There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
'தீக்ஷா' என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருளாகும். 'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது.
மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன.மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர். முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர். இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.
நம்முடைய உடலும், உயிரும் தாய், தந்தை இருவருடைய கூட்டாலேதான் உற்பத்தி ஆகியது. அது அந்தக் கருவிலேயே அவர்களுக்கு நீண்ட காலமாக பல பிறவித் தொடராக வந்த பரிணாமத்திலே என்னென்ன செயல் பதிவுகள் உள்ளனவோ அது எல்லாம் கருவமைப்பு என்ற சஞ்சித கர்மம் என்ற பதிவோடு நாம் பிறந்திருக்கிறோம். அந்தக் கரு உருவாகும்போது கணவன் மனைவி இருவரும் உணர்ச்சி வயப்பட்டு, அந்த மயக்கத்திலே இருந்ததனாலே, பிறந்த பிள்ளைகளுக்கும் கடைசிவரை அந்த மயக்கம் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். இதையே மாயை என்று சொல்வது. அந்த மாயையிலிருந்து விடுபட்டு மனிதப் பிறவியின் முழுமையான தெய்வ நினைவு, இறையுணர்வு, அதற்கேற்ற முறையிலான அமைதியான வாழ்க்கை, இவற்றைப் பெற வேண்டுமானால்அந்த நிலையை அந்த மயக்க நிலையை மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை யோகிகள் கண்டார்கள்.
குழந்தை பிறந்து வயது வந்த பிறகு அதாவது ஆங்கிலத்தில் “Age of Maturity” என்பது போல் அந்த வயது வந்த பிறகு (16-18வயது) குருவினுடைய உயிராற்றலை அக்குழந்தையின் உடலில் பாய்ச்சி அதிலேயிருந்து மேல்நிலைக்குக் கொண்டுவந்தால் நல்லது என்று யோகிகள் தெரிந்து கொண்டார்கள்.
மூன்று வகையிலே தீட்சை
குரு என்றால் யார் என்ற கேள்விக்கு வேதாத்திரி மகரிஷி பதில் கூறும்போது, பிரம்மத்தைத் தானாக உணர்ந்தவர் யாரோ அவர் அந்த நிலையிலே இருந்து உணரவேண்டியவர்களுக்குத் தன் உயிரைப் பாய்ச்சக் கூடியவர் குரு. அப்படிப் பாய்ச்சி, பாலிலே உறை ஊற்றினால் எப்படித் தயிர் ஆகிறதோ, அதேபோல குருவின் வயமாகவே சீடர்களை, அதாவது மற்றவர்களையும் ஆக்கி வைக்கக்கூடிய அளவிற்கு அந்த உயிர்ச்சக்தியினுடைய ஒரு நிலை பிரம்ம ஞானத்தோடு பாய்ச்சப்படுகிறது. அப்படிப் பாய்ச்சும் முறை இருக்கிறதே அதில் மூன்று வகை உண்டு. ஒன்று ஸ்பரிச தீட்சை. ஸ்பரிச தீட்சை என்றால் தொட்டுப் பாய்ச்சுவது. இரண்டாவது சட்சு தீட்சை – அதாவது கண்ணாலே பாய்ச்சுவது. மூன்றாவதாக ஞான தீட்சை – நினைவாலேயே பாய்ச்சுவது.
தொட்டுப் பாய்ச்சும் முறைக்கு ஒரு உவமானம் கூறியிருக்கின்றார்கள். பறவைகள் எப்படி முட்டையிட்டால் உடலாலே தொட்டு அடைகாத்துப் பொறிக்கிறதோ அதுபோல தொட்டுப் பாய்ச்சும் உபதேசம். மீனானது தன்னுடைய குஞ்சுகளைப் பொறிப்பதற்குக் கண்ணிலே இருந்து ஒருவகை மின்சார ஒளியைப் பாய்ச்சி உடனே பொறிக்கச் செய்யும். அதுபோல கண்மூலமாகப் பாய்ச்சுவது சட்சு தீட்சை எனப்படுவது. இவற்றைத் தவிர நினைவாலேயே உயிர்ச்சக்தியைப் பாய்ச்சி உய்விக்க முடியும். ஆடை முட்டையிட்டுவிட்டால் பிறகு அது எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். நினைவு மட்டும் முட்டை மேலேயே இருந்து கொண்டிருக்கும். அப்பொழுதுதான் அது பொறிக்கும். அப்படிப்பட்ட தீட்சையினை ஞான தீட்சை என்று சொல்வார்கள்.
இவ்வாறு செய்ய முடியும் என்பதை எவ்வாறு நம்புவது? என்று இந்தக் காலத்தில் உள்ள இளைஞர்கள் ஒரு கேள்வி எழுப்புவார்கள். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆமை முட்டையிட்டு விட்டுப் போன பிறகு, குறிப்பாக அந்த ஒரு ஆமையைக் கொன்று விடுகிறார்கள். இறந்துபோன ஆமையினுடைய முட்டை பொறிப்பதில்லை. எந்த ஆமை உயிரோடு இருக்கிறதோ அதனுடைய முட்டைதான் பொறிக்கிறது. பல தடைவ பரிசோதனை செய்து பார்த்தே இதையெல்லாம் வகைப்படுத்தி வைத்துள்ளார்கள். எனவே எண்ணத்தினாலேயும் ஒருவருக்குத் தீட்சை கொடுக்க முடியும். தொட்டும் தீட்சை கொடுக்க முடியும். தொட்டுத் தீட்சை கொடுப்பதன்மூலம் சாதாரண பாமர மக்களுக்கெல்லாம் இயல்பாகவும் விரைவாகவும் உயிர்ச்சக்தி பாய்ந்து விடும்.
PHONE: +91 7904402887 / 04253-292746