வெற்றிக்கான வழி பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்!!

ஆன்மீக வாழ்வு என்பது இறை வழிபாடும், உயிர் வழிபாடும் இணைந்த ஒரு தொகுப்பு நெறி. இயற்கை நியதிகளை உணர்ந்து கொள்வது, அவற்றை மதித்து வாழ்வது இவை இரண்டும் சேர்ந்தால், அதுதான் இறைவழிபாடு. இதனை இறைவணக்கம் என்றும் சொல்வார்கள். இயற்கையையே இறைவன் என்பார்கள். அந்த இறைவனோடு ஒன்றி நிற்கக்கூடிய அறிவின் நிலையே இறைவழிபாடு.

‘இந்த உலகத்தில் பல கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் நான் அநேக நன்மைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பதிலாக நான் என்ன நன்மையை அவர்களுக்குச் செய்ய முடியும்? அத்தகு ஆற்றல் என்னிடம் என்ன இருக்கிறது?’ என்று கணித்துக் கொண்டு செயல்புரியத் தொடங்கி விட்டால் அதுதான் உயிர் வழிபாடு. உள்ளதை வைத்துக் கொண்டு செயல்புரியத் துவங்கும் போது தான் ஒவ்வொரு செயலும் திறமையாக இருக்கும். அறிவும் நேர்மையாக இருக்கும். அப்படியில்லாது, ஏதோ ஒரு கற்பனையில் மிதக்கிற போது அவ்வாறான செயல்பாட்டில் துன்பங்கள் தான் வரும். தோல்விதான் ஏற்படும்.

தோல்வியோ, துன்பங்களோ இல்லாமல் வாழ வேண்டுமானால், பிறர் உள்ளம் அறிந்து பிறர் சுதந்திரம் காத்து, நடந்து கொள்ள வேண்டும். இதுதான் உயிர் வழிபாடு. அத்தகு வாழ்க்கை முறையை அறவாழ்வு என்றும், அறநெறி என்றும், அறிஞர்கள் கூறுவார்கள். அறமானது ஒழுக்கம், கடமை, ஈகை என்பவையாக மூன்று உறுப்புகளை உடையது. 

துன்பம் தருகின்ற செயல்களைத் தவிர்த்து விழிப்புணர்வோடு வாழ்வதே ஒழுக்கம் ஆகும். துன்பப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய உயிருக்கு என்னிடம் இருக்கக்கூடிய மிகுதியானவற்றைக் கொண்டு யாருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று எப்பொழுதும் அதற்குத் தயாராக இருந்து, உதவிக் கொண்டே இருப்பது ஈகை. இங்கே தான் அளவற்ற செல்வம் உடையவர்களாக ஒவ்வொருவரும் இருக்கின்ற மனநிலை ஏற்படும்.

எல்லாம் இருந்தும் இன்னும், ‘அது வேண்டும். இது வேண்டும்’ என்கிற போது, வறுமை உணர்வு தான், பிச்சைக்கார நிலை தான் மிஞ்சும். இருப்பை, இருக்கக் கூடிய செல்வத்தை, வைத்துக் கொண்டு, ‘இதைக் கொண்டு நான் யார் யாருக்கு என்னென்ன நன்மை செய்ய முடியும்?’ என்று சிந்திக்கின்ற மனநிலை தான் உண்மையான செல்வம். இதுதான் உபரிநிலை (Surplus State). முன்னது பற்றாக்குறை (Deficit State).

இல்லாமை என்பது ஒருபோதும் மனதில் வராமல் இருக்க வேண்டுமானால், காரணங்களையும் விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொருவரும் எந்தெந்த வகையிலே உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் என்கின்ற ஏழு பேறுகள் எல்லாம் உண்டாகும் என்று கணித்து, எந்தெந்தக் காரணங்களால், எந்தெந்த அளவில் மற்றவர்கள் இருக்கின்றார்கள் என்றும் தெரிந்து கொண்ட பிறகு, நமக்கு என்ன வேண்டுமோ அதற்கான முறையில் செயலாற்றி அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வேறுபாட்டைத் தருகின்ற கருவமைப்பு என்கின்ற காரணத்தை முழுவதுமாக மாற்றிவிட முடியாது. அது அவரவர்களுடைய பெற்றோர்களின் மூலமாக, பல தலைமுறைகளாக வந்தது ஆகும். நம்முடைய இன்றையச் செயல் நமது குழந்தைகளுக்குக் கருவமைப்பாக மாறுகின்றது. அதைச் சஞ்சித கர்மம் என்கிறோம். ஆகவே இன்று நீங்கள் செய்யக் கூடிய நன்மையின் மூலம் பழைய இருப்பில் இருந்து வரக்கூடியதற்கு ஒரு மாற்றம் கொடுக்கக் கூடிய அளவுக்கு உங்கள் ஒவ்வொருவரிடமும் சக்தி இருக்கிறது. அடியோடு மாற்றிவிட முடியாது என்பது உண்மை தான் என்றாலும் அதில் ஒரு பகுதியையாவது மாற்றலாம்.

ஆனால் காலத்தினை மாற்றிக் கொள்ள முடியுமா? முடியாது. நாம் இந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இந்தக் காலத்தினால் நமக்கு ஏற்படக் கூடிய வேறுபாட்டை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அத்தகு வேறுபாடு முற்காலத்தினருடையதை விடச் சிறந்ததாக இருந்தால் சந்தோஷந்தான். குறைபாடாக இருந்து விட்டால், நம் மனதைத்தான் சரிபடுத்தி நிலைமையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் தெரிவித்துள்ளார். வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை குண்டலினி யோகத்தில் இறையுணர்வும் அறநெறியும் இணைந்த ஆன்மீக கல்வி அளிக்கப்படுகிறது.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746