There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
புலன் கவர்ச்சியினால் பொருள்களோடு, உயிர்களோடு தொடர்பு கொள்வதில் அளவு மீறும் போதும் முறை மாறும் போதும் துன்பமே அதிகமாக விளைகின்றது. இயற்கையின் ஒழுங்கமைப்பால் மனிதனிடம் அமைந்த ஆறாவது அறிவு சிறப்புற்று விளங்க மேலும் மேலும் உயர்ந்து, இயற்கையின் முழுமையை உணர்ந்து பிறவிப் பயனை எய்த மனிதனுக்கு மன அமைதி தேவை. துன்ப உணர்வுகள் அமைதியைக் குலைக்கின்றன. அறிவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. எனவே துன்பமற்ற முறையிலே மனிதன் வாழ வழிகாண வேண்டும்.
துன்பங்களை அகற்றி மனித அறிவு தடையின்றி உயர வேண்டுமென்று கருணையோடு சிந்தித்த முற்காலத்திய பேரறிஞர்கள் ஓர் உண்மையை உணர்ந்தார்கள். மனிதனிடம் தன்முனைப்பு, பழிச் செயல்பதிவுகள், மயக்கம் எனும் மூன்று களங்கங்கள் உள்ளன என்று கண்டறிந்தார்கள். இயற்கை எனும் முழுமையிலே எந்த உயிரும் ஒரு பகுதியேயாகும். அறிவு விரிவடையா நிலையிலேயே உணர்ச்சியிலே நான் என்று எல்லை கட்டிக் கொண்டான் மனிதன். ஒருவனுக்கு அமையும் பருவம், உடல் வலிவு, செயல்திறம், கல்வி, செல்வாக்கு, செல்வவளம், சூழ்நிலை அமைப்பு இவற்றைக் கொண்டு மற்றவரோடு தன்னை உயர்வாகவோ, தாழ்வாகவோ இருப்பதாக நினைத்துக் கொள்கிறான். இது தன்முனைப்பாகும். இதுவே ஆணவம் என்றும் வழங்கப்படுகிறது.
இயற்கையின் முழுமைத்தன்மை காரணமாக மனிதனிடம் எழுச்சி பெற்றுள்ள ஆறாம் நிலை அறிவானது வளர்ச்சி பெற்று இயற்கையின் முழு நிலைமையை உணர்ந்து அமைதி பெற ஓங்கி எழும் விரைவினைத் தன்முனைப்பு தடை செய்கிறது. இத்தடையால் தன் வளர்ச்சியில் விரைவு கொண்ட அறிவு இருவகையான ஆசைகளாகப் பிரிக்கின்றது.
1. பிறரை அடக்கி ஆள வேண்டுமென்ற அதிகார ஆசை (Aggressiveness)
2. வாழ்க்கை இன்பங்களைத் தனக்குள் தரும் பொருள்களை மேலும் மேலும் பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருளாசை (Possessiveness) அதிகாரப் பற்றினைத் தான் என்றும் பொருள் பற்றினைத் தனது என்றும் குறிப்பிடுகின்றோம். இவ்விருவித பற்றுக்களான இச்சைகளே அவ்வப்போது பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்களாக உருவெடுத்து சந்தர்ப்பங்களை ஒட்டி செயல்களாக விளைகின்றன.
இந்த ஆறு குணங்கள் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்றும் வழங்கப்படும். விரைவான மன அலைகளைக் கொண்ட இந்த ஆறு குணங்கள் வழியே உணர்ச்சி வசப்பட்டு மனிதன் செயல் புரியும் போது தனக்கும் பிறர்க்கும் துன்பங்களே விளைகின்றன. துன்பம் விளைவிக்கும் செயல்களைப் பாவம் என்றும் பழிச்செயல் என்றும் கூறுகிறோம். அறிவின் குறுகிய நிலையால் தன்முனைப்பும், தன்முனைப்பால் பழிச்செயல்களும் பெருகும் போது மனிதன் அறிவு சீர்குலைகிறது. விளக்கமின்றி மயக்கநிலை பெறுகிறது. இதுவே மாயை அல்லது மயக்கம் ஆகும். இம்மூன்று களங்கங்களைப் போக்கி மனித மனத்தைத் தூய்மை செய்வதற்கு அறிவிலே சிறந்த முன்னோர்கள் கண்டுபிடித்த பயிற்சி முறையானது தன்னகத்தே தவத்தையும் அறநெறியையும் கொண்டிருக்கின்றது. அப்பயிற்சி முறையினால் எண்ணம், சொல், செயல் என்ற மூன்றையும் சீர்திருத்திக் கொள்ள முடியும்.
அகத்தவத்தில் உயிர்மேல் மனம் வைத்து அறிவை அமைதி நிலைக்குக் கொண்டு வருவது முதலாவது காரியம். உயிரை உணர்வாய்ப் பெறும் இந்தத் தவமுறையைக் குருவின் மூலமே கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு இது வரையிலும் அறிவிலே பதிந்துள்ள வினைப்பதிவுகளின் தன்மையுணர்ந்து நலம் விளைக்கும் புதிய முறையிலே திருப்பிப் பழக்கும் முறையானது அடுத்த தொடர்ச் செயல். இவற்றை முறையே, மனமடங்க ஓர்மைப் பயிற்சி (லயம்) என்றும், அகத்தாய்வு என்றும் கூறுகிறோம்.
இவ்விரு பயிற்சிகளின் போதும் வாய் திறந்து பேசுவது முரண்பாடான செயலாகும். எனவே மௌனமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். முழுநோக்கம், மனமடக்கம், சடங்கு, வாய்திறந்து பேசாமை வாய் மூடி பேசாதிருந்து மன ஓர்மைப் பயிற்சியோ, அகத்தாய்வோ இயற்றாமலிருந்தால் மௌன நோன்பு எனப்து முழுமையாகாது.
மனிதன் பேசுவது தனது அறிவினை, அனுபவங்களை பிறர்க்கு எடுத்துக் கூறி மற்றவர்களும் பயன் பெறச் செய்யவும், தனது தேவைகளை பிறர் உணர்ந்து கொண்டு தக்கபடி உதவி பெறுவதற்குமெயாம். மனச்சீரமைப்பு பெறாதவன் பேசினால் தவறான பயன்களும் துன்பங்களும் அல்லவா விளையும்? இதனை ஒரு சித்தர்பெருமான் குறிப்பிடுகின்றார். “சினமடங்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே” என்று மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார்.
“அடக்கம் அமர்அருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்”
தன்முனைப்பை அடக்கி அகண்டாகாரப் பேராற்றலோ தன்னை இணைத்துக் கொண்டால் இறையருள் சுரந்து இன்பம் ஓங்கும். இல்லையேல் துன்ப இருளில் ஆழ்த்தி விடும் என்பதே இக்கவியின் கருத்தாகும். மௌன நோன்பில் மனமடங்கித் தற்சோதனையில் ஈடுபடும் போது இறைநிலையின் இயல்புகள் அனைத்தும் அறிவிற்குக் காட்சியாகும். இப் பெரும் பேற்றினை இறைவன் என்னுள் பேசுகிறான் என்றும் உள்ளுணர்வு என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
PHONE: +91 7904402887 / 04253-292746