There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
உலக நாடுகள் பலவற்றிலும் பெரும்பாலான மக்கள் மாமிச உணவை உண்ணுகின்ற பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அண்மையில் சில காலமாகச் சில அறிஞர்கள் - சாதாரண மக்களும் கூட – மாமிசம் தவிர்த்த உணவை மாத்திரம் உண்ண வேண்டும் என்று கருதி வருகின்றார்கள். இது பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம்!
இவ்வாறு மாற்றமடைகிற ‘உணவுமுறைப் பண்பாட்டு விஷயத்தில்’ சில அன்பர்கள் பிணக்கு கொள்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற வாதம் என்னவெனில், ‘ஓரறிவுப் பொருளான தாரவங்களும் உயிருடையவை தானே? இவற்றை மாமிசம் தவிர்த்த உணவாக எப்படிக் கொள்ள முடியும்?’ என்பதாகும். ‘தாவரத்தின் பகுதிகளை உணவாக உண்ணுகின்ற போது, ஏன் மற்ற உயிரினங்களையும் - அவற்றின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ அழித்து – உணவாகக் கொள்ளக் கூடாது?’ என்பதும் அவர்கள் வாதம். இதெல்லாம் நீதி போலத் தோன்றினாலும், இதற்கும் மேலாக தத்துவஞான, விஞ்ஞான அறிவில் ஆழமான கருத்து ஒன்று உண்டு. ‘ஆன்மீகவாதிகள் புலால் உண்ணலாமா? உண்ணக் கூடாதா?’ என்ற கேள்வி நின்று கொண்டே இருக்கிறது. வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் மாதிரி, ஆன்மீகத்திற்கு – மனிதப் பண்புக்கு – ஓர் உச்சநீதிமன்றம் உள்ளது. அதுதான் திருக்குறள்.
நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ள விஷயம் பற்றி அதில் ஐயன் என்ன கூறுகிறார்? எடுத்த எடுப்பிலேயே – அதிகாரத் தலைப்பாக – அவர் தனது தீர்ப்பைக் கூறிவிடுகிறார், ‘புலால் மறுத்தல்’ என்று. போதுமா? அதிலுள்ள 10 குறள்களிலும் விதிவிலக்கு ஏதும் கூறப்படவில்லை. மாறாக ஒரே ஒரு குறளில், மேல்முறையீடு செய்ய முடியாத தீர்ப்பாக அவர் வழங்குவது,
"தன் ஊன் பெருக்கப் பிறிதொன்றின் ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?"
என்ற தீர்ப்பைத்தான்.
தனது சதை பெருப்பதற்காகப் பிற உயிரின் கதையை ஒருவன் தின்பானேயானால், அது எப்படி அருளுடமையாகும்? ஆன்மீகமாகும்? அதாவது, அருளுடமை, ஜீவகாருண்யம், அன்பு, கருணை உடையவர்களானால் புலால் உண்ணவே கூடாது என்பது தீர்ப்பு. புலால் உண்ணாமையை அன்புடமை காரணமாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் நாம்தான் ஆராய்ந்து விளக்கம் காண வேண்டும். உதவிக்கு வருகிறார் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி. சைவம் என்பதற்கும், அசைவம் என்பதற்கும் நமது அறிவைக் கொண்டு ஒரு வரையறை ஏற்படுத்திக் கொண்டு அந்த வரையரைக்குட்பட்டு, என்ன என்ன உணவெல்லாம் சைவம்? எதெதெல்லாம் அசைவம்? என்பதை கண்டுபித்துக் கொள்ளலாம் என்கிறார் மகரிஷிகள். அன்பு என்பது துனபத்தைத் தோற்றுவிக்காது. ஆகவே துன்பத்தைத் தோற்றுவிக்காத உணவெல்லாம் சைவம் எனலாம். இப்போது துன்பம் பற்றிய சில உண்மையான விளக்கங்களை நம் அறிந்து கொள்ள வேண்டும்
ஜீவன்களுக்குத்தான் துன்ப உணர்வு உண்டு. ஜடங்களுக்குக் கிடையாது. துன்ப உணர்வைப் பெறுவதற்கு – 1) துன்பத்தோடு தொடர்பு கொள்வதற்கு நரம்பு மண்டலமும், 2) துன்பத்தை உணர்வதற்கு மூளையும் – வேண்டும். நரம்பு மண்டலமும், மூளையும் இரண்டறிவு ஜீவன்கள் தொடங்கி, மனிதன் வரைக்கும் உண்டு. முதல் ஜீவனாகிய தாவர வர்க்கத்திலே நரம்பு மண்டலம் மட்டும் உண்டு. மூளை கிடையாது. துன்பம் உண்டு பண்ணப்பட்டால், துன்பத்தைதைச் சந்திப்பது நரம்பு மண்டலம். அந்தத் துன்பத்தைக் கடத்திக் கொண்டு செல்வதும் நரம்பு மண்டலம். புழு முதற்கொண்ட ஜீவன்களுக்கு நரம்பு மண்டலத்தோடு மூளைக்குத் தொடர்பு உள்ளதால், மூளையானது துன்ப அலைகளை ஏற்று, ‘ஆ! இது துன்பம்! ஐயோ! வலிக்கிறது!’ போன்ற துன்ப உணர்வுகளைப் பெறுகிறது.
