சித்தர் மற்றும் துறவி பற்றி விரிவாக பார்க்கலாம்- வேதாதிரியம்

கருமையத்தில் எல்லாப் பதிவுகளும் சுருங்கி இருக்கிறது. மனதின் சுழலலையைக் குவிக்கும் போது, அது Adjust ஆகிறது. அந்த நிலைக்கு Adjust ஆகும் போது, தானாகவே அந்த Attunement வரும் போது, முன்னொரு காலத்தில் என்ன என்ன நடந்ததோ அதெல்லாம் அப்படியே மூளையில் வந்து எண்ணங்களாக மலர்கின்றன. எண்ணங்கள் ஏதோ புதிதாக வருவன அல்ல.

ஏற்கனவே மூளையினுடைய செல்களில் மூளை தான் உள்ளே பதிவுகளை அனுப்பி வைத்தது. அவற்றைத்தான் இப்போது அதே மூளை எடுத்துக் கொடுக்கிறது. நாம் சில எண்ணங்களை இவை வேண்டாம் என்று நினைக்கிறோம். அவை தேவையில்லை என்று நினைக்கிறோம். ஆனால் அவை வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை மாற்ற முடியவில்லை. அவற்றை மாற்றி நல்லனவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு தேவையில்லாதவற்றை கழிக்க வேண்டுமானால், மூளைச் செல் பதிவுகளை மாற்றியமைத்தால் தான் முடியுமே தவிர வேறு வழியில்லை. அதற்கு உதவுவது துரிய தவம்.

மூளையில் மனதை வைத்துத் துரிய நிலைத் தவம் செய்யச் செய்ய, அங்கே போதிய அளவு ஜீவகாந்த சக்தியின் அழுத்தம் ஏற்படுகின்ற போது, எவ்வளவு காலத்தினுடைய பதிவாக இருந்தாலும் அவற்றை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

அதனால்தான் தவம் செய்பவர்களை முற்காலத்தில் யோகிகள் என்று சொன்னார்கள். மனதினுடைய அலை நிலையைக் குறைத்துக் கொண்டே வருவதைத் தான் யோகம் என்றும், துரியம் என்றும் சொன்னார்கள். அதே கருத்தை நம் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவராகிய திருமூலர், 

                        “தன்னையறிந்த தத்துவ ஞானிகள் 

                         முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் 

                         பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள் 

                         சென்னியில் வைத்த சிவனருளாலே” என்று பாடியிருக்கிறார்.

சந்தேகமே இல்லாது, அகத்தது தெய்வம் என, அந்த விண் மையத்திலேயே உறைந்தது இறைநிலை இன்னது என உணர்ந்த பிறகு, அது தான் அறிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும், உணர்ந்தவனைத் தெய்வமாகப் போற்றிடலாம் என்று வள்ளுவர் சொல்கிறார். அதனால் தெய்வம் என்பது உணர்வு. அந்த யோக நிலையைத் தாண்டி, யோகத்தினால் பெற்ற பயன் தெய்வநிலை உணர்வு. ஆக, தெய்வ நிலை உணர்ந்தவர்களை ஞானியர்கள் என்றும், அதை உணர்வதற்காகப் பயிற்சி செய்பவர்களைச் சித்தர்கள் என்றும் சொல்ல வேண்டும்.

‘சித்து என்றால் ஊரை ஏமாற்றும் வேலை. அதை நாம் செய்யவில்லையே!’ என்று நினைக்கிறோம். உலகத்தில் எந்தச் சித்தும் ஊரை ஏமாற்றுவது தான். மனிதனை மனிதன் ஏமாற்றும் கைத்திறன் அது. அவ்வளவு தானே தவிர அதையெல்லாம் சித்து என்று எடுக்க வேண்டாம்.

ஒரு கோதுமையை நிலத்தில் போடுகிறோம். அது நூறாக விளைகிறது. இதை மனிதன் செய்ய முடியும் என்றால் அது சித்து தான். ஆனால் மனிதனால் ஒரு கோதுமையைச் செய்ய முடியுமா? விதையில்லாமல் யாராவது ஒரு கோதுமை மணியைச் செய்து விட்டால் அதைச் சித்து என்று ஒப்புக் கொள்ளலாம். இயற்கையில் நடப்பது எல்லாம் சித்து தான். ஏமாற்று வித்தைகளையெல்லாம், ஒன்றை மற்றொன்றாகக் காண்பித்து பணம் பறிப்பதையெல்லாம் சித்து என்று ஒப்புக் கொள்ளக்கூடாது. ஆனால், சித்து என்ற விண் என்பது உயிர். உயிர்தான் சித்து. சித்து என்றால் உயிர். உயிருணர்வு பெற்றவர்களெல்லாம் சித்தர்கள் தான்.

ஏதோ வீட்டினை விட்டுப் போனால் துறவு, பணத்தாசையை விட்டு விட்டால் துறவு என்று நினைக்கிறோம். அதெல்லாம் துறவல்ல. பழைய பிடிப்பிலிருந்து உண்மையை உணர்ந்து மனம் விலகி நின்றால், அதுதான் துறவு. அனைவரும் அந்நிலையை யோசித்துப் பாருங்கள். பசி வந்தால் மனம் சோற்றை நினைக்கிறது. யார் தருவார்கள்? கொடுத்தால் பார்க்கிறோம். இல்லையானால் கேட்கிறோம். கொடுத்தால் விருந்து. கேட்டால் பிச்சை. எங்கே இருக்கிறது துறவு? முன்பு எந்த உலகத்தின் மீது நின்றாரோ, அதே உலகத்தின் மீது தான் துறவியும் நிற்கிறார்;. மண்ணைத் துறந்து விட்டு, விண்ணலா நிற்கிறார்;, நடக்கிறார்;? யாரால் மண்ணைத் துறக்க முடியும்? எனவே, துறவு என்று சொல்வதெல்லாம் போலியானதாகும். இந்த நடைமுறை சாத்தியமில்லாத துறவு தத்துவத்திற்கு வரவேற்பும், மதிப்பும் சித்தர்கள் பிறந்த இந்த மண்ணில் கிடைத்தது அதிசயமே.

மனதில் பழைய பதிவுகளிலிருந்து தேவையுள்ளதை வைத்துக் கொண்டு தேவையில்லாததைக் கழித்து பெற்றுக் கொள்ளக் கூடிய தூய்மையான மனதைப் பற்றி எல்லாப் பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உலகத்தில் இந்த உண்மையை உணர்ந்து நல்லது செய்தால் இறை வழிபாடு. இறைவன் உண்மை. எது மெய்ப்பொருளோ அதுதான் உண்மை. அந்த உண்மையை உணர்ந்த பிறகு அந்த உண்மைப் பொருள் எல்லா ஜீவன்களுக்குள்ளாகவும், அறிவாகவும் இருக்கிறது என்பதால், அவர்களுடைய மனம் நோகாது, அவர்கள் துன்பப்படாத முறையில், எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதை அறநெறி என்று சொல்கிறோம். ஆன்மீகத்தில் தவம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அறநெறி.

SKY YOGA Online

Vethathiri Maharishi's SKY Yoga is spread across 20 countries and has transformed over 6 million lives.
SKY is the perfect blend of Yoga, Kundalini Meditation, Intense and Practical Introspection practices that empower to lead a meaningful and fulfilled life.

PHONE: +91 7904402887 / 04253-292746