மனிதன் பரிணாமம் மற்றும் மனிதன் கடந்து வந்த பாதை வேதாதிரியம்

விஞ்ஞானத்திலும் சரி, மெய்ஞ்ஞானத்திலும் சரி, விலங்கினத்தில் இருந்து தான் மனிதன் தோன்றினான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அருள் துறையின் தலைவாகள் எல்லாம் கூட அதை வேறுவகையில் சொல்லி இருக்கிறார்கள். நம் நாட்டில் ‘தசாவதாரம்’ என்ற பரிணாமக் கொள்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. விலங்கின வித்திலிருந்தே மனிதன் தோன்றியுள்ளான். விலங்கினத்தின் தன்மை என்ன? வேறு ஒரு பிராணியை அடித்து அதன் வாழும் உரிமையை அழித்து உயிரைப் போக்கி மாமிசத்தை உணவாகக் கொண்டு வாழ்ந்து வருவதோடு அந்தக் கொடுஞ்செயல் பதிவுகளோடு குழந்தைகளைப் பெற்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அப்படியெனில் விலங்கினத்தின் செயல் பிற உயிரைப் பறிப்பது. அதன் உடமையைப் பறிப்பது.

அதன் வாழ்க்கைச் சுதந்திரத்தைப் பறிப்பது. இந்த மூன்றும் தான் விலங்கினத்தின் இயற்கையான குணம். அத்தனையும் பதிந்து தொடர்ந்து வித்தில் வரும் பொழுது மனிதனிடம் விலங்கினத்தின் தன்மை வித்திலே குணமாக அறிவாட்சித் தரமாக அமைந்து வந்திருக்கிறது என்ற உண்மையை உணர்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரை மனிதன் அவனுடைய கருவமைப்புப் பகுதிகளான முன்கணக்கைப் பார்க்கவில்லை. தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. நாம் ஏன் தவறு செய்கிறோம் என்று என்றைக்கும் தன்னைப் பற்றி எண்ணவில்லை. ஏன் மற்றொரு ஜீவனை வதைசெய்து உண்கிறோம் என்று எண்ணவில்லை. நமக்கு கை, கால் இருக்கின்றன.

அறிவு வளம், இயற்கை வளம் இருக்கிறது. இவற்றை எல்லாம் தொழிலாக மாற்றி நாம் உணவை உற்பத்தி செய்து உண்ண முடியும். வேறு ஒருவரை, ஒரு உயிரைத் துன்பப்படுத்தி சாப்பிடுவதோ, மற்றவர் வைத்திருப்பதை பறிப்பதோ தேவையே இல்லை என்று எப்போதுமே மனிதன் எண்ணியது இல்லை. தெளிந்து விளங்கிக் கொண்டதே இல்லை. காரணம் பறித்துண்ணுவதே கருமையப் பதிவு அப்படியே கருவழியே பிறவித் தொடராக வந்துவிட்டது. மனிதன் எதற்காக மற்றவர் உடமையைப் பறிக்கிறான்? உணவிற்காக, அதன் பிறகு புலன் இயக்கத்திற்காக மற்றவர் சுதந்திரத்தைப் பறிக்கிறான்.

பொருள், புலன் இன்பம் இவை இரண்டும்; தான்வேண்டும். இதை உழைத்துப் பெறலாம் இல்லையா? பிறர்பொருள், பிறர் இன்பம் கெடாமல் தான் உழைத்துண்டு வாழலாம். ஆனால் மனிதன் காலத்தால், இடத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்தில் அதிகாரத்தாலும் புகழாலும் மதிப்புப் பெறும்போது உழைக்காமலேயே பொருள், புலன் இன்பமும் கிடைக்கும் என்பதைக் கண்டான். அதன் பிறகு, ஆசைகள் நான்காயிற்று 1) பொருள் 2) புலனின்பம் 3) புகழ் 4) அதிகாரம் என்று இந்த நான்கு ஆசையிலே எந்த அளவு எதைப் பெற்றாலும் இது போதும் என்று எண்ணக்கூடிய அளவிலே மனம் இருக்கிறதா? இல்லையே! இதற்கும் மேல் இன்னும் வேண்டும் என்று தான் நினைக்கிறோம். இந்த எண்ணம் பிறர் வளம் பறித்து வாழும் செயல்களாக மாறுகின்றன.

இதற்குப் பதில் இது போதும் என்ற எண்ணமாக மாறினால் தான், அவனைப் பற்றி சிந்திக்க முடியும். இந்த ‘போதும்’ என்ற எண்ணம் வராமலேயே மனம் பேராசையாக எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கிறது என்றால் மனிதன் எந்த நீதியை, நன்மையை உணர முடியும்? அதேபோல இந்தப் பறித்துண்ணும் குணமே இயல்பாக எல்லோரிடமும் உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ வாய்ப்பு இல்லாத சில இடங்களில் அக்குணம் அடங்கி இருக்கிறது. அவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். இது வரைக்கும் அது பெரிதுதான். ஆனால் எப்பேர்ப் பட்டவர்களாக இருந்தாலும் சந்தர்ப்பம் நிர்ப்பந்தம் வந்தது என்றால் விலங்கினக் குணம் வெளிவந்து விடும்.

இந்த விலங்கினப் பதிவுகளை மாற்றியமைப்பதற்குத் தான் போதனை முறையாக பெரியவர்கள் இறைவழிபாட்டையும் அறநெறியையும் கண்டுபிடித்தார்கள். இறைவழிபாடு என்றால் இறைநிலை உணர்ந்த பெரியார்கள் இறைவனே தான் மனிதனிடத்திலே அறிவாக இருக்கின்றான். அதை உணர்ந்து கொண்டால் எல்லார்க்குள்ளும் இருப்பது இறைவன் தான் என்பதைத் தெரிந்து கொண்டால் எவருக்கும் எப்போதும் துன்பம் செய்யத் துணிய மாட்டார்கள். 

ஆகவே இறைநிலையை உணர்ந்து கொண்ட பிறகு அந்த இறைவனின் இயல்பான அன்பும் கருணையுமே ஓங்கி இருக்கக்கூடிய ஒரு நற்குணத்தைப் பெறுவார்கள். பிறகு அதைப் பற்றி வாழ வேண்டும். அது தான் இறைவழிபாடு. இறைவனை உணர்ந்து கொண்டால் இறைவனின் அடிபற்றி, அவனுடைய குணத்தைப் பற்றி, அவனுடைய செயல் பற்றியே மனிதன் வாழ்கிறான். யார் என்ன தீங்கு செய்தாலும் இறைவன் தண்டிப்பதில்லை. அதே இறைவன் அங்கும் கருணை காட்டுகிறான். அந்த அன்பும் கருணையும் தான் இறைவனின் செயல்.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746