There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
எந்த ஜீவனும் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஏற்பட்ட எல்லா நிகழ்ச்சிகளும், ஜீவகாந்த அலையில் சுருங்கி அந்த ஜீவனின் தன்மைகளாக அமைந்து வருகின்றன. இதைத் தான் வினைப்பதிவு என்று சொல்கிறோம். இந்த இயற்கை நியதியின் கீழ், பரிணாமச் சரித்திரத்தில் எந்த ஜீவனில் என்ன நடந்திருந்தாலும், அது தன்மையாகி தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஜீவனாகப் பிறவி எடுப்பது இயற்கை இன்பத்தை அனுபவிப்பதற்காகத் தான் என்றாலும் சிந்தனையில் ஆராயும் போது துன்பங்கள்தான் அதிகமாக இருக்கின்றன என்பது தெரிய வருகிறது.
இதனால், பிறவித் தொடரினது நீளத்தைச் சுருக்கி முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நியதி இயற்கையில் அமைந்து விட்டது. இத்தகையத் தீவினைப் பதிவுகளையெல்லாம் மாற்றியமைத்துத் தூய்மை செய்து கொண்டு, கருமையம் தூய்மை அடைகின்ற போது, தானாகவே கருமையமாக விளங்கி வருகின்ற ஆன்மாவானது, இறைநிலை என்னும் வான்காந்தக் களத்தில் ஒன்று கலந்து விடுகிறது. இந்த முடிவை எய்துவதற்காகவே இயற்கையில் மனிதப் பிறவி வந்துள்ளது.
எனவே, மனிதனுடய பிறவியின் நோக்கம், பிறவிச் சக்கரத்தை நிறுத்தி இறைநிலையோடு இணைந்து விடுவதேயாகும். இதற்கு, அறிவாக இயங்கி வருகின்ற இறைநிலையே மனிதனிடத்தில் ஜீவகாந்தமாக இருப்பதனால், அத்தகைய அறிவைக் கொண்டு நிறைவு பெற வேண்டும். அறிவானது, தூலப் பொருட்களையே, தொடர்பு கொண்டு இருந்ததனால், மறை பொருளாக உள்ள தெய்வநிலை உணர முடியாத மயக்கத்தில் வாழ்க்கையில் ஆழ்ந்து துன்பமுறுகிறது. இந்த மயக்கம் தீர்ந்து தெளிவு பெறுவதற்கு முறையான உளப்பயிற்சியின் மூலம் மன அலைச்சுழல் விரைவைக் குறைத்து இறைநிலையோடு அறிவு ஒன்றுபட வேண்டும். ஆகவே, இறையுணர்வு என்பது மனிதனுக்குத் தேவையாக உள்ளது. இந்த உணர்வை ஒவ்வொரு மனிதனும் நேரடியாக அவனாகவே பெற்றுக் கொள்வது கடினம்.
எனவே, முன்னமே இந்த அறிவின் விளக்கத்தைப் பெற்றவளர்கள் விளக்கிக் காட்டி ஒருவரே, பலரை இறையுணர்வு பெறச் செய்யலாம். அந்த முறையில் இறையுணர்வு பெற்றவர்கள் இதுவரையில் தெளிவாக மொழி வழியிலும், பயிற்சி வழியிலும் கொடுத்துள்ள உண்மை விளக்கங்கள் சுத்த வெளியாகிய இறைநிலையே முடிவான அருட்பேராற்றலான தெய்வம் என்பதாகும்.
சுத்தவெளி ஒன்றுமில்லாதது என்ற கருத்து புலன் உணர்விலேயே மயங்கி வாழ்ந்து கொண்டிருந்த மனிதனுக்கு எளிதாக எட்டவில்லை. உணர்ந்தவர்கள் அதற்கு கொடுக்கும் விளக்கம் சுத்தவெளியானது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும் நான்கு வளங்களை உடையதாக இருக்கிறது என்பதை விளக்கியுள்ளார்கள். சுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள், உயிரினங்கள் எவ்வளவு தோன்றினாலும் சுத்தவெளியோ, ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது. இந்த உண்மையை விளக்கும் வார்த்தைதான் வற்றாயிருப்பு ஆகும்.
பலகோடி சூரிய குடும்பங்களை உடைய இந்தப் பேரியக்க மண்டலத்தில் உலவும் அனைத்தையும் இதே சுத்தவெளிதான் தாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் சுத்தவெளியைப் பேராற்றல் என்று கூறுகிறோம். இதே வெளியானது அதில் தோன்றிய அணுவின் அலையோடு கூடும் போது காந்தம் என்ற ஒரு பேராற்றலாகி அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்று தன்மாற்றம் அடைகிறது.
ஆகையால் எந்தப் பொருளிலும் எந்த இயக்கத்திலும் இதே சுத்தவெளிதான் ஊடுருவி நிறைந்து ஒழுங்காற்றலாக, செயல்புரிந்து வருகிறது. இந்த ஒழுங்காற்றல் தான் அறிவு என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு தோற்றத்திலும் உருவ அமைப்பு, குணங்கள், காலத்தால், காலம் என்ற அதிர்வால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. இதனால் சுத்தவெளி பேரறிவு என்று விளக்கப்படுகிறது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார்.
சுத்தவெளியானது தன்னிறுக்க அழுத்தமாக உள்ளதால், அது விட்டு விட்டு அழுத்துகின்ற போது அதுவே நுண்ணதிர்வாகச் செயல்புரிகிறது. இந்த நுண்ணதிர்வு என்ற காலத்தின் நுண்ணிய அலகு கண் சிமிட்டும் நேரமேயாகும். இந்த அதிர்வு இறைநிலையில் அடங்கி இருப்பதனால் எல்லாப் பொருட்களும் தோன்றவும், வளரவும், முடியவும் என்ற செயல்கள் உண்டாகின்றன. இதனால் இறையாற்றலைக் காலம் என்று சொல்கிறோம்.
ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. காலமாகவும் இருக்கிறது. இவற்றை உணர்ந்து கொள்கின்ற மனித அறிவு முழுமை பெறுகிறது. இதனால் இறையாற்றலைக் காலம் என்று சொல்கிறோம். ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. காலமாகவும் இருக்கிறது. இவற்றை உணர்ந்து கொள்கின்ற மனித அறிவு முழுமை பெறுகிறது.
மனிதப் பிறவியின் நோக்கம் நீங்கள் எந்த மூலத்திலிருந்து வந்தீர்களோ அந்த மூலத்துடனே ஒன்றாகி, இனி பிறப்பு-இறப்பு சுழலில் மீண்டும் மாட்டாமல் தப்பிப்பது — இதுதான் இந்து மதத்தின் ரிஷிகளும், மகாத்மாக்களும், ஞானிகளும், அவதார புருஷர்களும் நமக்குச் சொல்லித்தருவது. “இந்த மனிதப்பிறவியின் குறிக்கோள் இறைவனை அடைவதே; வேறு என்ன செய்தாலும் அது வியர்த்தம் (வீண்) தான்". வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை குண்டலினி யோக பயிற்சிகளால் இறையுணர்வையும் அறநெறியையும் உணர்ந்து நாமும் உயர்ந்து மற்றோரையும் உயர வைப்போம்.
PHONE: +91 7904402887 / 04253-292746