There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.
"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லா செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது.
உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன. பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.
வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.
நமது சீவகாந்தம் பேராற்றலுடைய ஒரு பெருநிதி. இறைநிலையும் அதன் இயக்க ஆற்றலான விண்ணிலிருந்து எழும் விரிவலையும் கூடிய ஒரு மறைபொருள் தான் நம் சீவகாந்தம். இந்த ஆற்றலின் இருப்பு நிலையே அறிவாக அமைந்திருக்கிறது. அதன் படர்க்கை நிலையில் அலை அலையாக இயங்குவதே மனம். மனத்தடியில் அறிவும் உயிரும் இறைநிலையும் இணைந்திருக்கின்றன. மனதை விரித்தால் அதற்குள் அணுமுதல் அண்டகோடிகளும் அடங்கிவிடும்.
அன்பு கலந்த அமைதி வேட்பு எண்ண அலைகள் உலகம் முழுவதும் பரவும். பேரியக்க மண்டலம் முழுவதும் நிரம்பும். உலக உயிர்களுடைய உயிரிலும், அறிவிலும் ஊடுருவி இயங்கும். ஆங்காங்கு அமைதி எண்ணப் பதிவுகளை ஏற்படுத்திவிட்டுக் கடைசியாக சுவரின் மீது எறிந்த பந்து திரும்பி அடித்தவரிடமே வருவது போல உங்களிடமே அந்தத் தூய எண்ண அலைகள் வந்து முடியும். உங்கள் வாழ்வில் எந்த நாளும் நலமும் வளமும் விளைக்கும் கருணை ஊற்றாகும். இறைநிலை, உயிர்நிலை, மனநிலையாகிய மூன்று மறை பொருட்களும் தவத்தாலும், ஆராய்ச்சியாலும், அனுபவத்தாலும் பெற்ற உண்மைகள்.
நாம் உடலால் வேறு வேறாக இருந்தாலும், உயிரால் பேரியக்க மண்டலம் முழுவதும் இணைத்துக் கொண்டு உள்ளோம். அறிவால் இறைநிலையோடு இணைந்தே உள்ளோம். நாம் நினைத்தால் மிகவும் நுண்ணிய பொருளான ‘விண்’ வடிவம் கொண்டு விண்ணாக மாறலாம். மனதை விரித்து பேரியக்க மண்டலத்தையும், இறைநிலையையும் உள்ளடக்கி நிற்கலாம். நம் மனதுக்கு அப்பாலான பொருள் ஏதுமேயில்லை. பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்ற நான்கில் தேவையுணர்வு, பழக்கம் இவற்றால் உணர்ச்சிவயப்பட்டு மனதுக்கு எல்லை கட்டிக் கொள்வது மனிதனுடைய இயல்பு. இந்தக் குறுகிய நோக்கப் பழக்கத்தால் ஒவ்வொரு மனிதனும் தனது பெருமதிப்பை உணராமல் அறிவில் ஏழ்மை நிலை அடைகிறான்.
“விழிப்படையுங்கள்! இறைநிலையாகவும், உயிராகவும், மனமாகவும் முப்பெரும் பொருட்கள் இணைந்த ஒரு பிரபஞ்சப் பெருநிதியாக உள்ள மதிப்பையுணர்ந்து, அறிவுத் தேக்கத்திலிருந்து விடுபடுங்கள் உலகை நினைந்து அன்போடும், கருணையோடும் வாழ்த்துங்கள். உங்கள் அறிவாட்சித்தரம் (Personality) புதுமையடையும். அமைதிக்கு நிலைக்களமாக விளங்குவீர்கள். உங்கள் விரிந்த மனம், மயக்க நிலையிலிருந்து விடுபட்ட மனம், உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் அமைதி நிலையில் ஆழ்த்தும், வாழ்த்தி வாழ்த்தி வாழ்வோம்” என்கிறார் தத்துவஞானி அவர்கள்.
வாழ்த்தின் நன்மை:
1. "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.
2. இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.
3. அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.
4. ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.
PHONE: +91 7904402887 / 04253-292746