There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
ஆராய்ச்சியில்லாத மக்களிடம் நிலவி வருகின்ற கற்பனைகள் பல. இது போன்ற கற்பனைகளைக் களைந்து மனித இனம் பண்பாட்டில் உயர்ந்து, அமைதியாக வாழ்வில் சிறப்படைய வேண்டும் எனில், இறைநிலை உணர்வு என்ற தெளிவு வேண்டும். இறைநிலைத் தெளிவு உண்டான பின் செயல்விளைவுத் தத்துவம் தானாகவே தொடர் ஊற்றாகத் தோன்றும்.
அப்பொழுது தான் உண்மையுணர்ந்த வாழ்வாக – தனக்கும், பிறருக்கும் துன்பம் எழாத செயல்கள் உண்டாகும். எனவே, அறிஞர்கள் அனைவரும் மக்களின் அறிவையும், மனதையும் பற்றிச் சிந்தித்தவர்களுக்கெல்லாம் கூட உண்மையை உணர்த்தி, அவர்களது சிந்தனையை ஊக்கி விட வேண்டும். இது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மக்கள் நலனை நாடக்கூடிய அறிஞர்கள் அனைவரது பொதுவான கடமையாகும்.
இயற்கையின் பயணத்தில் ஒரு பெரிய முன்னேற்றமான அறிவுப் பாதையில் மனிதன் தான் சிறந்தவன். பல கோடிப் பிறவிகளைத் தாண்டி உருவ அமைப்புத் தொடரும், உள்ளத்தின் இயக்கமும் அமைந்திருப்பதால், காலத்திற்குக் காலம் பண்பாட்டின் உயர்வும், சீர்திருத்தமும் மனிதனுக்குத் தேவையாக இருக்கின்றன. பல ஜீவ இனங்களின் செயல்களும் உறுப்புகளும் பதிவுகளாகி அவற்றையே பழக்கமாகச் செய்ய ஏற்ற இயல்பு உடலில் அமைந்திருக்கிறது.
மனிதனாக உருவெடுத்த பிறகு அவற்றில் சில செயல்கள் மற்றும் பழக்கங்கள், தேவை இல்லாதவனாகவும், துன்பம் தருவனவாகவும் இருக்கின்றன. இவற்றை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு உடல் உறுப்புகளையும் அவற்றில் அடங்கியுள்ள செல்களின் அடுக்குகளையும் முறைப்படுத்துவதற்கு ஏற்றபடி, எல்லா உறுப்புகளையும் தேவையான முறையில் இயங்கச் செய்வதற்கு உடற்பயிற்சியானது அவசியமாகிறது.
மேலும் உள்ளத்தின் இயக்கமானது மன அலைச்சுழல் விரைவை ஒட்டியிருப்பதனால், மனித மனதை முறையான செயல் திட்டங்களின் மூலம், அதன் சுழலை விரைவுகளைச் சீர்திருத்த வேண்டியும் உள்ளது. இந்தச் சீர்திருத்தத்திற்கு அகத்தவம் அவசியமாகும். மனிதமனம் வினாடிக்கு 1 முதல் 40 வரை விரைவாக இயங்க வல்லது. இந்தச் சுழல்விரைவு உடல் உறுப்புகளின் இயக்கங்களுக்கேற்பவும், எண்ணங்களின் தன்மைக்கு ஏற்பவும் ஜீவகாந்தத் தன்மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.
