There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
வருமானம்:
அற வழியில் பொருளீட்டி, அந்தப் பொருளின் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவானது தடையற்ற வளர்ச்சி பெற்று, முழுமைப் பேறாகிய வீடுபேறு இப்பிறவியிலேயே கிட்டும். அறவழியில் பொருளீட்டினாலே, பொருள் சேமிப்பும் நிச்சயமாக உண்டாகும். அறவழியில் பொருளீட்டினாலே, அறவழியில் செலவிட்டுக் கொள்ளவும் முடியும்.
ஒழுக்கம், கடமை, ஈகை இம்மூன்று உறுப்புகள் ஒன்றிணைந்த எந்தச் செயலானாலும் அது தான் அறம் ஆகும். சமுதாய நலம் கெடாமல் அறவழியில் பொருளீட்டி வாழ்வது மனிதனுக்கு இயல்பான காரியந்தான். இதனை உணர்ந்தால் சமுதாய வளத்தின் அரணாகிய அறநெறி இயல்பாகவும் எளிதாகவும் அமைந்துவிடும்.
கடன்:
கடன் அன்பை முறிக்கும் என்பது வெறும் பழமொழி அல்ல; அது முன்னோர்களின் அனுபவப் பாடம். கடனில்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்று முன்னோர்களும் வாழ்ந்து சென்றிருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் கடனில்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. இன்று எவற்றிற்கு கடன் வாங்கலாம் என்கிற எந்த வரம்புகளும் இல்லாமல் வாங்கிக் குவிக்கிறோம். கட்ட முடியாத அளவுக்கு வாங்கிக் குவித்து, வருமானத்தை கடனுக்கும், வட்டிக்கும் கட்டி வருகிறது பல குடும்பங்கள்.
இதற்கு ஏற்ப கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. கடன் கொடுப்பதற்கு என்றே `லோன் மேளா’-க்களை நடத்துகின்றன வங்கிகள். தொலைக்காட்சிகளில் சரிபாதி விளம்பரங்கள் வீட்டுக்கடன், வாகனக் கடன் என்பதாகவே இருக்கிறது. இதுதவிர தனிநபர் கடன், திருமணம், கல்வி, சுற்றுலா, மருத்துவச் செலவு என அனைத்து வகைகளிலும் கடனை வாங்குவது அதிகரித்துள்ளது. கூடவே வீட்டு உபயோகப்பொருட்கள் கடன், கிரெடிட் கார்டு கடனும் சேர்ந்து கொள்கிறது. ஆக கடனில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாது என்பதுதான் உண்மை. ஒரு சராசரி குடும்பம் ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கியே ஆகவேண்டும்.
தனது மற்றும் குடும்ப உறுப்பினர்களது பராமரிப்பு முதலிய செலவுகளுக்கு ஒருவரின் வருமானம் போதவில்லை என்றால் கடன் வாங்குவது என்பது சமுதாயத்தில் அனைவருடைய பழக்கமாகவும் இருக்கிறது.
“வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுக்கும்”
என்கின்ற வேதாத்திரி மகரிஷியின் வாசகத்தை நினைவு கொள்ள வேண்டும். கடன் என்பது தவிர்க்க முடியாத காலத்தில் தான் வாங்கலாம். எளிதாகக் கிடைக்கின்ற காரணத்தாலம், கடன் வாங்கிச் செலவு செய்து ஏற்பட்டுவிட்ட பழக்கத்தாலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பதென்பது ஒருவர் வாழ்வில் பலவிதத்திலும் ஏமாற்றத்தையும் அமைதியின்மையையும் உண்டு பண்ணும்.திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஆதாரம் தீர்க்கமாக இருப்பவர்கள் வேண்டுமானால் எச்சரிக்கை உணர்வோ கடன் வாங்கலாம்.
