There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
குண்டலினி யோகத் தவப் பயிற்சியின் ஆரம்பக் காலத்திலேயே மூலாதாரத் தவமாகிய சாந்தியோகம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். மூலாதார மையம் என்பது முதுகந்தண்டின் அடிப்பகுதியாகும். ஆசனவாய்க்கு ஓர் அங்குலம் மேலே உள்ள பால் உணர்ச்சிச் சுரப்பியை இது குறிக்கும். எனவே, மூலாதாரத்தில் நின்று தவம் இயற்றும்போது, அந்த இடத்தில் - அதாவது உடலின் உள்ளே (முன்புறமோ பின்புறமோ அன்று) – நினைவைச் செலுத்தித் தவம் இயற்ற வேண்டும்.
இதற்குச் சாந்தியோகம் என்றும் பெயர். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று காரணமாகப் பிறவிகள் தொடர்ந்து கொண்டே போகின்றன. பிறவித் தொடருக்கு மக்கட் பேறுதானே வழி? அந்தப் பேற்றினைப் பெறுவதற்காக உயிராற்றலானது மூலாதாரத்தில் இறங்கி மையம் கொண்டுள்ளது. உயிராற்றலின், அதாவது ஆன்மாவின், நிலைக்களமானது மூலாதாரத்திலேயே இருக்கும்வரை, உயிருக்கு உய்வு இல்லை.
மேலும் மேலும் தவறுகள் செய்து துன்பத்திற்கும், பிறவித் தொடருக்கும் ஆளாக வேண்டியிருக்கும். தன்னிலை விளக்கம் கிட்டவே கிட்டாது. உயிருணர்வு பெற வேண்டுமானால், உயிராற்றலின் இயக்க மையத்தை ஆறாவது ஸ்தானமான ஆக்கினைக்கு மாற்றியாக வேண்டும். இதுவே நமது எளிய முறைக் குண்டலினி யோகத்தின் - மனவளக்கலையின் - முதற்படி. இதை மறு பிறப்பு எனலாம். மாற்றிப் பிறத்தல் என்று பெரியவர்கள் சொல்லிச் சென்றார்கள்.
அப்படியிருக்க, மீண்டும் மூலாதாரத்தில் உயிராற்றலை வைத்துத் தவம் செய்ய வேண்டும் என்று சொல்வது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். வேக வாகனத்தை இயக்கக் கற்றுக் கொடுக்கும்போது, ஆக்ஸஜலேட்டரை அழுத்தக் கற்றுத் தருபவர், கூடவே பிரேக்கையும் காட்டிக் கொடுத்து, அதன் மதிப்பையும், உபயோகத்தையும் சொல்லித் தருவார். அதுபோல், உயிராற்றலை ஆக்கினைக்கும், அதற்கும் மேலேயும் தூக்கி நிறுத்திப் பழகுதல்தான் தன்னிலை விளக்கத்தையும் ஆன்மிக உயர்வையும் தருமென்றாலும், தவக்கனல் பல காரணங்களால் கட்டுமீறும் போதும், வேறு சில சூழ்நிலைகளிலும் உயிராற்றலை அதனது பழைய இடத்திலேயே கொண்டு போய் நிறுத்தியாக வேண்டும். இதுவே சாந்தியோகம்.
இந்தச் சாந்தியோகம் என்னும் மூலாதார தவத்தை ஆரம்ப காலத்தினர் அறிந்திருக்கவில்லை. அதனால் முற்காலத்தில் தவமியற்றுதல் என்பது உயிருக்கே ஆபத்தான காரியமாக இருந்திருக்கிறது. பிரமை, பைத்தியம் போன்ற கொடிய வியாதிகளும் சம்பவித்திருக்கின்றன. ஆனால் இப்போது அந்தப் பயம் சற்றும் கிடையாது. யோக சாதனையின் அதீதத்தின் காரணமாகவோ, உணவின் காரணமாகவோ, தவக்கனல் மிகுந்தால், அதை உடனடியாக உணர்ந்து, தணித்துக் கொள்ளவும், அந்தத் தவக்கனலின் அதீதத்தை உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கிக் கொள்ளவும் சாந்தியோகம் உதவுகிறது.
மேலே சென்ற நம் உயிராற்றலைக் கீழே இறக்கி நின்று தவம் இயற்றுவதால் சாந்தியோகத்திற்கு இறங்குபடி என்றும் ஒரு பெயர் உண்டு. தவக்கனலை இறக்கி உடலுக்கும் மனதிற்கும் அமைதி தருவதால் சாந்தியோகம் என்று பெயர் வந்தது. ஒரு குண்டலினியோகி தவமியற்றித் தவமியற்றிச் சேமித்து வைத்துள்ள தவச்சக்தியின் மிகுதியானது சாந்தியோகத்தின் பயனாக உடல் சக்தியாக மாறுகிறது. அது உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்பிற்கும் பயன்படும். உடல்வலி, தலைவலி, ஜூரம், அஜீரணம் போன்ற சாதாரண நோய்கள் சாந்தி யோகத்தால் கட்டுப்படும். மலச்சிக்கல் விலகும். உடலில் உயிரின் இயக்கம் சீராகும்.
நாள்பட்ட கர்மநோய் என்று சொல்வார்கள். அதாவது இதுதான் வியாதி என்று தீர்மானமாகத் தெரிந்து கொண்டாலும், அதற்கு நிச்சயமாக இதுதான் மருந்து என்று கண்டுபிடித்துக் கொடுத்தாலும், அந்த வியாதி தீராது. அதுதான் கர்ம நோய். நீண்டகாலமாக இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட – எவ்வளவு நாளாக இருந்து கொண்டு இருக்கக்கூடிய கர்ம நோயாக இருந்தாலும்கூட – தினந்தோறும் பலவேளை சாந்தியோகம் மட்டுமே செய்துவந்தால் - மற்ற பத்திய நிமித்தங்களையும் கடைப்பிடித்து வரும் பட்சத்தில் - அந்த நோய் மெல்லத் தீர்ந்து விடும்.
PHONE: +91 7904402887 / 04253-292746