தாவரத்திற்கு மேற்பட்ட ஜீவன்களிடத்தில் தான் துன்பம் அனுபோகமாகும். தாவரங்களை மனிதர்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் போது துன்பம் விளைகிறதா? விளைகிறது. அனுபோகமாகிறதா? அனுபோகமாவதில்லை. அந்தத் துன்பத்தை உண்டு பண்ணிய அலைகளை – துன்ப அலைகளை - நரம்பு மண்டலமானது கடத்திப் போய், மூளையிடம் கொடுக்க, ‘இந்த உணர்வுகள் எனக்குப் பொருத்தமில்லை. இவை இன்பமில்லை துன்பம்’ என்ற முடிவினை மூளை மேற்கொள்கிறது. ஜீவன் வருத்தத்தை மேற்கொள்கிறது. தாவரத்திற்கு மூளை கிடையாது. மூளையின் வேலையை பூமியே ஏற்றுக் கொள்கிறது.
கடத்தப்பட்டு வந்த துன்ப அலைகள் பூமியை வந்து சேர்கின்றன. எர்த் (earth) ஆகின்றன. அந்த துன்ப அலைகள் பூமிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தா. ஆகவே, ’துன்பம் விளைகிறது’ என்பது உண்மைதான் என்றாலும். அனுபோகமாவது இல்லை. எனவே தவரங்களுக்கு துன்பம் ஏற்படுத்தாமலே அதை நாம் கிள்ளுகிறோம். பறிக்கிறோம், உடைக்கிறோம், வெட்டுகிறோம், பிடுங்கி எறிகிறோம். அந்தத் தாவர இன ஜீவன் வருத்தத்தை பெற்றுக் கொள்வதில்லை. ஆகவே தாவரத்தை நாம் உணவுக்கோ, அல்லது வேறு எந்த அனுபோகத்திற்கோ சேர்த்துக் கொள்வதில் எந்த விதமான தவறும் கிடையாது. ஆனால் ‘ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் கூற்றை சில பேர் எடுத்துக் காட்டிவிளக்கம் கேட்பார்கள். வள்ளலார் வாடியது பயிர் துன்புறுகிறதே என்பதற்காக இல்லை. இப்படிப் பயிர் வாடினால், ‘எப்படிப் பலபேர் பிற்காலத்தில் பட்டினி கிடக்க வேண்டி வரும்!’ என்பதை நினைத்துத்தான் அவர் வாடியிருக்க வேண்டும். பயிர் வாடினால் வைக்கோலாவது ஆகும். மாடுகள் திண்ணும், வீண்போகாது. ஆனால், ‘விளைச்சல் குன்றிப் போவதால், மனித வயிறுகள் பல வாடிப் போகுமே!’ என்பது தான் சரியான விளக்கம்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எல்லா உயிர்களும் உன்னை வணங்கதக்கவனாக இருக்க வேண்டுமா? பிறர் உயிர்களை கொன்றோ (பிறர் கொன்றதை) பெற்றோ உண்ணாது இருந்தால் எல்லா உயிர்களும் தொழும். ஏனெனில் இவன் கொல்லாமல் இருப்பதனால் தானே நாம் உயிருடன் இருக்கிறோம் என்று நன்றியுடன் நினைந்து வணங்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
எனவே வேதாத்திரி மகரிஷி அவர்களின் கூற்றுப்படி உணவு மாற்றத்தை உடலும் மனமும் ஒத்துக்கொள்கின்ற வகையில், மாமிச உணவை சிறிது சிறிதாகக் குறைத்து, தாவர உணவு வகைகளை அதிகப்படுத்தி, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு எடுத்துக்கொண்டு சாத்வீக உணவு முறையினைப் பழக்கமாக்கி கொள்ளலாம். குழந்தை முதலே தாவர உணவு கொள்ளும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால், கஷ்டமே தோன்றாது.
PHONE: +91 7904402887 / 04253-292746