There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
மனவளக்கலை என்றாலே மனதை வளப்படுத்தும் கலை. மனதை ஏன் வளப்படுத்த வேண்டும்? மனித வாழ்வு வளம்பெற வேண்டுமென்றால் மனதை வளப்படுத்த வேண்டும். ஏனெனில் மனம் வேறு மனிதன் வேறு அல்ல. மனதின் மாண்பே மனிதனின் மாண்பு. மனதின் தாழ்வு மனிதனின் தாழ்வு .
துன்பம் இல்லாத இன்பம் நிறைந்த வாழ்வு வேண்டும் என்றால் மனதை வளப்படுத்துவது அவசியம். ஏனெனில் செய்த தவறுகளே துன்பங்களாக வருகின்றன. தவறுகள் எண்ணம், சொல், செயல் இவை மூன்றாலுமே இழைக்கப்படுகின்றன. சொல்லுக்கும், செயலுக்கும் மூலம் எண்ணம். எண்ணத்திற்கு மூலம் மனம். எனவே மனதை சரிசெய்தால் சகலமும் சரியாகிவிடும்.
மனதின் மாண்பைப் பற்றி சொல்லாத மதங்களோ, சமயங்களோ, ஞானியர்களோ, அறிஞர்களோ இல்லை என்றே சொல்லலாம். "எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்' என்கிறது பைபிள். "நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது நமது எண்ணங்களின் விளைவே. நமது இருப்பு நமது எண்ணங்களின் உருவாக்கமே. எவனது சிந்தை தூய்மையானதோ, எவனது பேச்சு இனிமையானதோ, இன்பம் அவனைத் தொடர்கிறது. அது அவனை விட்டு அகல்வதேயில்லை' என்கிறது தம்மபதம். "உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின்றாடார் வினை கெடப் பள்ளம் மேடும் பறந்து திரிவரே கள்ளமன முடைக் கல்வியில்லோரே' என்கிறது திருமூலரின் திருமந்திரம்.
"வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு'
என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். எண்ணங்களைப் பற்றி சிந்தனையாளர் ஜேம்ஸ் எலன் இவ்வாறு கூறுகிறார் : "எண்ணங்களே எமை வார்த்தன எண்ணங்களே எமை உருவாக்கின கள்ள மனமுடையோனை துன்பம் தொடர்கிறது. மாடுதனைத் தொடரும் வண்டிபோல் நல்ல மனமுடையோனை இன்பம் தொடர்கிறது அவனது சொந்த நிழலைப் போல்' இவை எல்லாவற்றிட்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது வழமையான எளிமையான பாணியில் இவ்வாறு கூறுகிறார்: "மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ மனமதை தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே மனமதை உயர்த்தினால் மட்டிலா இன்பமாம் மனத்திலே உளஎல்லாம் மற்றெங்கு தேடுவீர்? ஆகவே மனித வாழ்வு வளமாக வேண்டுமென்றால் மனதை வளப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு மனதிற்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். அதுவே மனப் பயிற்சி அல்லது உளப்பயிற்சி எனப்படுகிறது.
மனதிற்கு யார் பயிற்சி அளிப்பது? வேறு யார்? மனம் தனக்குத் தானேதான் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். எனெனில் தவறு இழைப்பது மனம். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மனிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியை தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனம்தான். மனம் தன்னை உயர்த்திக் கொண்டால் இன்பம், இடையறா இன்பம். மனதை தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனிதனிடம் தான் இருக்கிறது. மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கி பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எய்தினால், அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனத்தினை கொண்ட மனிதனும் தெய்வமும் தரத்தில் ஒன்றே. இந்த அற்புதத்தைத் தான் மனவளக்கலை சாதிக்கிறது. மனம் என்பது ஒரு அலை இயக்கம். அலையின் இயல்பு ஓடிக்கொண்டே இருப்பது. எனவே மனமும் ஓடிக்கொண்டே இருக்கும். அதனை நிறுத்துவது சாத்தியமன்று.
இதனையே மகரிஷி அவர்கள் "மனத்தை அடக்க நினைத்தால் அலையும் மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்' என்று சொல்கிறார். ஒடிக் கொண்டிருக்கும் நதியை தடுத்து அணைக்கட்டி திசை திருப்பி பாசனம் செய்து பயன்படுத்துவதுப்போல், ஓடிக் கொண்டிருக் கும் மனதை திசை திருப்பி ஏதாவது ஒன்றின் மேல் நிலைத்து நிற்க வைத்து பழக்கலாம். இதுவே தவம் அல்லது தியானம் எனப்படும்.
தியானம் என்பதன் தமிழ் அர்த்தம் இடையேறாத நினைவு என்பதாகும். சாதாரணமாக நீண்ட பழக்கத்தின் காரணமாக புலன்கள் மூலம் வெளியே ஓடிக் கொண்டிருக்கும் மனத்தை உள்ளே திருப்பி அதன் மூலமான உயிரில் ஒன்றச் செய்தல். புறநோக்காக இருக்கும் மனத்தை அகநோக்காக திருப்புதல். எனவே இதனை அகநோக்குத் தவம் அல்லது அகத்தவம் என்கிறோம்.
PHONE: +91 7904402887 / 04253-292746