சினம் ஒரு கொடிய மனநோய் பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று

புலன் கவர்ச்சியால் மனம் சிறு சிறு பொருளையும் இன்பங்களையும் துய்ப்பதால் அறிவுத்திறமையும், ஆற்றலும் தடைப்பட்டு, தேக்கமுற்று, அதன் இயக்க விரைவு தன்முனைப்பு என ஆகிறது. இந்தத் தன்முனைப்பு, பொருட்கள் மீதும் மக்கள் மீதும் தொடர்பு கொண்டு பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு உணர்ச்சிவயமான ஆறுகுணங்களோடு மனிதன் செயல்புரியும் போதுதான் பொய், சூது, களவு, கற்பு நெறி பிறழ்தல், கொலை எனும் ஐந்து பெரும் பழிச்செயல்களைப் புரிகிறான். மனிதகுல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும், பிணக்குகளும் போர்களும் உண்டாகின்றன.

இத்தகைய கேடுகளை விளைவிக்கும் உணர்ச்சிவயமான குணங்களில் சினமும் ஒன்று. சினம் ஒருவரிடம் எழும்போது உடலிலும், மனதிலும், சுற்றத்தாருக்கும் சிலசில கேடுகள் ஏற்படும். அக்கேடுகள் அதே எண்ணம் அதே செயல், எழுந்து வாழ்வைத் துயர் அடையச் செய்யும். 

சீவகாந்த அலையே மனம். புலன்களை விழிப்பு நிலையில் இயக்கம் போது மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40 வரையில் இருப்பதாகக் கணக்கெடுத்துள்ளார்கள். விஞ்ஞானிகள் அதற்குரிய (E.E.G) எலெக்ட்ரோ என்செப்லோகிராம் கொண்டு இந்த நிலையில் இயங்கும் மன அலைக்கு பீட்டா அலையென்றும் பெயர் கொடுத்திருக்கிறார்கள். சினம் எழும் போது பீட்டா அலை மிகவும் விரைவு கொள்ளும். அதனால் சீவகாந்த ஆற்றலை மிகுதியாகச் செலவாக்கி விடும். இந்த விரைவான உணர்ச்சி வயப்பட்ட அலையால் காந்த ஆற்றல் குறைவுபடுகிறது. இயற்கை அதை உடனே சமன் செய்யத் தொடங்குகிறது. ஒவ்வொரு உயிர்த்துகளிலும் தற்சுழல் விரைவு அதிகமாகிறது. இதனால் காந்த ஆற்றல் கூடி அதன் இருப்பில் சமநிலைக்கு வருமேயானாலும், தொடர் விளைவுகளைச் சிந்திப்போம்.

விரைவான தற்சுழற்சி உயிர்த்துகள் அடையும்போது அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் இயல்பாக அமைந்துள்ள இடைவெளி அதிகமாகிறது. இதனால் சூக்கும உடலின் பருமன் பெருகுகின்றது. உதாரணம்: தண்ணீரைச் சூடேற்றினால் நீர் ஆவியாகி அதன் பருமன் விரிவடைந்து, ஒன்றுக்கு நூறாக விரிவடைவதுபோல, தூல உடலுக்குள் இருக்கும் சூக்கும உடல் (உயிர் ஆற்றல்) விரிவு பெற்றால் உடலை விட்டும் அது வெளியே பிதுக்கம் (Extension) பெறும். அப்படி வெளியே போகும் உயிராற்றல் மீண்டும் உடலுக்குத் திரும்பாது. இதனால் உயிரின் திணிவு குறைந்து வலுவு குறையும். மேலும் உயிராற்றல் விரிவு மூளை செல்களில் மோதும். என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்று சிந்திக்கும் நிலையே மாறி ஒருவித போதை நிலையுண்டாகும். பொருளை அழிக்கவோ, மக்களின் உடலுக்கும் மனதுக்கும் துன்புறுத்தவோ தக்க செயல்கள், முரட்டுச் செயல்கள் உருவாகும்.

மேலும், அதன் தீ விளைவுகளைக் கவனிப்போம். சூக்கும ஆற்றலின் விரிவு இரத்தத்தை விரைவாக ஓடச் செய்து இரத்த அழுத்தத்தை (Blood Pressure) அதிகரிக்கும். இதனால் இருதயத் துடிப்பும், நரம்புகள் இயக்கமும் பாதிக்கப்பட்டு கை, கால்கள் நடுக்கமும் உண்டாகும்.

இவ்வளவு விளைவுகளும் ஒரு தடைவ சினம் கொள்ளும் போது சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தவிர்க்க முடியாதபடி ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறது. அடிக்கடி சினம் கொள்பவர்கள் உடல் நலமும், மனவளமும் என்ன ஆகும். இந்த விளக்கங்களை உள்ளடக்கியே, சினம் சேர்ந்தாரைக் கொல்லி எனப்படுகிறது. சினம் கொள்ளும் மனிதன் வளத்தையே அழிக்கிறது என்பதுதான் பொருள்.

மனிதனுக்குப் பொதுவாக யார் மீது சினம் உண்டாகிறது? யார் ஒருவர் அவர் நலனுக்காகவே அன்போடும் பணிவோடும் அக்கரையோடும் உதவி செய்கிறார்களோ அல்லது தொண்டு செய்கிறார்களோ அவர்கள் மீது தான் அடிக்கடி சினம் எழுகிறது. நலம் செய்பவர்களைப் பாராட்ட வேண்டும். நன்றி செலுத்த வேண்டும். இதுதான் மனிதப் பண்பு. மாறாக அவர்மீது சினம் கொண்டால் அந்த இழிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் வருந்துவார். அவர் வருத்த அலை சினம் கொண்டவர்களுக்கு சாப அலையாகப் பதிவாகும். விளைவு உறவிலே உள்ள அன்பும் பிடிப்பும் குறையும் அல்லது முறிந்து போகும். சாபஅலைப் பதிவினால் மனதின் அமைதிநிலை பாதிக்கப்படும். சினம் என்பது அதுயாரைச் சேருகிறதோ அவர் நலம் அழிப்பதோடு அவருக்கு உள்ள அன்புள்ள நட்பையும், உறவையும் கெடுத்துவிடும்.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746