There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
பாவம் எதைக் குறிக்கிறது?
எங்கே பதிகிறது?
அதனுடைய விளைவுகள் என்ன?
பாவத்தினுடைய சின்னத்தை – அடையாளத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்தப் பாவப் பதிவுகளை எப்படிப் போக்கிக் கொள்ள முடியும்? இவ்வளவு வரையில் சிந்தனை செய்து, ஒரு சிறப்பான விளக்கம் கிடைத்தால் தான் இந்தப் பாவம் தரும் பதிவுகளிலிருந்து நாம் விடுதலை அடையலாம்.
வேதாத்திரி மகரிஷி சமயக் கருத்துக்களைப் பற்றி கூறும் போது எது பாவம், என்று தெரியாமல் எத்தனை விதமான சடங்கு சம்பிரதாயங்களைச் செய்கிறோம்? ஒரு பாவம் செய்து விட்டு, மொட்டை அடித்துக் கொண்டால், அந்தப் பாவம் போய்விடுமென்று நினைக்கிறோமே! போகுமா? கடவுளுக்கு ஒரு பூஜையைச் செய்துவிட்டால், பாவம் போய் விடும் என்று எண்ணுகிறார்கள். இதெல்லாம் ஒருவர் பணத்தை இன்னொருவர் பறிப்பதற்காக எடுத்த ஏற்பாடு. அதுவும் ஒரு பாவமாகி விடும்.
உண்மை உணராது உண்மைக்கு எதிர்ப்பாகவோ, பிணக்காகவோ எந்தக் காரியம் செய்தாலும் அதுவும் பாவம் தான். மாறாக, முழுமையாக மனிதனுடைய ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் தான் இன்றைய உலக மக்களுக்கு வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையைத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் அனுபவிக்கிற அனுபவங்கள் எல்லாமே நம்மிடம் சேர்ந்து கொண்டு வருகின்றன. ஒன்று கூட விட்டுப் போவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக எங்கேயோ போனீர்கள், இப்போது நினைத்தாலும் பார்த்ததெல்லாம் மனதில் வருகிறது. நினைக்காத போதும் வருகிறதே! அந்தக் கருத்தோடு தான், இந்தப் பாவப்பதிவுகளை அணுக வேண்டும்.
நம்மிடம் என்னென்ன பதிவுகள் உண்டு என்று ஆராய்ச்சி செய்தால், முதல் ஜீவன் முதல், மனிதன் பிறந்தது முதற்கொண்டு இன்றுவரையில் செய்த அத்தனை செயல்களின் பதிவுகளும் சேர்ந்து கொண்டு வரும். அந்தச் செயல்களால் ஏற்பட்ட இன்ப துன்ப உணர்வுப் பதிவுகளும், அதனால் ஏற்பட்ட விளைவுப் பதிவுகளும் கூடச் சேர்ந்து கொண்டே இருக்கும்.
பிறக்கும் போது நமது பெற்றோர்களின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு பிறந்தோம். அதுதான் நம் மூலதனம். பெற்றோர்கள் என்று எடுத்தால், அன்னை தந்தை – அவர்களுக்கு அன்னை தந்தை அப்படியே போனால், முதன் முதலில் உடல் தோன்றியதே, அதுவரையில் போகும். அங்கிருந்து இன்று வரையில் எங்கேயும் விடுபட்டுப் போய் விடவில்லை. ஜீவ இனமே ஒரு தொடர் நிகழ்ச்சி தான். நான் யார்? என்று கேடடால் உடலால் எடுத்துக் கொண்டாலும், உள்ளத்தால் எடுத்துக் கொண்டாலும் ஒரு தொடர் நிகழ்ச்சி தான் நான்.
அதே போல ஒருவனுக்குப் பின்னால் அவனுடைய தொடர் நிகழ்ச்சியாக வரக்கூடியோர் அவனுடைய குழந்தைகளே. உருவத்தால் தனியாக இருக்கலாம். ஆனால், அறிவாட்சித்தரம் அல்லது வினைப்பதிவுகள், இவை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இவ்வுண்மைகளையெல்லாம் விளங்கிக் கொண்டால், பாவம் என்பதைச் செய்யாமல் இருப்பதிலும், அந்தக் கொள்கையைப் பின்பற்றுவதிலும் சிரமம் ஒன்றுமில்லை.
