There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
மனிதப் பிறவி மகத்தானது, சிந்தனை ஆற்றலால் இயற்கை ரகசியம் அறியும் திறனானது மனிதனைப் பரிணாமத்தின் உச்சத்திற்கு உயர்த்தி விட்டன. மற்ற எல்லா உயிர்களும் இயற்கை வளங்களை உள்ளது உள்ளவாறு துய்த்து வாழ்கின்றன. மனிதனோ அதே இயற்கை வளங்களைச் செயல் திறனால் உருமாற்றியும், அறிவின் திறனால் அழகுபடுத்தியும் அதன் பின்னரே இவற்றைத் துய்த்து இன்புறுகிறான். ஒருவர் பெற்ற வாழ்க்கை அனுபவங்களை உலகிலுள்ள பலகோடி மக்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள ஏற்ற வாய்ப்பு மனிதனிடமே உள்ளது.
மனித இனம் தோன்றி இன்று வரையில் பல காலத்தும் கண்ட அனுபவங்கள் இன்று வாழும் மக்களிடம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு, நீண்ட காலமுடையதாகவும், உலக விரிவாகவும் உள்ள மனித சமுதாயத்தில் அறிவு, செயல் திறம் இவற்றை வேண்டும் அளவுக்கு ஒவ்வொருவரும் கற்றுக் கொண்டால்தான் செம்மையாக வாழ முடியும்.
முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை அவர்களுக்குப் பின் வாழவரும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளக் கூடிய சீரிய முறையே கல்வி எனப்படும். கல்வியில் நான்கு அங்கங்கள் உள்ளன. அந்த நான்கு அங்கங்களையும்,
“எழுத்தறிவு, தொழிலறிவு
இயற்கைத் தத்துவ அறிவு
ஒழுக்க பழக்கங்கள்
உணர்த்தும் முறையே கல்வி”
என்று "மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து" என்னும் நூலில் வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் கருத்தைப் பிறர் உணர்ந்து கொள்வதற்கு எழுத்தறிவு வேண்டும். செயல் திறம், அறிவு நுட்பம் இவற்றால் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றும் வாழ்க்கைப் பொருள் உற்பத்தித் திறமையும் இன்றியமையாதது. செயலுக்குத் தக்க விளைவு என்ற இயற்கை நியதியைப் புரிந்து கொண்டால்தான் நற்பயன் தரும் செயல்களைத் தேர்ந்து செய்து, வாழ்வில் இனிமை காண முடியும். எனவே இயற்கைத் தத்துவத்தை அறிந்து கொள்ளவும் வேண்டும்.
நான்காவது அங்கமானது ஒழுக்க பழக்கங்கள், ஒழுக்க உணர்வும், அதில் பழக்கமும் இன்றேல் தனிமனிதன் வாழ்வு மற்றும் சமுதாயத்தில் துன்பங்கள் பெருகும், சிக்கல்கள் வளரும், குழப்பம் மேலிடும். ஒழுக்கம் என்பது ஒவ்வொருவர் கருத்திலும் ஒவ்வொரு இடத்திலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. உண்மை அப்படியன்று. ஒழுக்கம் என்பதற்கே ஓர் அடிப்படைத் தத்துவம் உண்டு. வாழ்வில் எல்லோரும் இனிமை, அமைதி இவற்றை விரும்புகிறோம். ஆனால் சிக்கல்களும், துன்பமும், வருத்தமும் தான் அமைகின்றன. எனவே இவற்றைத் தவிர்க்க விரும்புகிறோம்.
மனித வாழ்வின் இந்த அடிப்படை நோக்கத்தை மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். எந்த செயல் செய்தாலும் இடத்திற்கும், காலத்திற்கும், தொடர்பு கொள்ளும் பொருளுக்கும் அல்லது நபருக்கும் ஏற்ப அமைதியோ, இன்பமோ, துன்பமோ விளைகின்றன. எச்செயல் செய்தாலும் அதன் விளைவு என்ன ஆகும் என்று யூகித்து உணர்ந்து கொள்ள வேண்டும். தனக்கோ, பிறர்க்கோ, உடலுக்கோ ஒரு செயல் தீமை தரும் என்று உணர்ந்தால் அதைச் செய்யாது தவிர்க்க வேண்டும். அதை போன்று, ஒரு செயலில் அளவு மீறினால், முறை மாறினால், அதற்கு ஏற்ப விளைவு மாறும், வேறுபடும். இதைக் கணித்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் இனிமை நிலை பெற வேண்டுமானால், எந்தச் செயலையும், விளைவறிந்து, அளவு முறையோடு ஆற்ற வேண்டும். அத்தகு பண்பே ஒழுக்கம் எனப்படும்.
உயிர்கட்கு இனியவை செய்ய வேண்டும், துன்பம் தவிர்க்க வேண்டும். இந்த முடிவில் நின்று எந்தச் செயலையும், சீர்தூக்கி அளவோடும் முறையோடும் ஆற்றுவதே ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கத்தைச் சிந்தனையோடு பழக்கத்தில் கொண்டு வந்துவிட்டால் அது வாழ்வில் எளிதாகச் செயல்படும். நற்பயன் விளைக்கும்.
எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு, ஒழுக்கப் பழக்கங்கள் என்ற நான்கு அங்கங்களும் இணைந்த கல்வியே மனிதனைச் சிறப்பாக வாழ வைக்கும். தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே இனிமையான உறவு நீடிக்கும். எல்லோரும் வாழ்வில் அமைதியும் நிறைவும் பெறலாம்.
இந்நான்கு உறுப்புகளில் எது ஒன்று குறைந்தாலும் அக்கல்வி வாழ்க்கைக்கு முழுப்பயன் தராது. அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். கல்வித் துறையில் உள்ள அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். நிறைவான கல்வியைப் பரப்பி நீடித்த மகிழ்ச்சியைத் துய்க்கலாம்.
PHONE: +91 7904402887 / 04253-292746