பசி ஏற்படுவதன் காரணம் குறித்து வேதாத்திரி மகரிஷியின் கூற்று

பசி ஏன் ஏற்படுகிறது? 

உடலியக்கத்தினால் தேவையற்ற அணுக்கள் செல்களில் இருந்து வெளியேறி, எப்போதும் உடலைவிட்டு உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால் உண்டாகும் காலியான இடத்தை நிரப்புவதற்கு ஓர் இழுவை சக்தி உற்பத்தியாகிறது. உடலில் ஏற்படக்கூடிய இழுவை சக்தி குடலில் வந்து தாக்கும். காரணம் என்னவென்றால் அங்கேயிருந்துதான் இதுவரைக்கும் ஆற்றல் எடுத்து பரவி வந்தது. அதனால் எல்லா இழுவை சக்தியும் வயிற்றில் வந்து சேர்கிறது, அந்த உணர்வே பசி என்பதாகும். பசி என்பது குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்ய வேண்டிய ஒன்று. உணவுதான் காலியான இடத்தை நிரப்பி, எப்போதும் மனிதனை வளர்ச்சியில் வைத்துக் கொண்டிருக்கிறது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார்.

உணவு இல்லையென்றால் இரண்டு வகையான துன்பங்கள் உண்டாகும். உணவு ஜீரணிப்பதற்காக இரைப்பையில் ஓர் அமிலம் (Hydrochloric acid) உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கிறது. அரிக்கக்கூடிய, எரிக்கக்கூடிய ஓர் ஆற்றல் உடைய அந்த அமிலம், காலத்தோடு உணவு வயிற்றிற்குக் கிட்டவிலையென்றால் குடலைக் கௌவி அரிக்கிறது. அதனால் குடல் புண் உண்டாகிறது. உடலில் உதிர்ந்துவிட்ட அணுக்களுக்குப் பதிலாக மாற்று அணுக்கள் இல்லாததனால், வேலை செய்ய முடியாத அளவுக்கு பலகீனம், சோர்வு உண்டாகும். இந்நிலை தொடர்ந்து அதிகமானால் அதுவே ஒரு நோயாக ஆகி விடுகிறது.

பட்டினியின் கொடுமை :

பட்டினியின் கொடுமை பற்றி வேதாத்திரி மகரிஷி கூறும் போது, உணவு கிடைக்காத குறைபாட்டால் கண்களை இருளச் செய்து, காதுகளை அடைத்து, கருத்தைச் சோரச் செய்து, குடல்களை முறுக்கிப் பிழிந்து, உடலில் உள்ள நரம்புகள் அனைத்தையும் தளரச் செய்யும் கொடிய துன்பம் விளைவிக்கும் பட்டினியை யாரும் அனுபவிக்கக் கூடாது என்கிறார்.

ஏழையின் பட்டினி : 

ஒரு செல்வந்தர் சாப்பிட்டு விட்டு மாடியில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்கலாம், உறக்கமில்லாது புரண்டு கொண்டும் இருக்கலாம். அதே மாடியின் கீழ் பிளாட்பாரத்தில் பசியோடு ஓர் ஏழை வருந்திக் கொண்டிருக்கலாம். இவனுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு என்று மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. இவனுடைய பசியின் வேகத்தில், 'அவர் நன்றாகச் சாப்பிட்டு விட்டுத் தூங்குகிறார், நான் பசியோடு இருக்கிறேனே' என்று எண்ணுவான். பசியோடு இருக்கக்கூடிய இவனுடைய எண்ணம், வருத்தம் எல்லாம் எங்கே நாடி வரும் என்றால், உண்டு களித்து இருக்கக் கூடியவர்களைத்தான் நாடும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

அந்த ஏழையின் எண்ண அலைகளின் ஆற்றல் எவ்வளவு? எண்ணமே இறைவனின் பிரதிபலிப்பு; இறைவனின் படர்க்கைநிலை. பேராற்றலுடையது எண்ண அலை. அந்த எண்ண அலையின் தாக்குதலால் பணக்காரர் சாப்பிட்டுவிட்டுப் படுத்தார்; தூங்க முடியாது புரள்கிறார். இப்போது ஏழ்மை பணக்காரரைத் தாக்கிவிட்டது. ஏழ்மை எல்லாருக்கும் சொந்தமாகி விடுகிறது.

ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் சொத்து. நாம் ஏதோ ஒவ்வொருவரும் தனியாக இருக்கிறோம் என்று நினைக்கிறோம். அது ஒரு கற்பனை. அறியாமை என்று கூட சொல்லலாம். உடலால், உயிரால், அறிவால் சமுதாயத்தில் உள்ள மக்களோடு ஒவ்வொரு மனிதனும் பின்னிக் கொண்டு இருக்கிறோம். பொருளளவில் ஏழை பணக்காரன் என்று இருக்கலாம். ஆனால் ஏழையின் பசிக் கொடுமையின் விளைவு எல்லாரையும் நிரவி வருகிறது.

பசிக்கு முறைப்படி காலத்தோடு உணவு கொள்ளவில்லையென்றால் எந்தப் பணியைச் செய்ய முடியும்? காலத்தோடும் முறையோடும் தேவைக்கேற்ப கிட்டாதபோது மனிதனின் அறிவு, உடல் ஆற்றல்கள் திசைமாற்றம் பெறுகின்றன; போட்டியுணர்வும் பாதுகாப்புப் பொறுப்பும் மிகுதியா கின்றன. அச்சம், பகை, பிணக்கு, போர் இவையாக உருப்பெறுகின்றன என்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி எடுத்துக் காட்டுகிறார்.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746

 



Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
SKY Yoga 2024 Privacy policy Terms of use Contact us Refund policy