ஒரு செயலைச் செய்கின்ற போது, எந்த மன அலைச்சுழல் விரைவு இருந்ததோ, அதே சுழல் விரைவு மீண்டும் வருகின்ற போது, அதே வித எண்ணங்கள் துளிர்த்தெழுந்து செயலாகவும், எண்ணங்கள் எனும் அகக்காட்சிகளாகவும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும். இதனால் மயக்குற்று, உண்மையை அறிய முடியாமலும், நல்லது என்று தெரிந்தும் அதைப் பழக்கிக் கொண்டு பயன் அடைய முடியாமலும் மனிதன் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
மனிதன் புலன்களை இயக்குகின்ற போது, அந்தந்தப் புலன்கள் மூலம் தன்மாற்றம் பெறுகின்ற ஜீவகாந்த ஆற்றலானது செலவழிகின்ற நிலைமைக்கேற்ப, 14 முதல் 40 வரையிலும் உணர்ச்சி வயப்பட்ட நிலைக்குரிய மனச்சுழல் விரைவு அமைகின்றது. நாம் எல்லோருமே இந்த மன அலைச்சுழலில் தான் பெரும்பாலும் இருக்கிறோம். இந்த நிலைமையிலிருந்து விடுபட்டுத் தூய்மையான புதிய எண்ணங்களைக் கொள்ளவும், அவற்றைச் செயல்படுத்திப் பயன் காணவும் வேண்டுமெனில் 14 சுழல் விரைவிலிருந்து நமது மன அலைச்சுழலைக் குறைந்த விரைவில் இயங்கும்படி மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்..
எண்ணங்கள் மற்றும் செயல்களின் தன்மைக்கேற்பவும், நமது அகத்தவப் பயிற்சியின் பழக்கத்திற்கேற்பவும், நமது மன அலைச்சுழலை அமைதி அலையாகிய ஆல்ஃபா அலை (Aplha wave: 8 to 13 Cycles/Second நிலைக்குக் கொண்டு வரலாம். நுண்ணலை இயக்கமாகிய தீட்டா அலை (Theta Wave: 4 to 7 Cycles/Second) நிலைக்கும் கொண்டு வரலாம்.
மேலும் இறைநிலை அறிந்து நிற்கின்ற போது அல்லது அதை நாடி மனம் நிலை பெறுகின்ற போது, 1 முதல் 3 வரையிலான மன அலைச்சுழல் ஏற்படும். இதனை டெல்டா அலை (Delta Wave) என்று கூறுகின்றோம். டெல்டா அலை என்பது வேறொன்றுமில்லை. நீண்ட கால நோயாளிகளுக்கு மன அலைச்சுழல் விரைவு குறைந்து உண்டாகின்ற கோமா என்கின்ற மன அலை நிலைதான் இது. அப்போது எண்ணங்கள் அற்றுப் போகும். அது யோக பாஷையில் ‘அறிதுயில் நிலை’ எனப்படுகிறது.
இது பயிற்சியினால் உண்டாகின்ற போது, மனம் பூரண விழிப்பு நிலையில் இருக்கின்ற போது, இந்த நிலையை யோக சித்தி என்கிறோம். திறமையான அகத்தாய்வுப் பயிற்சியாளர் ஒருவர் மனதைக் குண்டலினி சக்தியாகிய ஜீவகாந்த அழுத்தக் களத்தின் மீது செலுத்திப் பழகுகின்ற போது, படிப்படியாக அமைதி அலை (ஆல்பா அலை), நுண்ணலை (தீட்டா அலை), அறிதுயில் அலை (டெல்டா அலை) அனைத்தையும் பெறலாம். முறையாகப் பழக வேண்டும்.
இந்த வித்தையை தெரிந்தவர்கள் மூலமே அறிந்து பழக வேண்டும். புத்தகத்தை பார்த்தோ, வாய்ச்சொற்களைக் கேட்டோ இந்த அகத்தவப் பயிற்சியை எந்த அளவிலும் செய்து உடலுக்கும், மனதுக்கும் கேடு விளைவிக்கும். அமைதியலை, நுண்ணலை, அறிதுயில் அலை இவற்றில் ‘நான் இப்படி இப்படி வாழ வேண்டும்’ என்று சங்கல்பம் செய்து கொள்வதோ, பிறர் நலம் பெற வாழ்த்துவதோ எளிதாக வெற்றி தரும். அகத்தவப் பயிற்சிகள் மூலம் எவரும் இறைநிலை உணர்ந்து, அறநெறியில் வாழ்ந்து, முழுமைப்பேற்றை அடையலாம்.
PHONE: +91 7904402887 / 04253-292746