சொத்து இருக்கிறது என்னும் தைரியத்தில் - அந்தச் சொத்திலிருந்து வருகின்ற வருமானத்தைக் கொண்டு கடனை அடைத்து விடலாம் என்னும் தைரியத்தில் - கடன் வாங்கலாம். அவ்வாறு வாங்குகின்ற கடனைக் கொண்டு வாழ்க்கைச் செலவுகளில் ஈடுபடும் போது ஆடம்பரம் காட்டக் கூடாது.
சிக்கனத்திலும், படுசிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும். கடனையும் அதற்குண்டான வட்டியையும் காலக்கிரமத்தில் திருப்பிக் கொடுத்துவிடும் விதமாகக் கூடுதல் வருமானத்தை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும். இல்லையேல் பொத்தல் உள்ள பாத்திரத்தில் நீர் சேமித்தது மாதிரி மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்.
மன அமைதிக்கு ஈகை
வருமானத்தில் திறமையாக சேமிப்பு செய்து முதலில் வட்டியையும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கடனையும் சீக்கரமாகக் கட்டிவிட்டு, கடனிலிருந்து விடுதலை பெற்றுவிட வேண்டும்.
முடியாத பட்சத்தில் இருக்கின்ற சொத்தில் ஒரு பகுதியை விற்று, மொத்த கடனையும் வட்டியையும் செலுத்திவிட வேண்டும். இது இலகுவில் நடக்கக் கூடியது. ஒருவருடைய சொத்தின் மொத்த மதிப்பில் பத்தில் ஒரு பங்குக்கு மேல் யாரும் கடன் வாங்கக் கூடாது. மன அமைதியோடு வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் அடைய, வேண்டுமென்றால் மனவளக்கலைஞர்கள் ஈகை புரிவது மற்றும், கடனைத் தவிர்ப்பது ஆகியவற்றில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தினமும் தவறாமல் இயற்றுகின்ற தவமும் அப்போதைக்கப்போது செய்கின்ற தற்சோதனையும் இதற்கெல்லாம் உறுதுணையாக இருக்கும்.
ஈகைக்கென ஒதுக்க வேண்டியது 1%
சமுதாயம் அங்கீகரிக்கக் கூடியதும், சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியதுமான ஒரு தொழிலைச் செய்து ஒவ்வொருவரும் பொருள் ஈட்ட வேண்டும். அவ்வாறு ஈட்டிய பொருளில் தானும், தன்னைச் சார்ந்திருக்கும் குடும்பத்தவருமாகக் கூடித் துய்க்க வேண்டும். அவ்வாறு துய்க்கின்ற போது கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி, அதனைப் பிறருக்கு கொடுக்கவும் வேண்டும்.
அவ்வாறு கொடுப்பதிலும் கூட ஈகையை ஏற்பவர்களுக்கு – தற்போதும் - பிற்பாடும் நன்மையே விளைகின்ற வகையில் ஈகை புரிய வேண்டும். இதெல்லாம் இந்தச் சமுதாயத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருப்பவர் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
ஒவ்வொருவரும் தனது வருமானத்தில் குறைந்தபட்சம் நூற்றில் ஒரு பங்கையாவது ஒதுக்கித் தன்னலமற்ற ஈகை புரிய வேண்டும். இவ்வாறு பிறருக்கு உதவுவது சமுதாயத்தில் அறம் வளரவும் அன்பு தழைக்கவும் ஏற்ற நற்செயலாகும். இவ்வாறு வெற்றியோடும், மகிழ்ச்சியோடும் மனவளக்கலைஞர்கள் வாழ்ந்து காட்டினால், மற்றவர்களுக்கு மனவளக்கலையின் மீது ஓர் ஈர்ப்பு கிடைக்கும். அனைவரும் மனவளக்கலையில் ஈடுபட்டு வாழ்வின் நோக்கமாகிய பிறவிப் பயனை எய்துவர். வாழ்க வளமுடன்!
PHONE: +91 7904402887 / 04253-292746