சாப்பாட்டுக்குக் குழம்பு வைக்கிறார்கள். அந்தக் குழம்பில் எத்தனை காய்கள், மசாலாக்கள் போடுகிறார்களோ, அவ்வளவு சத்தும் சேர்ந்து அந்த குழம்பின் தரம் ஆகிறது. தனியாக ஒவ்வொன்றையும் பிரிக்க முடியாது. அதுபோல நம்முடைய வாழ்க்கையில் செய்கிற எத்தனையோ செயல்களுக்கும் தனித்தனியாக விளைவுகளைப் பிரித்துப் பார்க்க முடியாது. எந்தச் செயலை எடுத்தாலும் மனிதன் செய்கிற செயலுக்கு இயற்கையினுடைய அமைப்பில் அதனுடைய விதிகள் அடிப்படையாக இருக்கின்றன. அந்த இயற்கை விதிக்கு, இயற்கை அமைப்புக்கு முரண்பாடாக மனிதன் ஏதேனும் செய்தானேயானால், அந்த முரண்பாட்டிலிருந்து இயக்கத் தொடராக எழக்கூடிய இன்ப துன்ப உணர்வுகளுக்கும் இயற்கை அமைப்புக்கும், அதனுடைய சட்ட விதிக்கும் ஏற்றவாறு நாம் செயல்புரிந்தால், அதற்குப் பெயர் அறநெறி. இறையுணர்வும் அறநெறியும் ஒன்றுதான். இறை உணர்வு இயற்கை விதிகளை விளங்க வைக்கிறது. இயற்கை விதிகளை மதித்து நடத்தலே அறநெறி.
அதை உணர்ந்து சரியாக நிர்வகித்தால் ஒரு துன்பமும் இல்லை என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். நாம் என்ன விரும்புகிறோமோ அதையெல்லாம் அடையலாம். ஆனால், அது தெரியாமல் அளவு மீறி, முறை மாறி, முரண்பாடாக நாம் செயல் செய்யும் போது, பிறப்பவை தான் துன்பங்கள். மனம் இயங்கி இயங்கிச் சேகரித்த பெட்டகம் தான் கருமையம். அதைத்தான் ஆன்மா என்றும் கூறுகிறோம். ஜீவான்மா என்றும் கூறுகிறோம். ஜீவான்மா எதைச் செய்தாலும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் அசைகிறது. அதற்கும் ஒரு ஒழுங்கு, முறையான இயக்கம் உள்ளது. அந்த இயக்க அலை ஜீவகாந்த சக்தியில் சேர்கிற போது, அதை இழுத்து கருமையம் தனக்குள்ளாக இருப்பு வைத்துக் கொள்ளும். மீண்டும் அதே அலை வருகிற போது அதை எடுத்துக் காட்டும். மறுபடியும் அதையே செய்ய வேண்டும் என்ற வேகம் உண்டாகிறது.
உடல் வேறு மனம் வேறாகவா இயங்குகின்றன? உடலே தான் மனமாகவும் இருக்கிறது. மனமே தான் உடலாகவும் இருக்கிறது. உடலில் குவிந்து இயங்குகிறது. மனதில் அலையாக இயங்குகிறது. ஆகவே நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அல்லது எண்ணினாலும், அது இரண்டிடத்திலும் பதிவாகிறது.
இந்த மாதிரி எத்தனையோ எண்ணங்களைச் சுருக்கி வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு நுண்ணியக்க ஆற்றல், இந்த ஜீவகாந்த சக்தி. அதில் இருப்பு இருக்கிறதனால், நாம் எந்த வடிவமும் எடுக்கிறோம். எப்படியும் மாறுகிறோம். ஏனெனில், நாம் செய்யக்கூடிய செயல்கள் எதுவாக இருந்தாலும் அது பதிந்து விடுகிறது. அந்தச் செயல்களிலிருந்து துன்பம் வந்தால், அது பாவம். பாவம் என்றால், வேறு ஏதோ இல்லை. எந்தச் செயலும் துன்பம் தருமானால் அதைக் குற்றம், தவறு என்பார்கள். நாம் பாவம் என்கிறோம்.
இதைப் பற்றி இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் ஆராய்வோம்...
PHONE: +91 7904402887 / 04253-292746