கிறோம். உண்மை வேறு. அவ்வாறு நாம் நினைப்பதற்குக் காரணம் என்ன? கண், காது, மூக்கு இவைகளால் உணர்வதை வைத்து, நாம் எல்லைக் கட்டிக் கொண்டு இருப்பதால் நமக்கு அப்படித் தெரிகிறது. உண்மையிலேயே ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தூரம் இடம் பெயர்ந்திருப்போம்! ஒரு நாளைக்கு 25,000 மைல்கள். இவ்விதம் வேகமாகச் சுழல்கிற உலகத்தல் நாம் நிற்கிறோம். இது ஒன்று.
நாம் இதுவரை எத்தனை மூச்சு விட்டிருக்கிறோம்? எத்தனை மூச்சு வாங்கியிருக்கிறோம்? இதற்குத் தேவையான காற்று இவ்வளவு பேருக்கும் ஒன்று தானே? நீங்கள் இழுத்து விட்ட மூச்சுக்காற்றைத் தான் நான் இழுத்து விடுகிறேன். அப்போது ஒரே காற்றைத் தான் நாம் எல்லோரும் சுழற்சி முறையில் உபயோகம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம். இதிலே, ‘அவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்கள் விட்ட காற்றை நான் இழுக்க மாட்டேன்’ என்று கூற முடியுமா?
நீர் ஆவியாகி மேலே போய் மேகமாகிப் பூமியில் பல இடங்களிலும் ஓடுகிறது, தேங்குகிறது. குட்டை, குளம், ஏரி, ஓடை, நதி என்று எங்கு இருக்கக் கூடிய நீரும் ஒரே நீர் தான். அது கடல் நீராக இருந்தது தான். அதேபோல சூரியன். சூரியன் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. இப்போது இந்த நான்கு பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள். உலகம், காற்று, தண்ணீர், சூரியன். இந்த நான்கில் ஒன்றை எந்த மனிதனாவது செய்தானா? அல்லது எந்த விஞ்ஞானியாவது செய்தாரா?
இந்த நான்கிற்காக நாம் பிறக்கிறோம். வாழ்கிறோம், இறந்து போகிறோம். மரத்தில் இலை தோன்றி, பழுத்து, உதிர்ந்து போவது போல எத்தனையோ கோடி மக்கள் தோன்றி வாழ்ந்து முடித்தாகி விட்டது. இன்றைக்கு 800 கோடி பேர் உலகில் வாழ்வதாகக் கணக்கிட்டுள்ளனர். 200 வருடங்கள் போனால் இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் இருக்கப் போகிறார்களா?
ஆனால், எல்லோரும் மேற்சொன்ன அந்த நான்கு பொருளை அனுபவித்துக் கொண்டு தான் வாழ்கிறோம். இதற்கு இடையில் ஒரே கேள்வி. மனிதனோடு மனிதன் பகைமையோ, பிணக்கோ கொள்ளக் காரணம் என்ன? பகை மற்றும் பிணக்கினால் தான் மனிதனின் வாழ்க்கையில் துன்பம் வருகிறது.
இயற்கையினால் வரக் கூடிய துன்பம் இயற்கையினாலேயே சரியாகி விடும். இப்போது எல்லோரிடமும் நிலை பெற்றுத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடிய துன்பம் மனிதன் மனிதனுக்குச் செய்யும் துன்பம் தான். உங்கள் வீட்டையே நினைத்துப் பாருங்கள். ஒவ்வொருவரும் ‘நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும், நான் சொல்லும் படித்தான் அவர்கள் நடக்க வேண்டும்’ என்று நினைக்கிறார்கள். இது எதனாலே? நான்கு பேர் இருந்தாலும், கூட்டாக ஒத்தும் உதவியும் வாழ முடியவில்லையே? துன்பமோ சகிக்க முடியவில்லை. இன்பம் தான் வேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். இன்பம் தான் வேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். அல்லது அமைதி வேண்டும் என்று நினைக்கிறோம்.
இன்பமும், அமைதியும் வேண்டுமானால் துன்பம் வரத்தக்க செயல்களை நீக்கி விட வேண்டாமோ? அதன் பிறகு துன்பப் படுபவர்களுக்கு உதவி செய்யவும் வேண்டும். இந்த இரண்டைத் தான் வள்ளுவர் ‘ஈதல் இசைபட வாழ்தல் இதுவன்றி ஊதியமில்லை உயிர்க்கு’ என்று சொல்லியுள்ளார். ஈதல் என்றால் உதவி செய்தல். இசைபட வாழ்தல் என்றால் ஒருவர் வாழ்வில் இன்னொருவர் குறுக்கீடு இல்லாது வாழ்தல். இந்த இரண்டைத் தெரிந்து கொண்டால் தான் மனிதன் மனிதனாக வாழ முடியும். இது நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். தெரிந்து கொண்ட பிறகும் கூடச் செயலில் காட்ட முடியவில்லையே ஏன்?
பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையில் கிடந்து போராடிக் கொண்டே இருக்கும் ஒரு ஜீவன் இருக்கிறது என்று சொன்னால், அது மனிதன் தான். பழக்கத்தையும் விட மாட்டான். விளக்கத்தையும் மறக்க மாட்டான், ஐயோ நான் தப்பு செய்து விட்டேனே, என்று அதைச் சொல்லி கொண்டும் இருப்பான். சமயம் வரும் போது அதையே செய்து கொண்டும் இருப்பான். இது ஏன்? இவ்வாறெல்லாம் சிந்தனை செய்து நம்மை திருத்திக் கொள்ளக் கூடிய ஒரு பேராற்றல் தான் ஆறாவது அறிவு. அந்த ஆறாவது அறிவு மேம்படுத்தி, வாழ்க்கையில் பொருத்திப் பயனும் உயர்வும் காண உதவுவது மனவளக்கலை.
மனவளக்கலை என்பது மனிதனைத் திருத்தி அமைக்கக் கூடிய ஒரு பயிற்சி. உடலாலும், உள்ளத்தாலும், செயலாலும் மனிதனை மனிதனாகவே வாழச் செய்ய அவசியமான திருத்தங்களைக் கொடுக்கும் கலை அது. மனிதனை முழுமனிதனாக்க வல்லது அது.
PHONE: +91 7904402887 / 04253-292746